விஜய் கார் விவகாரத்தில் நடந்தது என்ன..?
16 ஜூலை, 2021 - 09:48 IST
பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு, நடிகர் விஜய் நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அத்துடன், விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து காரை இறக்குமதி செய்ய, எந்த விதிகளை பின்பற்ற வேண்டும்; விஜய் விவகாரத்தில், எங்கே தவறு நடந்திருக்கலாம் என்பது குறித்து, போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து சொகுசு கார்களை இறக்குமதி செய்ய, கடந்த காலங்களில், இந்தியாவில், டீலர்கள் இல்லை. ஆனால், தற்போது, பல மாநில தலைநகர்களிலும், வெளிநாட்டு கார் விற்பனை டீலர்கள் வந்து விட்டனர். இருந்தாலும், ஒரு சில வெளிநாட்டு கார்களுக்கு, இந்தியாவில் இப்போதும் டீலர்கள் இல்லை. அதுபோன்ற கார்களை, நேரடி இறக்குமதி செய்ய வேண்டும்.
வரி எப்படி மதிப்பிடப்படுகிறது
கார் இறக்குமதி செய்பவர்கள், சுங்க துறையினருக்கு, காரின் விலையில் 200 சதவீதம் ஜி.எஸ்.டி.,யுடன் கூடிய சுங்க வரி செலுத்த வேண்டும். அதன்பின், கார் விலை மற்றும் சுங்கவரி சேர்த்து, எவ்வளவு தொகை வருகிறதோ, அதில் 20 சதவீதம் நுழைவு வரி செலுத்த வேண்டும். நுழைவு வரி தொகையை, மாநில வணிக வரித்துறையிடம் செலுத்த வேண்டும் இந்த விபரங்களுடன் சென்று, மண்டல போக்குவரத்து அலுவலகத்தில், காரை பதிவு செய்ய வேண்டும். அப்போது, மோட்டார் வாகன வரி செலுத்த வேண்டும். காரின் விலை, சுங்க வரி, நுழைவு வரி எல்லாம் சேர்த்து எவ்வளவு வருகிறதோ, அது 10 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், அதில் 10 சதவீதம் செலுத்த வேண்டும். கூடுதலாக இருந்தால், மொத்த மதிப்பில் 15 சதவீதம் செலுத்த வேண்டும்.
ஜிஎஸ்டிக்கு பின் நுழைவு வரி இல்லைஇப்படி எல்லா வரிகளையும் செலுத்திய பிறகே, வாகனம் பதிவு செய்யப்பட்டு, பதிவு எண் கொடுக்கப்படும். அதன்பிறகே, சாலையில் வாகனத்தை இயக்க வேண்டும். இதில், ஏதாவது ஒரு வரியை செலுத்தாவிடிலும், வாகன பதிவு நடக்காது. வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும், செகண்ட்ஸ் எனப்படும், பயன்படுத்தப்பட்ட சொகுசு கார்களை வாங்க அனுமதி இருக்கிறது. ஆனால், குறிப்பிட்ட ரக கார்களை, இரண்டு ஆண்டுக்குள்ளும், சில ரக கார்களை மூன்று ஆண்டுக்குள்ளும் வாங்க முடியும்.
இப்படி கார்களுக்கு ஏற்ப, முதல் முறை விற்பனையான நாளில் இருந்து, இரண்டாவது நபர் வாங்கும் காலம் வரை கணக்கிட்டு, விதிகளின் படி இருந்தால் மட்டுமே, பயன்படுத்தப்பட்ட கார்களை இறக்குமதி செய்ய முடியும். இது தான், இந்தியாவில் 2017ல் ஜி.எஸ்.டி., வரிக்கு முன்பிருந்த நிலை. தற்போது, இறக்குமதி கார்களுக்கு சுங்க வரியும், மோட்டார் வாகன வரியும் செலுத்தினால் போதும்; நுழைவு வரி செலுத்த தேவையில்லை.
