சமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! நீதிபதி போட்ட உத்தரவு | மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் | கதையின் நாயகனாக தொடர விரும்பும் சூரி! | சூர்யா அளித்த உறுதியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு | எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் | விதி எப்போதும் மாறாது: ஜெயம் ரவி | ஒரு நேர்மையாளனின் கதை - மனம் திறந்த நந்தா பெரியசாமி | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “ஒருதலை ராகம்” |
ஒவ்வொரு ஆண்டும் இருநூறுக்கும் மேற்பட்ட படங்கள் வருகின்றன. எத்தனையோ இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள் அவர்களது திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், எல்லோருக்கும் சிறந்த படங்கள் அமைந்துவிடுவதில்லை, சிலருக்குத்தான் அப்படி அமைகின்றது. அப்படி அமைவதிலும் ஒரு சிலர் மட்டுமே சரியான முத்திரையைப் பதித்து முத்துக்களாய் ஜொலிக்கிறார்கள். அந்த விதத்தில் இந்த வருடம் முத்திரை பதித்த சிலரைப் பற்றிப் பார்ப்போம். இயக்கம், இசை, நாயகன், நாயகி, கதையின் நாயகன் என சில முக்கிய முத்துக்கள் அவர்கள்…
இயக்கம் - தமிழரசன் பச்சமுத்து
2024ம் ஆண்டிலும் வழக்கம் போல நிறைய புதுமுக இயக்குனர்கள் அறிமுகமானார்கள். அவர்களில் அதிகம் பேசப்பட்ட இயக்குனராக 'லப்பர் பந்து' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தமிழரசன் பச்சமுத்து இருந்தார். ஒரு தரமான படத்திற்கு நட்சத்திர அந்தஸ்து தேவையில்லை, தரமான கதை இருந்தாலே போதும் என நிரூபித்து வெற்றி பெற்றுள்ளார். அட்டகத்தி தினேஷ், இந்தப் படம் மூலம் கெத்து தினேஷ் என்றழைக்கப்படும் அளவிற்குப் பெயர் வாங்கிவிட்டார். ஹரிஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ஸ்வாசிகா என படத்தில் நடித்துள்ள மற்றவர்களும் அவர்களது கதாபாத்திரங்களால் பேசப்பட்டார்கள். இப்படியான நடிகர்கள், நடிகைகளை வைத்து அனைவரும் கொண்டாடும் ஒரு படத்தைக் கொடுத்துவிட்டார் தமிழரசன் பச்சமுத்து.
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
2006ல் வெளிவந்த 'வெயில்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ்குமார். கடந்த 18 வருடங்களில் எத்தனையோ சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். 100வது படத்திற்கும் இசையமைக்க ஆரம்பித்துவிட்டார். இந்த வருடம் அவருடைய இசையில், “கேப்டன் மில்லர், மிஷன் சாப்டர் 1, சைரன், ரெபெல், கள்வன், டியர், தங்கலான், அமரன்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'அமரன்' படம் பெரும் வெற்றியைப் பெற்றது. உணர்வுபூர்வமான அந்தப் படத்தில் அவருடைய இசை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது. 'தங்கலான்' படத்திலும் அவருடைய இசையை குறிப்பிட்டே ஆக வேண்டும். நடிகராக ஒரு பக்கம் வெற்றிக்குத் தடுமாறினாலும் இசையமைப்பாளராக இந்த வருடத்தில் முத்திரை பதித்துவிட்டார்.
