தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழ் திரையுலகில் கால் நூற்றாண்டு காலமாக பயணித்து, சொற்ப எண்ணிக்கையிலான திரைப்படங்களில் மட்டுமே நடித்து, தனது தேனினும் இனிய குரலாலும், வசீகரத் தோற்றத்தாலும், ரசிகப் பெருமக்களை தன்பால் ஈர்க்கச் செய்து, தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற இமாலய இலக்கை எளிதில் எட்டிப் பிடித்து, இன்றும் தமிழ் திரையிசை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் கொண்டாடப்பட்டு வரும் இசையரசர்தான் 'ஏழிசை மன்னர்' எம் கே தியாகராஜ பாகவதர்.
1948ம் ஆண்டு வெளிவந்த தனது “ராஜமுக்தி” திரைப்படத்தின் தோல்விக்குப் பின், 1952ல் இவர் நடித்து வெளியிட்ட திரைப்படம்தான் “அமரகவி”. 'நியூடோன் ஸ்டூடியோ'வில் இத்திரைப்படத்திற்கான பூஜையை பிரமாண்டமாக நடத்தி, மிகப் பெரிய நம்பிக்கையோடு இருந்து வந்தார் எம் கே தியாகராஜ பாகவதர். லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கில் பாகவதருக்காக ஆஜராகி வாதாடிய வழக்குரைஞர் வி எல் எத்திராஜுவிற்கு, பூஜையின் முடிவில், 100 பவுனில் செய்யப்பட்ட தங்கத்தினாலான தட்டில் பலவகைப் பழங்களையும் வைத்து, அவருக்கு வழங்கி மரியாதை செய்தார் எம் கே தியாகராஜ பாகவதர். கட்டணமே வாங்காமல் வாதாடிய வழக்குரைஞர் வி எல் எத்திராஜுவும் அந்தத் தங்கத் தட்டைத் தனது 'எத்திராஜ் மகளிர் கல்லூரி' நிதிக்காக ஏற்றுக் கொண்டார்.
அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வந்த சமூகத் திரைப்படங்களை விரும்பிப் பார்க்கவும், பக்தி, புராண இதிகாச, ராஜா ராணி கதைகளைப் புறக்கணிக்கவுமான ஒரு போக்கு தமிழ் திரை ரசிகர்களிடையே வளரத் தொடங்கி, ரசிகர்களும், தயாரிப்பாளர்களும் ஒரு மாறுதலை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்த 1952ல் ராஜா ராணி கற்பனைக் கதையோடு, ஒரு பக்திப்படமாக எடுத்து வெளியிட்ட திரைப்படம்தான் எம் கே தியாராஜ பாகவதர் நடித்த “அமரகவி”.
கவிஞர் சுரதா வசனம் எழுத, எப் நாகூர் படத்தை இயக்க, ஜி ராமனாதன் இசையமைப்பில், எம் கே தியாகராஜ பாகவதரின் செவிக்கினிய பாடல்கள் பல இடம்பெற்றும், அன்றைய கனவுக்கன்னியாக இருந்த டி ஆர் ராஜகுமாரி மற்றும் பி எஸ் சரோஜா, பி கே சரஸ்வதி, என் எஸ் கிருஷ்ணன், டி ஏ மதுரம் போன்ற திறமை மிகு நடிகர்கள் நடித்திருந்தும், படம் படுதோல்வியை சந்தித்து, சாதனைக் கலைஞனாக வலம் வந்து கொண்டிருந்த எம் கே தியாகராஜ பாகவதர் என்ற அந்த முதல் சூப்பர் ஸ்டாருக்கு சோதனையை மட்டுமே பரிசாகத் தந்து சென்ற திரைப்படமாக அமைந்ததுதான் இந்த “அமரகவி”.