ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி | சித்தார்த்-தின் மிஸ் யூ தள்ளிப்போனது | நண்பனை நினைத்து வருந்திய வைஷ்ணவி அருள்மொழி |
இன்றைய சினிமா செய்திகளில் அதிகம் இடம் பெறுபவராக ஷங்கர் இருக்கிறார். நேற்று தன்னுடைய அடுத்த ஹிந்திப் படம் பற்றிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் ஷங்கர். ஏற்கெனவே, தெலுங்கில் ராம் சரண் நடிக்க உள்ள புதிய படத்தை அவர் இயக்கப் போவதன் அறிவிப்பு கடந்த மாதம் வெளிவந்தது.
தமிழில் கமல்ஹாசன் நடிக்க அவர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தை முடிக்காமல் அவர் வேறு படங்களை இயக்கப் போவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தங்களது படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்கக் கூடாது என 'இந்தியன் 2' படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதனிடையே, 'இந்தியன் 2' படம் தொடர்பாக அதன் கதாநாயகனாக கமல்ஹாசன் இதுவரையிலும் எதுவும் சொல்லாமல் அமைதி காத்து வருவது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை அதிகரித்துள்ளது.
பொதுவாக, ஒரு பட உருவாக்கத்தின் போது தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் பிரச்சினை உருவானால் அதன் கதாநாயகன் சமரசம் செய்து வைப்பார். தயாரிப்பாளருக்கும், நடிகருக்கும் பிரச்சினை என்றால் இயக்குனர் சமரசம் செய்வதும், இயக்குனருக்கும், நடிகருக்கும் பிரச்சினை என்றால் தயாரிப்பாளர் சமரசம் செய்வதும் வழக்கம்தான்.
ஆனால், 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக 'இந்தியன் 2' படத்திற்காக செலவு செய்துள்ள தயாரிப்பாளருக்கு ஆதரவாகவோ, அல்லது எதன் காரணமாக இந்தப் படத்தை முடித்துக் கொடுக்க ஷங்கர் தயங்குகிறார் என்பது குறித்து அவரிடமோ கமல்ஹாசன் என்ன பேசியிருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
கடந்த வருடம் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் கிரேன் விபத்து நடந்து மூவர் உயிரிழந்த விவகாரத்திற்குப் பிறகு தயாரிப்பு நிறுவனமான லைகா, இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன் ஆகியோரிடையே சுமூக உறவு இல்லை என்று கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
ஏற்கெனவே, லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் 'சபாஷ் நாயுடு' என்ற படத்தை ஆரம்பித்து அமெரிக்காவில் அதன் படப்பிடிப்பை ஒரு கட்டம் நடத்தி பின் தனது முட்டி ஆபரேஷனைக் காரணம் காட்டி படத்தையே அப்படியே நிறுத்திவிட்டார் கமல்ஹாசன். அதன்பின் ஆரம்பிக்கப்பட்ட படம் தான் 'இந்தியன் 2'.
இவற்றோடு இரண்டு வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் அதற்கு முன்பே அறிவித்த 'தலைவன் இருக்கின்றான்' என்ற படத்தையும் தயாரிக்கப் போவதாக லைகா அறிவித்தது.
ஒட்டு மொத்தமாக லைகா தயாரிப்பில் கமல்ஹசான் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட “சபாஷ் நாயுடு, இந்தியன் 2, தலைவன் இருக்கின்றான்” ஆகிய மூன்று படங்களுமே திண்டாட்டத்தில் இருக்கின்றன. தான் சம்பந்தப்பட்ட படங்கள் இப்படி இருப்பது குறித்து கமல்ஹாசன் எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கிறாரா என திரையுலகில் கேள்வி எழுப்புகிறார்கள்.
லைகா நிறுவனம் பல சர்ச்சைகளுக்கு நடுவில்தான் தமிழ்த் திரையுலகத்தில் படங்களைத் தயாரிக்க முன் வந்தது. நல்ல கதைகளின் பக்கம் போகாமல் டாப் ஹீரோக்களின் பின்னால் போனதால் தான் அந்த நிறுவனம் இப்படி ஒரு நிலையை சந்தித்துள்ளதாக அனுபவம் வாய்ந்த திரையுலகினர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இதுநாள் வரை தேர்தல், பிரச்சாரம் என பிஸியாக இருந்தார் கமல்ஹாசன். தற்போது சட்டசபை தேர்தலும் முடிந்துவிட்டது. இனியாவது தன்னை நம்பி பல கோடி ரூபாய் முதலீட்டைச் செய்த தயாரிப்பு நிறுவனத்தை எந்த ஈகோவும் பார்க்காமல் கமல்ஹாசன் மீட்டுத் தருவாரா என்பதே இப்போது பலரது கேள்வியாக உள்ளது.