ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ் சினிமாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே படங்களின் ரிலீஸ் எண்ணிக்கை 200-ஐ தாண்டி போய் கொண்டிருக்கின்றன. வாரம் வாரம் 4 படங்களுக்கு குறைவில்லாமல் ரிலீஸாகின்றன. அத்திபூத்தாற் போல் எப்போதாவது ஒரு படம், இரண்டு படங்கள் ரிலீஸாகின்றன.
அந்தவகையில் இந்தவாரம் செப்., 22-ம் தேதி வெள்ளிக்கிழமை, ஒன்றல்ல, இரண்டல்ல... "ஆயிரத்தில் இருவா், நெறி, தெருநாய்கள், பிச்சுவாகத்தி, கொஞ்சம் கொஞ்சம், வல்லதேசம், போலீஸ் ராஜ்ஜியம், களவு தொழிற்சாலை, காக்கா, பயமா இருக்கு, நான் ஆணையிட்டால், கிங்ஸ் மேன், திட்டி வாசல்" என 11 படங்கள் ரிலீஸாகின்றன. இவை அனைத்தும் சின்ன பட்ஜெட் படங்கள் தான்.
இவற்றில் அனுஹாசன் நடித்த வல்லதேசம், சரண் இயக்கத்தில், வினய் நடிப்பில் உருவாகியுள்ள ஆயிரத்தில் இருவர், இனிகோ பிரபாகர் நடிப்பில் உருவாகியுள்ள பிச்சுவாகத்தி, ராணா நடிப்பில் உருவாகியுள்ள டப்பிங் படமான நான் ஆணையிட்டால், பிக்பாஸ் புகழ் ஓவியா நடித்த டப்பிங் படமான போலீஸ் ராஜ்ஜியம் போன்றவை தான் தெரிந்த முகங்கள் நடித்த படங்களாக உள்ளன. மற்றவை எல்லாம் புது நடிகர்களின் படங்கள்.
அடுத்தவாரம் ஆயுத பூஜை வருவதால், மகேஷ் பாபுவின் ஸ்பைடர், விஜய் சேதுபதியின் கருப்பன், கவுதம் கார்த்திக்கின் ஹர ஹர மஹாதேவகி, நயன்தாராவின் அறம் உள்ளிட்ட அரை டஜன் படங்கள் ரிலீஸாகின்றன. இவற்றுக்கு பெரும்பாலான தியேட்டர்கள் புக்காகி விடும் என்பதால், இந்த ஒரு வாரத்தை கருத்தில் கொண்டு கிடைத்த வசூலை பெறலாம் என்ற எண்ணத்தில் இந்த 11 படங்களும் ரிலீஸாகின்றன.
தமிழகத்தில் சுமார் 1100 தியேட்டர்கள் உள்ளன. இவற்றில் சமீபத்தில் வெளியான அஜித்தின் விவேகம், விக்ரம் பிரபுவின் நெருப்புடா, விஷ்ணு விஷாலின் கதாநாயகன், கடந்தவாரம் வெளியான விஷாலின் துப்பறிவாளன், ஜோதிகாவின் மகளிர்மட்டும் போன்ற படங்கள் இன்னும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதுதவிர ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மற்ற படங்கள் எல்லாமும் சேர்த்து சுமார் 600 தியேட்டர்களில் ஓடினால் கூட மீதம் இருப்பது என்னவோ 500 தியேட்டர்கள் தான். 500 தியேட்டர்களில் இந்த 11 படங்களில் ஒரு படத்திற்கு 50 தியேட்டர்கள் கிடைத்தால் கூட பெரிய விஷயம்.
ஏற்கனவே ரசிகர்கள் தியேட்டர்களில் சென்று படம் பார்ப்பதில்லை என்ற சூழல் நிலவுகிறது. அப்படிப்பட்ட சூழலில், இப்படி ஒரே நேரத்தில் 11 படங்கள் ரிலீஸானால் ரசிகர்கள் எந்த படத்தை பார்ப்பார்கள்.
இது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமான விஷயம் தானா...? சிறு பட்ஜெட் படங்களின் ரிலீஸை ஒழுங்குப்படுத்த தமிழ் திரையுலகம் முன் வருமா...? என்பதே சினிமா ரசிகனின் குரலாய் இருக்கிறது.