கிறிஸ்துவ முறையிலும் திருமணம் : முத்த மழையில் கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் | வேட்டையன் படத்திற்கு கள்ளிப்பால் - இயக்குனர் வேதனை | பிரபாஸ் படத்தில் நடனமாடும் நயன்தாரா? | அனுஷ்கா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புஷ்பா பட இயக்குனருடன் இணையும் ராம்சரண் | அல்லு அர்ஜுனின் மனைவி வெளியிட்ட வீடியோவை பகிர்ந்து சமந்தா போட்ட பதிவு | சரோஜினி சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கும் குஷ்பூ! | சூர்யா 45-ல் இணைந்த இரண்டு பிரபலங்கள் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | அல்லு அர்ஜுன் கைது மூலம் புஷ்பா 2 வசூலுக்கு உதவி செய்த முதல்வர் : ராம் கோபால் வர்மா கிண்டல் | கொஞ்சம் சீரியஸா இருங்க : பஹத் பாசிலையும் ஜோதிர்மயியையும் சத்தம் போட்ட இயக்குனர் |
எண்பதுகளில் தமிழில் வெளியான பூவே பூச்சூடவா, பூவிழி வாசலிலே முதற்கொண்டு விஜய் நடித்த காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு வரை கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் தமிழ் ரசிகர்களின் மனதில் தனது அற்புதமான படங்களால் இடம் பிடித்தவர் மலையாள இயக்குனர் பாசில். ஆச்சரியமான விஷயமாக தமிழில் அவர் இயக்கிய அனைத்து படங்களுக்கும் இளையராஜா தான் இசையமைப்பார். அப்படி ஒரு முறை புதிய படம் ஒன்றின் பாடல் பதிவிற்காக இளையராஜாவிடம் வந்து பாசில் அமர்ந்த போது படத்தின் முழு கதையும் சொல்லுங்கள் கேட்கலாம் என இளையராஜா கேட்டுள்ளார்.
மலையாளத்தில் தனது இயக்கத்தில் வெளியாகி இருந்த ஒரு படத்தின் கதையை தான் தமிழில் எடுக்கப் போவதாக சொல்லி அதை கூறியுள்ளார் பாசில். வயதானத தாத்தாவும் பேரன் பேத்திகளும் தான் கதை நாயகர்கள். ஆனால் அந்த கதை இளையராஜாவை பெரிதாக ஈர்க்கவில்லை. அது மட்டுமல்ல தமிழ் ரசிகர்களுக்கு இப்படிப்பட்ட கதைகள் நிச்சயமாக பிடிக்காது. அதனால் தயவு செய்து இந்த கதையை ஓரங்கட்டி விட்டு புதிதாக ஒன்றை தயார் செய்யுங்கள் என்று தனது கருத்தை கூறியுள்ளார்.
அவருடன் பல படங்களில் இணைந்து வெற்றி பயணம் மேற்கொண்ட பாசிலுக்கும் இளையராஜா சொல்வது சரிதான் என மனதில் பட்டதால் மீண்டும் தனது குழுவினருடன் ஆலோசித்து மலையாளத்தில் என்றென்றும் கண்ணேட்டன்டே என்கிற படத்தை தமிழில் ரீமேக் செய்யலாம் என முடிவு செய்து அந்த கதையை இளையராஜாவிடம் கூறியுள்ளார். இளையராஜாவை இந்த கதை ரொம்பவே கவர்ந்து விட்டது. நிச்சயமாக இது தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தமான கதையாகவே இருக்கிறது இதையே படமாக எடுங்கள் என கூறினார். அப்படி உருவான படம் தான் வருஷம் 16.
அந்த படத்தில் தான் கதாநாயகியாக நடிகை குஷ்பூ அறிமுகமானார். அந்த படத்திற்கு ஒரு புதுமுகம் தேவை என தேடிக்கொண்டிருந்த போதுதான் சிலர் மூலமாக குஷ்பூ பற்றி தெரியவந்து, அவரை அந்த படத்தில் ஒப்பந்தம் செய்தார் பாசில். ஆனால் படக்குழுவை சேர்ந்த சிலர் குஷ்பூவின் முகம் பார்ப்பதற்கு ஒரு சீனப் பெண் போன்று இருக்கிறது என்றும், தமிழ் ரசிகர்களுக்கு இந்த முகம் பிடிக்காது என்றும் அதிருப்தி தெரிவித்தார்கள். ஆனால் ஆடிசனின் போது குஷ்புவின் நடிப்பு திறமையை பார்த்து வியந்த பாசில் நிச்சயமாக இந்த பெண்ணை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். இவர் நீண்ட காலம் சினிமாவில் பயணிப்பார் என்று உறுதியாக நின்று அந்த படத்தில் குஷ்பூவை நடிக்க வைத்தார்.
அந்த வகையில் இளையராஜாவின் கணிப்பு வருஷம் 16 படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது ஒரு பக்கம் என்றால் பாசிலின் தீர்மானமான நம்பிக்கை குஷ்புவின் எதிர்காலத்திற்கு பாதை வகுத்து தந்தது என்பதும் மறுக்க முடியாத ஒன்று.