ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'பாட்ஷா' படம் வரும் வரை ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு பிரமாதமான ரஜினி படமாக இருந்தது 'அண்ணாமலை' படம். 1992ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்த 'அண்ணாமலை' படம் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்டது. இன்று இந்தப் படம் 25வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. ரஜினிகாந்துக்கே உரிய அற்புதமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா ரஜினிகாந்துடன் இணைந்து பணிபுரிந்த முதல் படம் இது.
1987ம் ஆண்டு ஹிந்தியில் ஜிதேந்திரா, சத்ருகன் சின்கா, பானுப்ரியா, அம்ரிதா சிங் மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'குத்கர்ஸ்' படத்தின் ரீமேக்தான் 'அண்ணாமலை'. ஆனால், ரீமேக் படம் எனத் தெரியாத அளவிற்கு நம்ம ஊர் படம் போலவே இந்தப் படத்தை அருமையாக இயக்கியிருந்தார் சுரேஷ் கிருஷ்ணா. முதலில் இந்தப் படத்தை பாலசந்தரின் உதவியாளரான வசந்த் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அவர் அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டு படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு சில நாள் முன்னர்தான் சுரேஷ் கிருஷ்ணா இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
ரஜினிகாந்த்துடன் நண்பராக சரத்பாபு, காதலியாக குஷ்பு, அம்மாவாக மனோரமா, சரத்பாபுவின் அப்பாவாக ராதாரவி, நகைச்சுவைக்கு ஜனகராஜ் என ஒவ்வொருவருமே படத்தில் சிறப்பாக நடித்திருந்தார்கள்.
ரஜினிகாந்த் நடித்த ஒரு படத்திற்கு தேவா இசையமைத்த முதல் படம் இதுதான். முதலில் தேவா சரியாக இசையமைப்பாரா என்ற ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால், படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார் தேவா.
“அண்ணாமலை..அண்ணாமலை..., கொண்டையில் தாழம்பூ..., ஒரு பெண் புறா..., றெக்கை கட்டி..., வந்தேன்டா பால்காரன்..., வெற்றி நிச்சயம்...” என அனைத்துப் பாடல்களையும் அற்புதமாகக் எழுதிக் கொடுத்தார் வைரமுத்து.
இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகுதான் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஹீரோக்களின் பட்டியலில் ரஜினிகாந்த் முதலிடத்தைப் பிடித்தார். 'பாட்ஷா' படத்தை எப்படி எத்தனை முறை வேண்டுமானாலும் ரசிகர்கள் பார்க்கிறார்களோ, அதற்கு அடுத்த இடத்தை 'அண்ணாமலை' படம் இன்று வரை பெற்றிருக்கிறது.