தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசை அமைப்பாளராக்கிய ஸ்ரீதர் |
தமிழ் சினிமாவின் மிக முக்கிய படங்களில் ஒன்று ‛முகமது பின் துக்ளக்'. அமரர் சோ அவர்களால் நாடகமாக நடத்தப்பட்டு வந்த கதை திரைப்படமானது, அவரே இயக்கி நடித்தார். நீலு, பீலி சிவம், மனோரமா, உஷா நந்தினி, அம்பி ராஜகோபால், சுகுமாரி உள்பட பலர் நடித்திருந்தார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். 1971ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் அக்கால அரசியலை கடுமையாக விமர்சித்தது. இதனால் கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் படத்திற்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். பல தடைகளை தாண்டித்தான் முகமது பின் துக்ளக் வெளிவந்தது. படம் சந்தித்த பிரச்சினைகள் பற்றி சோ கூறியது அவரது வார்த்தைகளில்...
எம்ஜிஆர் திமுகவில் இருந்தபோது, அவருக்குக் கீழ் மானேஜராக இருந்துகொண்டே, திமுகவை கிண்டல் செய்கிற ஒரு படத்தை துணிந்து எடுக்க முனைந்தவர் நாராயணன். 'பரந்தாமன்' என்கிற பெயரில் துக்ளக்கில் நிறைய எழுதி இருக்கிறார் அவர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனிடம் மேனேஜராக வேலை பார்த்தவர், அதற்குப் பிறகு தான் எம்ஜிஆரிடம் வந்தார். என்னிடம் அவருக்கு நல்ல பழக்கமுண்டு. அவரும், முரசொலியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மல்லிகார்ஜுனும் இணைந்து அப்போது நாடகமாக மிகவும் பிரபலமாக இருந்த 'முகமது பின் துக்ளக்'கை சினிமாவாக தயாரிக்க முடிவு செய்து இறங்கினார்கள். நான் தான் அந்தப்படத்தை இயக்கினேன்.
மிகவும் குறைந்த பட்ஜெட் படம். எங்களுடைய நாடகத்தில் நடித்தவர்களில் பலர் அதிலும் நடித்தார்கள். அதோடு மனோரமா போன்றவர்களும் அதில் நடித்தார்கள். திமுகவையும், காங்கிரசையும் விமர்சித்ததாக அதில் காட்சிகள் இருந்ததால், அந்த படத்தைத் துவக்கியதில் இருந்தே ஒரே பிரச்சினை தான். அதிலும், திமுகவுக்கு - 'முகமது பின் துக்ளக்' படப்பிடிப்பு சென்னையில் நடப்பதைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எப்படியாவது படத்தைத் தடுக்க என்னென்ன செய்ய முடியுமோ, அனைத்தையும் செய்தார்கள்.
ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு தொடங்கும்போதும் ஒரு பிரச்சினை காத்திருக்கும். எங்கிருந்தோ போன் அழைப்பு வரும். அந்த அழைப்பு வந்தவுடன் படத்தை ஒளிப்பதிவு செய்த கேமராமேன் காணாமல் போய் விடுவார். அப்புறம் அசிஸ்டெண்ட் கேமராமேனை வைத்து அன்றைய காட்சிகளை ஒரு வழியாக எடுத்து முடிப்போம். இப்படி 26 முறைக்கு மேல், கேமராமேன்கள் மிரட்டப்பட்டு, பலர் மாற்றப்பட்டும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது. அதில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு இதே மாதிரி மிரட்டல் போன்கள் வரும். குறிப்பிட்ட காட்சியில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் அதோடு நழுவி விடுவார்கள்.
