மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் | கதையின் நாயகனாக தொடர விரும்பும் சூரி! | சூர்யா அளித்த உறுதியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு | எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் | விதி எப்போதும் மாறாது: ஜெயம் ரவி | ஒரு நேர்மையாளனின் கதை - மனம் திறந்த நந்தா பெரியசாமி | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “ஒருதலை ராகம்” | 2024 - முத்திரை பதித்த முத்துக்கள்... |
இந்த காலத்தில் நேர்மையாக இருப்பவர்களை 'ஏமாளியாக இருக்கிறாரே' என பலர் காதுபட பேசுவதை கேட்டிருக்கிறோம். நேர்மை தவறாத ஒரு குடும்பத்தலைவன் குறித்த கதையை தன் அடுத்த படமான திருமாணிக்கத்தில் மையகருத்தாக கொண்டு இயக்கியிருக்கிறார் இயக்குனர் நந்தா பெரியசாமி. இம்மாத இறுதியில் 'திருமாணிக்கம்' வெளிவரயிருக்கிறது.
மதுரை அருகே புதுதாமரைப்பட்டியில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நந்தா பெரியசாமி யதார்த்த வாழ்வியல் கதைகளை படமாக தரும் இயக்குனர் வரிசையில் இடம் பெற்றிருக்கிறார். கதையாசிரியர், எழுத்தாளர், இயக்குனர், நடிகர் என பல பரிமாணங்களில் பரிச்சியமானவரும் கூட. இவர் இயக்கிய முதல் படமான மகா நடிகர் அஜித், சினேகா, கிரண் நடித்த நிலையில் நின்று போனது. இவர் இயக்கிய 'கல்லுாரியின் கதை' தான் வெள்ளித்திரையில் வெளியான முதல் படம். பிறகு மாத்தியோசி, அழகன் அழகி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடித்த ஒன்பது இயக்குனர்களில் இவரும் ஒருவர். யோகி, மிளகா, கோரிப்பாளையம், ரா ரா படங்களில் நடித்தும் இருக்கிறார். சண்டைக்கோழி 2, மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்., படங்களில் வில்லனாகவும் தோன்றினார். சிறந்த கதையாசிரியருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றிருக்கிறார். திருமாணிக்கம் பட வெளியீடு பணிகளில் பிசியாக இருந்தவர் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசியதிலிருந்து...
இந்த காலத்தில் எதற்காகவும் வளைந்து கொடுக்காமல் நேர்மையாக இருப்பவர்களை குடும்பத்தினருக்கு கூட பிடிப்பதில்லை. அப்படி நேர்மையாக வாழும் ஹீரோவின் வாழ்வின் சிக்கலையும், தீர்வையும் திருமாணிக்கம் விளக்கியிருக்கிறது. நல்ல விஷயத்தை நேரடியாக கூறினால் மக்களிடம் போய் சேருவது சந்தேகம். வாழ்வியலுடன் இணைத்து சினிமாவாக வெளியிடும் போது கட்டாயம் போய் சேரும்.
ஒரு ஜப்பானிய கவிதை தான் இந்த படத்திற்கு இன்ஸ்பிரேஷன். 'நான் ஒரு எறும்பை நசுக்கிக் கொன்றேன். எனது மூன்று குழந்தைகளும் அதைப் பார்த்து கொண்டிருந்தார்கள்' என்பது தான் கவிதை. தந்தையை தான் குழந்தைகள் ரோல் மாடலாக எடுத்து கொள்வர் என்பது அந்த கவிதை சொல்லும் சேதி.
இந்த படத்தை இயக்க முடிவு செய்த போதே சமுத்திரகனி தான் ஹீரோ என முடிவு செய்தேன். திருமாணிக்கம் படம் முழுவதும் மாணிக்கமாகவே வாழ்ந்திருக்கிறார். பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது. கதையை கேட்டதுமே எல்லோருமே கால்ஷீட் கொடுத்தனர். உடல் நலம் குன்றியிருந்த நிலையிலும் இயக்குனர் பாரதிராஜா நடித்திருக்கிறார்.
இன்றைய காலகட்டத்தில் நாம் நுாறு சதவீதம் நேர்மையாக இருப்பதை விட ஒரு சதவீதம் நேர்மையாக இருந்தாலே போதும். அப்படி ஒவ்வொருவரும் இருந்து விட்டால் நாடு முன்னேறி விடும். கட்டாயம் திருமாணிக்கம் படம் பார்ப்பவர்கள் அந்த முடிவுடன் வெளியில் செல்வர்.
நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் தற்போது இயக்குவதற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறேன். என் கதையில் ஹிந்தியில் வெளியான ராஷ்மி ராக்கெட் படம், பாலிவுட்டில் பெரிய பிரேக் பெற்று கொடுத்துள்ளது. படம் வெளியான நேரத்தில் மும்பைக்கு அழைத்து பாராட்டியதை வாழ்க்கையில் மறக்க முடியாது. மக்களுக்கு பிடித்த கதைகளை படங்களாக தருவதுடன் அவர்கள் விரும்பும் இயக்குனராக வேண்டும் என்பது தான் ஆசை என்றார்.