2012 என்பதால் கட்டாயம் வரிவிஜய் விவகாரத்தை பொறுத்தவரை, 2012ல் புதிய ரோல்ஸ் ராய்ஸ் கார் என்பதால், அதற்கு கட்டாயமாக சுங்க வரி, நுழைவு வரி, மோட்டார் வாகன வரி உள்ளிட்ட மூன்றையும் செலுத்தி தான் பதிவு செய்ய வேண்டும். பயன்படுத்தப்பட்ட கார் எனில், இறக்குமதி ஆனதும், துறைமுகம் இருக்கும் ஊரிலேயே, ஆர்.டி.ஓ.,விடம் பதிவு செய்ய வேண்டும். ஆனால், வெளி மாநிலம் அல்லது பிற நகரத்திற்கு எடுத்து சென்று, பதிவு செய்ய வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட காரின், ஆயுட்கால மோட்டார் வரியில், 2 சதவீதத்தை முன்கூட்டியே செலுத்தி, தற்காலிக பர்மிட் வாங்க வேண்டும்.
காரை வேறொரு ஊருக்கு எடுத்துச் சென்று, பதிவு செய்யும்போது 2 சதவீத தொகையை கழித்து, மீதமிருக்கும் தொகையை செலுத்தினால் போதும். தற்காலிக பர்மிட் 30 நாட்கள் செல்லும். அதற்குள் முறைப்படி பதிவு செய்ய வேண்டும். நாட்கள் கடந்தால், அதற்கும் அபராத தொகை உண்டு. அதோடு, செகண்ட்ஸ் கார்களை இறக்குமதி செய்யும் போது, இந்திய சாலைகளில் இயக்க கூடிய நிலையில் இருக்கிறதா என்பதை பரிசோதித்து, சான்றிதழ் பெற வேண்டும். அதற்கு பின்பே, இறக்குமதி வரியை சுங்க துறையினர் வசூலிப்பர். தகுதியானதாக இல்லை என்றால், திருப்பி அனுப்பப்படும்.
அரசு நினைத்தால் சலுகைஒரு காரை இறக்குமதி செய்ய வேண்டும் என்றால், இப்படி ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றன. நுழைவு வரியை குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தவில்லை என்றாலும், இறக்குமதியான நாளில் இருந்து, வரி செலுத்தும் காலம் வரையிலான காலத்துக்கு, அபராதம் விதிக்கவும், அரசுக்கு உரிமை இருக்கிறது. நுழைவு வரியை பொறுத்தவரை, சிலருக்கு சலுகைகளை வழங்கவும், தமிழக அரசுக்கு உரிமை உண்டு. பொது நலன் கருதி அரசு நினைத்தால், யாருக்கும் நுழைவு வரியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ரத்து செய்யலாம்.
அந்த விதிகளை பயன்படுத்தியே எனக்கும் நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கொடுங்கள் என, விஜய் கோரியிருக்க வேண்டும். அரசு நினைத்திருந்தால், அந்த சலுகையை வழங்கி இருக்கலாம். கொடுக்காத பட்சத்தில், அவர் நுழைவு வரியை செலுத்தி இருக்கலாம். இனி, நுழைவு வரி செலுத்தாத 9 ஆண்டுகளுக்கான அபராதத்தையும், அவர் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
புரியாத புதிர்நுழைவு வரி செலுத்தாமல், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த காலத்தில், ரோல்ஸ் ராய்ஸ் காரை விஜய் ஓட்டி இருப்பதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. சுங்க வரி, நுழைவு வரி செலுத்தாமல், இறக்குமதி செய்யப்பட்ட காரை, துறைமுகத்தில் இருந்து வெளியே எடுத்து வர வாய்ப்பில்லை. புதிய கார் என்பதால், தற்காலிக பர்மிட் பெறுவதற்கும் வாய்ப்பில்லை. அதோடு, பதிவு செய்திருக்கவும் முடியாது. பின் எப்படி, துறைமுகத்தில் இருந்து வெளியே கார் எடுத்துச் செல்லப்பட்டது? விஜயால், அந்த கார் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பது புரியாத புதிராக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பி.எம்.டபிள்யூ., சர்ச்சை!ரோல்ஸ் ராய்ஸ் கார் சர்ச்சை ஒருபுறம் இருக்க, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பி.எம்.டபிள்யூ., எக்ஸ் 5 ரக காருக்கும் நுழைவு வரியில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார். இந்த வழக்கை, 2019 ஜூன் 28ம் தேதி, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.