பிளாஷ்பேக்: போட்ட பாட்டையெல்லாம் ‛ஹிட்' ஆக்கிய டி.ஆர்.பாப்பா | எனக்கான வாய்ப்பை உருவாக்கவே தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன் : 'பேச்சி' தேவ் ராம்நாத் | 80களின் பிரபல நடிகை நியூயார்க்கில் கூட்டு பலாத்காரம்.. பிரியா பட பாணியில் காப்பாற்றப்பட்ட அதிசயம் ; இயக்குனர் அதிர்ச்சி தகவல் | சமந்தா ஆக்ஷனில் மிரட்டும் 'சிட்டாடல்' தொடர் நவம்பர் 7ல் வெளியாகிறது | கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஜெயில் டாஸ்க் ; பெண்கள் ஆணையம் புகாரின் பேரில் வீட்டிற்குள்ளே நுழைந்த நிஜ போலீஸ் | பிளாஷ்பேக் : ஒரே நேரத்தில் தயாரான இரண்டு 'பட்டினத்தார்' படம் | மீண்டும் சினிமா படப்பிடிப்பில் பவன் கல்யாண் | கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகரின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து | ரிஷப் ஷெட்டியுடன் மூகாம்பிகை கோவிலில் தரிசனம் செய்த ஜெயசூர்யா | ஹீரோவின் ஆதிக்கத்தால் தெலுங்கு படத்தில் இருந்து விலகினாரா ஸ்ருதிஹாசன்? |
சென்னை : பாடலாசிரியர் வைரமுத்து மீதான, 'மீ டூ' புகாரால், அவருக்கு அறிவிக்கப்பட்ட, ஓ.என்.வி., இலக்கிய விருது வாபஸ் பெறப்படலாம் என, தெரிகிறது. விருது வழங்கும் முடிவை, மறுபரிசீலனை செய்யப்போவதாக, ஓ.என்.வி., கலாசார அகாடமி முடிவு செய்துள்ளது.
கேரளாவில், பழம்பெரும் கவிஞர்களுள் ஒருவரான ஓ.என்.வி., குரூப், 2016ல் காலமானார். இவர், இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது பெற்றவர். இவரை கவுரவிக்கும் வகையில், 2017-ம் ஆண்டு, ஓ.என்.வி., இலக்கிய விருது அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதல், ஒவ்வொரு ஆண்டும், மூத்த கவிஞர்களுக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. விருது பெறுவோருக்கு, மூன்று லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படும்.
இந்த ஆண்டிற்கான விருது, தமிழ் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டது. உடன், 'ஓ.என்.வி., விருதை பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என, வைரமுத்து தன், 'டுவிட்டரில்' பதிவிட்டிருந்தார். முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, விருது பெறப்போவதாக கூறி, வாழ்த்தும் பெற்றார்.
இதற்கிடையில், 'மீ டூ' இயக்கம் வாயிலாக, வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்த பாடகி சின்மயி உள்ளிட்ட பல பெண்கள், அவருக்கு விருது வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'டுவிட்டர்' வாயிலாக பதிவுகளை வெளியிட்டனர். மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை பார்வதியும், வைரமுத்துக்கு விருது வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
பார்வதியின் டுவிட்டர் பதிவு
ஓ.என்.வி., ஐயா எங்கள் பெருமைக்குரியவர். ஒரு கவிஞர் மற்றும் பாடலாசிரியராக, அவருடைய பங்களிப்பை யாருடனும் ஒப்பிட முடியாது. அவரது சிறந்த பணியால், எங்களது இதயங்களும், மனங்களும் பயனடைந்துள்ளன. பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, அவரது பெயரில் விருது வழங்கப்படுவது, மிகுந்த அவமரியாதையாகும்.
இவ்வாறு, பார்வதி பதிவிட்டுள்ளார்.
