பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
நான்கு தலைமுறை கலைஞர்களுக்கு ஏறத்தாழ 15,000 பாடல்களுக்கும் மேல் எழுதி, நாளும் வாலிபக் கவியாகவே வாழ்ந்து மறைந்த கவிஞர் வாலியை ஒரு தலைசிறந்த பாடலாசிரியராக கலையுலகிற்கு அடையாளம் காட்டிய திரைப்படம் தான் “கற்பகம்”.
இந்தப் படத்திற்கு பாடல் எழுதுவதற்கு முன் ஒரு சில படங்களுக்கு பாடல்கள் எழுதியிருந்தாலும், பெரிதாக ஒன்றும் வாய்ப்புகள் அவரைத் தேடி வராத சூழலில், மதுரையில் டி.வி.எஸ் கம்பெனியில் உயர் பொறுப்பில் பணிபுரிந்து வந்த இவரது நண்பரான கணேசன், கவிஞர் வாலிக்கு அங்கு நல்ல வேலை வாங்கித் தருவதாக கூறி அழைப்பு விடுக்க, அதனை ஏற்று புறப்படவும் தயாரானார் வாலி.
அப்போது அவர் தங்கியிருந்த அறைக்கு தற்செயலாக வந்தார் அவரது நண்பரும், பின்னணிப் பாடகருமான பிபி ஸ்ரீநிவாஸ். வாலி, தான் மதுரைக்கு செல்லப் போகும் விபரம் ஏதும் அவரிடம் கூறாமல், தற்போது புதிதாக என்ன பாடல் பாடினீர்கள் என அவரிடம் கேட்க, “சுமை தாங்கி” படத்திற்காக “மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா” என்ற பாடலை பாடிய விபரத்தை பிபி ஸ்ரீநிவாஸ் அவரிடம் கூற, பாடலை கேட்ட வாலி, மதுரை செல்லும் எண்ணத்தை முற்றிலும் கைவிட்டு, கலையுலகில் முயன்று வெற்றி பெற முடிவெடுத்தார்.
அதன்பிறகு பிரபல திரைப்பட கதாசிரியரான மா ரா என்ற மா ராமச்சந்திரன் மூலம் இயக்குநர் முக்தா சீனிவாசனின் அறிமுகம் கிடைத்து, அவர் அப்போது தயாரித்து, இயக்கி வந்த “இதயத்தில் நீ” என்ற திரைப்படத்திற்காக பாடல் எழுத, வாலியை இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனிடம் அறிமுகம் செய்து வைக்க, தான் எழுதி வந்த பாடலின் பல்லவியான “பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா, பொன்மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா… பாமாலை பாடவா…” என்பதை வாலி அவரிடம் காட்ட, அசந்துபோன எம் எஸ் விஸ்வநாதன், பாடலின் சரணம் நான் தரப்போகும் சந்தத்திற்குத்தான் நீங்கள் எழுத வேண்டும் எனக் கூறி, அவர் ஹார்மோனியப் பெட்டியில் விரல் வைத்து வாசித்து முடிப்பதற்குள் சரணத்தை எழுதி தந்து விட்டார் வாலி.
பிரமித்துப் போன எம்எஸ் விஸ்வநாதன், அடுத்த பாடலையும் இவரே எழுதட்டும் என முக்தாசீனிவாசனிடம் கூறியதோடு நில்லாமல், சரவணா பிக்சர்ஸ் அதிபர் ஜிஎன் வேலுமணி, ஏ பீம்சிங், கே.எஸ் கோபாலகிருஷ்ணன் என அப்போது அவர் இசையமைத்து வந்த அத்தனை படக்கம்பெனி மற்றும் இயக்குனர்களிடம் வாலியை பரிந்துரைத்தும் வந்தார்.
“எம்.எஸ் விஸ்வநாதனை சந்திப்பதற்கு முன் எனக்கு சோற்றுக்கே வழியில்லை, அவரை சந்தித்த பின் எனக்கு சோறு சாப்பிட நேரமே இல்லை” என எம்.எஸ் விஸ்வநாதனை நினைவு கூறும் ஒவ்வொரு தருணமும், அவர் மீது வைத்திருந்த மரியாதையையும், நன்றி உணர்வையும் காட்டத் தவறியதே இல்லை வாலி. இந்த காலகட்டங்களில்தான் 1963ம் ஆண்டு தீபாவளித் திருநாளில் வெளிவந்த “கற்பகம்” திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதும் வாய்ப்பு வாலிக்கு அமைந்தது.
அன்னையைப் போல் தாலாட்டுப் பாடி குழந்தையை உறங்க வைக்க அத்தை பாடும் பாடலான “அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா”, திருமணமான நாயகியின் அறையில் அவளது தோழி பாடும் முதலிரவுப் பாடலான “ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதலிரவு”, இறந்த மனைவியின் நினைவாக வாழும் கணவனை தேற்ற அவளே ஆவியாக வந்து பாடும் பாடலான “மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா”, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தன் வருங்கால கணவன் குறித்து பாடும் பாடலான “பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையிலே படம் புடிச்சான்” என ஒவ்வொரு பாடலும் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசைவார்ப்பில், வாலியின் காவிய மயமான வரிகளில் வந்து பெரும் வெற்றி பெற்றன.
“கற்பகம்” திரைப்படம் வெளியான அதே தீபாவளி நாளன்றுதான் எம்ஜிஆரின் “பரிசு” திரைப்படமும், சிவாஜியின் “அன்னை இல்லம்” திரைப்படமும் வெளிவந்தன. புதியவர்களான வாலி மற்றும் கேஆர் விஜயாவுடன் இணைந்து விஸ்வநாதன் ராமமூர்த்தியும், கே.எஸ் கோபாலகிருஷ்ணனும் களம் கண்ட திரைப்படம்தான் “கற்பகம்”. எம்ஜிஆர், சிவாஜி என்ற இந்த இருபெரும் ஜாம்பவான்களின் படங்களோடு போட்டியிட்டு மாபெரும் வெற்றியை பெற்றது “கற்பகம்” திரைப்படம். ஒரே இரவில் உச்ச நட்சத்திர கவிஞராக பார்க்கப்பட்டார் காவியக் கவிஞர் வாலி.