நடிகை ஜி.சகுந்தலா நடித்துக்கொண்டிருந்தபோது அவருக்கும் போன் அழைப்பு வந்து விட்டது. தயாரிப்பாளரான நாராயணன் என்னிடம் வந்தார். “பாருங்க சார் - போன் வந்தாச்சு. இனிமேல் அவங்களும் கிளம்பிடுவாங்க. எப்படியாவது இன்னைக்கு அவங்க வர்ற சீன்களை எடுத்து முடிச்சுடுங்க சார்”. படப்பிடிப்பில் இருந்த சகுந்தலா போன் வந்ததும் உடனே என்னிடம் வந்து,“வீட்டில் அவசரமா வேலை இருக்கு சார். போகணும்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பப் பார்த்தார். நானும் பார்த்தேன். வேறு வழியில்லாமல், அவரை ஓரிடத்தில் வைத்து போனிலேயே பேசி நடிக்கிற மாதிரி குறிப்பிட்ட காட்சிகளை எடுத்து முடித்து, அவரை அனுப்பி விட்டேன். இப்படி பலருக்கும் நடந்தது.
கவிஞர் வாலி கூட அந்தப் படத்தில் பாடல் எழுதியதற்காக மிரட்டப்பட்டார். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை கூப்பிட்டு எம்ஜிஆர் மிரட்டிப் பார்த்தார். அவரும் மசியவில்லை. கெடுபிடிகளை எல்லாம் மீறி படத்திற்கு ஒத்துழைப்பு தந்தவர்களும் இருந்தார்கள். நாராயணன், படத்தில் நடித்த நாடக நடிகர்களுக்கு குறைவான சம்பளம் தான் பேசி இருந்தார். இருந்தாலும் படம் முடிந்தவுடன் அவர் எல்லாருக்கும் சின்சியராகக் கொடுத்தார்.
இப்படிப் பல தொந்தரவுகளை மீறி படம் முடிந்தாலும், சென்சாருக்கு படம் போனதும், அங்கும் படாதபாடு பட்டது. சென்சார் சர்டிபிகேட்டை அவ்வளவு லேசில் வாங்கிவிட முடியவில்லை. அப்போது 1971 தேர்தல் நேரம். அதற்குள் எப்படியாவது படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டுமென்று நினைத்தோம். ஆனால் படத்தில் இருந்த அரசியல் வசனங்களால், சில காட்சிகளால் - பல தடைகள். இந்திரா, கருணாநிதி - இருவருடைய தலையீடும் அதில் இருந்தது. நானும் பொறுத்துப் பார்த்தேன். தடைகள் முடியாமல் நீண்டுகொண்டே போனது. சென்னையில் ஒரு பொதுக்கூட்டம் போட்டேன் -பேசினேன். துக்ளக்கில் எழுதினேன். அப்போது பலரையும் சென்சார் கெடுபிடிகளைத் தளர்த்தச் சொல்லி தந்தி கொடுக்க கோரிக்கை விடுத்தேன். 10,000-க்கும் மேற்பட்ட தந்திகள் கொடுக்கப்பட்டன. சென்சார் போர்டில் இருந்தவர்களுக்கே அதிர்ச்சி. அதற்கு மேலும் தடையை நீடிப்பது சரியாக இருக்காது என்று முடிவு பண்ணி படத்தில் 22 இடங்களில் 'கட்' கொடுத்தார்கள். நானும் பார்த்தேன். தொடர்ந்து படத்தில் 'கட்'கூடாது என்று சண்டை போட்டுக்கொண்டே இருந்தால், படமே வெளிவராது. அதனால் கட்-களை ஏற்றுக்கொண்டு விட்டேன்.
முகமது பின் துக்ளக் படம் தியேட்டர்களில் வெளியாகி விட்டது. நல்ல வெற்றி. தியேட்டர்களில் படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது திமுக தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. முஸ்லிம்களைத் தூண்டி விட்டு படம் ஓடும் தியேட்டர்களில் போய் 'முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கிறது'என்று கலாட்டா செய்யச்சொன்னார்கள். படத்தில் முதல் பாட்டே 'அல்லா- அல்லாஞ்நீ இல்லாத இடமே இல்லை' என்று எம்.எஸ்.விஸ்வநாதன் பாடும் பாடலுடன் தான் ஆரம்பிக்கும். அந்த பாட்டை கேட்டதும், திமுக கலாட்டா பண்ண அனுப்பி வைத்த முஸ்லிம்கள் கைதட்டி ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள். இப்படி பல தடைகளை தாண்டித்தான் முகமது பின் துக்ளக் வெளிவந்தது. இவ்வாறு சோ கூறியுள்ளார்.