ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
நடிகரும், இயக்குனருமான தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் கொரோனா என்கிற பேச்சே எங்கும் இல்லை. யார் யாருடன் கூட்டணி? யார் யாருக்கு எத்தனை இடங்கள் என்பதிலேயே கட்சிகள் ஆர்வமாக இருந்தன. ஒரு அரசியல் கட்சி கூட தேர்தலை தள்ளி வைக்கலாம் என்று கூறவில்லை.
புதிய ஆட்சியை உருவாக்குவதிலேயே அனைவரும் குறியாய் இருந்தனர். தேர்தலுக்கான நாள் குறித்தவுடனே கட்சிகள் பரப்புரையில் ஈடுபட்டு கொரோனா சென்றடையாத ஊர்களுக்கும், கிராமத்துக்கும், ஒவ்வொரு தெருக்களுக்கும் பரவ வித்திட்டன. யாருக்கு அதிகப்படியானக் கூட்டம் வருகின்றது என்பதை காண்பித்து அதிக வாக்குகளைப் பெருவதிலேயே அனைத்து கட்சியினரும் போட்டிப்போட்டு கூட்டங்களை சேர்த்தனர். இடைவெளி இன்றி நடத்தப்படுகின்ற கூட்டத்தைக்கண்டு அரசியல் தலைவர்களும் வேட்பாளர்களும் புளகாங்கிதம் அடைந்தார்களேத் தவிர மக்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புக் குறித்து சிறிதும் அக்கறையில்லாமலேயே பரப்புரையை முடித்தனர்.
தேர்தல் பரப்புரை முடிய இரண்டு வாரங்கள் இருக்கும்போதே கொரோனா தொற்று தமிழகமெங்கும் பரவும் செய்திகள் மீண்டும் வெளிவரத் தொடங்கின. அப்போதுகூட ஒருவரும் கூட்டம் கூட்டுவதை நிறுத்திவிட்டு இணையவழியில் பரப்புரை மேற்கொள்ளலாமே எனக் கூறவில்லை.
தேர்தல் ஆணையம் ஏப்ரல் 6 ஆம் தேதி வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்தது. அதுவரை பாதுகாப்புடன் ஊர்திகளில் நின்று கொண்டு பரப்புரை செய்த தலைவர்களும், வேட்பாளர்களும் மறுநாளிலிருந்து முகக்கவசம் அணியும்படியும், கபசுரக்குடிநீர் குடிக்கும் படியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத் தொடங்கி விட்டனர்.
தேர்தல் முடிந்து நாற்பது நாட்கள் முடிந்த நிலையில் தமிழகத்தின் தற்போதைய நிலை இவர்கள் எவருமே எண்ணிப்பார்க்காத ஒன்று. நோயினால் இறந்து கொண்டிருக்கும் அப்பாவி குடி மக்களின் உடல்களை வைக்கக்கூட இடமில்லாமல் ஒன்றின் மீது ஒன்று அடுக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மருத்துவமனைகள் தேடி இரவும் பகலும் மக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடிக்கொண்டிருக்கின்றனர். அங்கேயும் உயிரைக்காக்கும் ஆக்சிஜன் காற்று கிடைக்காமல் செத்துக் கொண்டிருக்கின்றனர். ரெம்டெசிவிர் மருந்து கொரோனா நோயைக்கட்டுப்படுத்தாது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தப் பிறகும்கூட இன்னொரு பக்கம் நாள் கணக்கில் மருந்தை வாங்க இரவு பகலாக பசி பட்டினியுடன் காத்துக்கிடக்கின்றனர்.
மருத்துவ மனையில் இடம் கிடைக்காமல் மணிக்கணக்கில் காத்துக்கிடந்து பிணமாக ஊர்போய் சேர்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேயிருக்கின்றது. நகரத்தில் வாழ்பவர்களுக்குத் தெரியும். சாலைகளில் 24 மணி நேரமும் அவசர ஊர்திகளின் விண்ணைக்கிழிக்கும் ஓலங்கள் மட்டுமே கேட்கின்றன.
மருத்துவமனை நோக்கி அனைவரும் ஓடாதபடி தமிழகம் முழுக்க ஆங்காங்கே மக்கள் வசிக்கும் பகுதியிலேயே அரசு பொதுக் கட்டிடங்களில் மருத்துவ மையங்களை உடனடியாக உருவாக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரியிருந்தேன். இப்பொழுது அவ்வாறு உருவாக்க உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளது பெரும் ஆறுதலை அளிக்கின்றது.
காலம் தாழ்த்தாமல் உடனடியாக குறைந்தது அனைத்து பஞ்சாயத்துக்களிலும் இக்கல்வியில் தேர்ச்சி பெற்ற மறுத்துவர்களைக் கொண்டு இவைகளை உருவாக்க வேண்டும். நோயை உடனே கண்டறியும் பரிசோதனைக்கூடங்களும், நமது மரபுவழி சித்த மருத்துவம், ஆயுர்வேதம் மற்றும் ஹோமாபதி மருத்துவத்தையும் இம்மையங்களில் மேற்கொண்டாலே தொடக்க நிலையிலேயே முக்கால் பகுதி நோயாளிகளை குணப்படுத்திவிட முடியும். மக்கள் பணம் செலவழித்து ஊர் விட்டு ஊர் தாண்டி அலைக்கழிக்கப்படாமல் தொற்று பரவுவதிலிருந்தும் காப்பாற்றிவிட முடியும்.
உலகிலேயே அதிக பாதிப்புகளை சந்தித்த அமெரிக்க அரசு தொடர்ந்து இயங்கி நம்பிக்கையுடன் போராடி ஐந்து வயதுடையவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் முயற்சியில் இறங்கி விட்டது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் உலகின் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவாகப்போகின்றது. நாம் எப்பொழுது தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்படும் நிலைக்கு வருவோம். இனி ஒருவேளை அடுத்தடுத்து பெருந்தொற்றுக்கள் உருவானால் அவைகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ளப் போகிறோம் என்பதும் தெரியவில்லை. மாநில அரசுகள் மாத்திரமே நோயை எதிர்த்துப்போராடி மீண்டு விட முடியுமா? இம்மக்களுக்கு இதைக்காட்டிலுமா ஒரு பேரிடர் நேர்ந்து விடப்போகின்றது. இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பேரிடர் ஆணையம் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கின்றது? ஒரு வேளை செயல்பட்டுக்கொண்டிருந்தால் நாங்களும் இந்திய மக்கள்தான்! நாங்களும் மற்ற மாநிலங்களைபோல்தான் வரிப்பணம் செலுத்துகின்றோம்! எங்கள் மாநில அரசுக்கும் உடனே உதவுங்கள்.
தமிழகமெங்கும் படுக்கைகளையும் ஆக்சிஜன் படுக்கைகளையும் விரிவு படுத்துவதும், தமிழ்நாடு முழுமைக்கும் அந்தந்த பகுதிகளுக்கும் தனித்தனி அமைச்சர்களையும்,அதிகாரிகளையும் நியமித்து இரவு பகலாக பணிகள் மேற்கொள்ளப்படுவதும்,அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களடங்கிய குழுவை நியமித்துள்ளதும் மக்களுக்கு மேலும் நம்பிக்கையையும் நிம்மதியையும் ஏற்படுத்தியிருக்கின்றது. நோயை குணப்படுத்த மிக முக்கியமானது நம்பிக்கைதானே.... நம்புவோம்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.