சின்மயி டுவிட்டர் பதிவு
பாலியல் குற்றவாளியான ஒருவருக்கு ஓ.என்.வி., விருது வழங்கப்படுகிறது. நிச்சயம் ஓ.என்.வி பெருமைப்படுவார். இதுவரைக்கும் 17 பெண்கள் வைரமுத்து பற்றி புகார் கொடுத்துருக்காங்க. பல பெண்கள் கிட்ட பேசி இந்த அறிக்கை பதிவு பண்ணாங்க. இதையெல்லாம் மறுப்பது ஏன்? அவர் நடத்துற ஹாஸ்டலில் பெண்கள் தப்பிச்சு ஓடிடவேண்டிய நிலைமை வந்திருக்கு. எப்ப வேணும்னாலும் பெண்களின் அறைகளுக்குள் புகுந்து விடுவார்னு சொல்லிருக்காங்க. அதெல்லாம் மறைச்சுட்டு, சின்மயி மட்டும் தான் சொன்னாங்க, வேற யாருமே சொல்லலைன்னு ஏன் பொய் சொல்றாங்க? ஏன்னு கேள்வி கேக்க கூடாதோ? நான் என் குற்றக்காட்டுகளை முன்வைத்தப்போ பார்ப்பனர்களின் சதி, மோடியின் சதி, பப்ளிசிட்டி ஸ்டன்ட்னு , முற்பொற்கு, பெண்ணியவாதம் பேசும் அரசியல்வாதிகள் இஷ்டத்துக்கு பேசுனாங்க. கவிஞர் மேல அபாண்டமா பழி சுமத்த வெச்சாங்கன்னு கேவலமா பொய் சொன்னாங்க. தெரியாமத்தான் கேக்குறேன். இத்தனை பேர் இவருக்கு மட்டும் பொங்கும் கட்டாயம் என்ன? அவர் ஒரு பாடலாசிரியர் தானே? ஏன் இப்படி அடிச்சுக்குறீங்க? என குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர் அஞ்சலி மேனன்
மலையாள இயக்குனர் அஞ்சலி மேனன் கூறுகையில், ‛‛ஓ.என்.வி ஐயாவின் பெயர் மலையாளிகளுக்கு மிகுந்த மரியாதை அளிக்கிறது. அப்பப்பட்டவரின் பெயரில் வழங்கப்படும் விருதை, 17 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய ஒருவருக்கு வழங்க இருப்பது வருத்தமளிக்கிறது'' என தெரிவித்துள்ளார்.
மலையாள இயக்குனர் கீது மோகன் தாஸ் டுவிட்டர் பதிவு : எங்களின் மிகப்பெரிய இலக்கிய ஆளுமையின் பெயரில் வழங்கப்படும் விருது ஒரு பாலியல் குற்றவாளிக்கு செல்வதா என பதிவிட்டுள்ளார்.
நடிகை ரீமா கல்லிங்கல் டுவிட்டர் பதிவு : வைரமுத்து மீது 17 பெண்கள் பாலியல் புகார் கூறி உள்ளனர். அப்படிப்பட்ட ஒருவருக்கு ஓஎன்வி விருதா'' என பதிவிட்டுள்ளார்.
எழுத்தாளர் சாரு நிவேதிதா பதிவு
இந்த விருதுக்கு வைரமுத்துவைத் தேர்ந்தெடுத்ததால் பலரும் மலையாள விருதுக் கமிட்டியை விமர்சிக்கிறார்கள். மற்ற மொழிகளில் கொடுக்கப்பட்ட போதெல்லாம் ஞானபீடம் மிகத் தரமான ஆட்களுக்குத்தானே கொடுக்கப்பட்டது? தமிழ் என்று வருகிறபோது மட்டும் இப்படி ஒரு சறுக்கல் ஏற்படுகிறது என்றால் தவறு யார் மீது? இப்போது வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகள் இல்லாமல் இருந்திருந்தாலும் இப்படிப்பட்ட எதிர்ப்பு வந்திருந்தால் அதை நான் பாராட்டுவேன். தரமற்ற ஆட்களுக்கும், சினிமா ஆட்களுக்கும் இலக்கிய விருதுகள் போவதை நம் சமூகம் இன்னும் மூர்க்கமாக எதிர்க்க வேண்டும் என்பதே என் அக்கறை. பாலியல் புகார்கள் காரணமாக விருது கமிட்டி அதை மறு பரிசீலனை செய்யப் போகிறதாம். வைரமுத்து இலக்கியத்துக்கு சம்பந்தம் இல்லாத ஆள் என்பதை அவர்கள் எப்போதும் உணர மாட்டார்கள் போல் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
வாபஸ் ஆகிறது
இந்நிலையில், தேர்வுக்குழுவின் பரிந்துரையை ஏற்று, வைரமுத்துவுக்கு, ஓ.என்.வி., இலக்கிய விருது வழங்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக, ஓ.என்.வி., கலாசார அகாடமி நேற்று அறிவித்தது. அதனால், வைரமுத்துக்கு விருது அறிவிக்கப்பட்டது, வாபஸ் பெறப்படலாம் என, தெரிகிறது.
அடூர் கோபாலகிருஷ்ணன் விளக்கம்
ஓஎன்வி கலாச்சார மையத்தின் தலைவரும், மலையாள திரைப்பட இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் அளித்துள்ள ஒரு பேட்டியில், வைரமுத்து மீதுள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்து இந்த விருதினை அறிவித்த நடுவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். வைரமுத்து இலக்கியவாதி என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு அவருக்கு விருதினை வழங்க முடிவெடுத்திருப்பார்கள். ஆனால் தற்போது அவருக்கு ஓஎன்வி விருது வழங்க எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருவதால், இதுசம்பந்தமாக விரைவில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்த தகவலை நாங்கள் வைரமுத்துவிற்கும்தெரிவித்து விட்டோம் என்று தெரிவித்துள்ளார்.