ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் தெலுங்கு ‛பேபி' | லோகேஷ் கனகராஜ் அந்த விஷயத்தில் தலையிடுவதில்லை : சிலாகிக்கும் நாகார்ஜுனா | இன்னும் ஏழே நாளில் படப்பிடிப்பு முடிகிறது: 'புஷ்பா 2' விழாவில் தயாரிப்பாளர் கொடுத்த 'குட் பேட் அக்லி' அப்டேட் | ராம் சரண் 16வது பட படப்பிடிப்பு மைசூரில் துவக்கம் | அல்லு அர்ஜுனிடம் இயக்குனர் நெல்சன் வைத்த கோரிக்கை | ரிஷப் ஷெட்டியின் இரண்டாவது தெலுங்கு படம்! | பெண்கள் பாதுகாப்பு - விஜய் வெளியிட்ட அறிக்கை | பேபி ஜான் - கவர்ச்சி புயலாக உருவெடுத்த கீர்த்தி சுரேஷ் | சீனாவில் மஹாராஜா ரிலீஸ் : முன்பதிவு எப்படி | காதல் படங்கள் குறைந்து விட்டது : கார்த்தி வருத்தம் |
பழம் பெரும் நடிகர் நாகேஷின பிறந்த நாள் நேற்று. நாகேஷ் குறித்து பலரும் மலரும் நினைவுகள் வெளியிட்டிருந்தார்கள். நாகேஷின் நெருங்கிய நண்பரான கமல்ஹாசன் நாகேசுக்கு சிலை வைக்க வேண்டும், அவர் பெயரில் விருது ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நகைச்சுவை நடிப்பில் தனக்கென தனி முத்திரையைப் பதித்த நாகேஷ் இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர்களில் ஒருவர். 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து தமிழர்களை மகிழ்வித்தவர். இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ், தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்றெல்லாம் அவரது நடிப்பு புகழப்பட்டது.
1958ல் மனமுள்ள மறுதாரம் படத்தில் அறிமுகமாகி 2008ல் தசாவதாரம் வரை மிகச்சரியாக அரை நூற்றாண்டுகள் நீடித்தது அவரது கலைப் பயணம். எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்வதோ, விருதுகள், அங்கீகாரங்களுக்கோ ஆள் பிடிப்பதோ நாகேஷின் இயல்பல்ல. அதன் பொருட்டே வாழும்போதும் வாழ்ந்த பிறகும் புறக்கணிக்கப்பட்ட மகா கலைஞன் அவர்.
1974ல் தமிழக அரசு அளித்த கலைமாமணி விருது, 1994ல் நம்மவர் திரைப்படத்திற்காக மத்திய, மாநில அரசுகளின் சிறந்த துணை நடிகர் விருது ஆகியவைதான் அவரது கலை வாழ்வில் கிடைத்த சிறு அங்கீகாரங்கள். என்னைப் பொறுத்தவரையில் சினிமாவின் எந்த உயரிய விருதுக்கும் தகுதியானவர் நாகேஷ்.
அவர் பிரான்ஸிலோ, அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ பிறந்திருந்தால் பெற்றிருந்திருக்கக் கூடிய கவுரவம் என்னவாக இருந்திருக்கும் என்பதை ஊகித்துப் பார்க்கிறேன். அவர் மறைந்து 12 ஆண்டுகள் ஆன பிறகும் கூட அவர் மீதான அரசின் புறக்கணிப்பு தொடர்வது ஒரு சக கலைஞனாக எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
இந்த மகத்தான நடிகரின் கலைப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் சென்னையில் ஒரு சாலைக்கு அவரது பெயரைச் சூட்டுவதும், அவரது பெயரில் ஒரு விருதினைத் தோற்றுவிப்பதும், எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன வளாகத்திற்குள் அவரது சிலையை அமைப்பதும் குறைந்தபட்ச அங்கீகாரங்களாக அமையும். கலைஞர்களைப் போற்றுவதும் நல்லரசின் கடமை என்பதை உணர்ந்து தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.