கதாநாயகன் - விஜய் சேதுபதி
2018ல் வெளிவந்த '96' படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து வெளிவந்த படங்கள் வியாபார ரீதியாக வசூலைக் குவிக்கவில்லை. அதன்பின் அவர் நாயகனாக நடித்து பத்து படங்கள் வெளிவந்தன. வில்லனாக நடித்த 'மாஸ்டர், விக்ரம்' ஆகிய படங்கள்தான் வெற்றிபெற்றன. கடந்த வருடம் சிறப்புத் தோற்றத்தில் நடித்த 'விடுதலை 1' படமும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், இந்த வருடம் 'மகாராஜா' படம் மூலம் அவருடைய வறட்சியான வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். தமிழ் ரசிகர்களையும் கடந்து உலக ரசிகர்களையும் ஈர்த்து, தற்போது சீன ரசிகர்களையும் தன்வசப்படுத்தி விட்டார் விஜய் சேதுபதி. அடுத்து சமீபத்தில் வந்த 'விடுதலை 2' படத்திலும் அவருடைய கதாபாத்திரம்தான் முதன்மைக் கதாபாத்திரமாக அமைந்தது. அதிலும் அவருடைய நடிப்பு விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. பத்து வருடங்களுக்கு முன்பு எந்த மாதிரியான பெயரையும், பாராட்டுக்களையும் பெற்றாரோ அதை ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பெற்று வருகிறார் விஜய் சேதுபதி.
கதாநாயகி - சாய் பல்லவி
தமிழ் நன்றாகப் பேசத் தெரிந்த நடிகையருக்கும், தமிழகத்தைச் சேர்ந்த நடிகையருக்கும் தமிழ் சினிமா எப்போதுமே ஆதரவாக இருக்காது. வேற்று மொழிகளிலிருந்து வந்த நடிகையரைத்தான் வரவேற்று கொண்டாடும். தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழைத் தவிர மலையாளம், தெலுங்கு மொழிகளில் அற்புதமான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து கொண்டாடப்படுபவர் சாய் பல்லவி. அவரை தமிழ் சினிமா சரியாகப் பயன்படுத்துவதில்லையே என்ற குறை ரசிகர்களுக்கு இருந்தது. அதை 'அமரன்' படம் நிறைவேற்றிவிட்டது. சின்னச் சின்ன உணர்வுகளைக் கூட தனது யதார்த்தமான நடிப்பால் படம் முழுவதும் கட்டிப் போட்டுவிட்டார் சாய் பல்லவி. அதிலும் படத்தின் கடைசி அரை மணி நேரக் காட்சியில் தங்களையும் மீறி கண் கலங்காமல் யாரும் இருந்திருக்க முடியாது. இந்த வருடத்திற்கான சிறந்த நடிகைகக்கான தேசிய விருது சாய் பல்லவிக்குத் தவிர வேறு யாருக்கும் வழங்கினால் அது அந்த விருக்கான நியாயம் கிடையாது என்று தாராளமாகச் சொல்லலாம்.
கதையின் நாயகன் - சூரி
தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி, சில பல படங்களில் தலையை மட்டும் காட்டி, பின்பு நகைச்சுவை நடிகராக வளர்ந்து, இன்று கதையின் நாயகனாகவும் உயர்ந்து நிற்பவர் நடிகர் சூரி. கமர்ஷியல் கதாநாயகர்கள் வித்தியாசமான படங்களில் நடிக்கவே மாட்டார்கள். மற்ற வித்தியாசமான நடிகர்கள் கூட ஏற்று நடிக்கத் தயங்கும் படங்களில், கதாபாத்திரங்களில் நடிக்கும் சூரி இந்த ஆண்டில் குறிப்பிட வேண்டிய ஒரு நடிகர். அதற்குக் காரணம் 'கொட்டுக்காளி' திரைப்படம். இப்படியான படங்களில் நடிப்பதும் சினிமாவில் ஆரோக்கியமான ஒரு விஷயம். இந்தப் படம் மட்டுமல்லாது 'கருடன், விடுதலை 2' ஆகிய இரண்டு படங்களிலும் அவருடைய நடிப்பு பேசப்பட்டுள்ளது. மற்ற காமெடி நடிகர்கள் கதாநாயகனாக உயர்ந்த பின் அவர்கள் தேர்வு செய்யும் படங்கள் போல அல்லாமல் தான் ஒரு வித்தியாசமான நடிகர் என்பதை படத்துக்குப் படம் நிரூபித்து வருகிறார் சூரி.