சமுத்திரக்கனிக்கு இயக்குனர் பிரியதர்ஷன் சொன்ன அறிவுரை | விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அறிமுகப் படத்தின் பெயர் 'சிக்மா' | நகை கடத்தல் நடிகையின் கூட்டாளி நடிகருக்கு சிறையில் சொகுசு வசதி ; வெளியான அதிர்ச்சி வீடியோ | எதிர்பார்த்த 'வியூஸ்கள்' பெறாத 'தளபதி கச்சேரி' | ஏ.ஆர்,ரஹ்மான் லைவ் கான்சர்ட்டில் பங்கேற்ற ராம்சரண்-ஜான்வி கபூர் | 'துள்ளுவதோ இளமை' புகழ் அபிநய் காலமானார் : இறுதிச்சடங்கு செய்வதற்கு கூட ஆள் இல்லை | சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? |

1964ம் ஆண்டு புதுமை இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த “வெண்ணிற ஆடை” என்ற திரைப்படத்தின் மூலம் புதுமுக நாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் ஜெயலலிதா. நல்ல அழகு, நடிப்பாற்றல் மற்றும் நாட்டியத் திறமையுடன் கூடிய தேர்ந்த கல்வி ஞானம் கொண்ட நாயகியாக அக்காலத்தில் பார்க்கப்பட்டவர்.
தமிழில் இவரது இரண்டாவது படமே அன்றைய உச்ச நட்சத்திரமான எம்ஜிஆருக்கு ஜோடியாக “ஆயிரத்தில் ஒருவன்” என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றவர். தொடர்ந்து சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், என அன்றைய முன்னணி நாயகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து ஏராளமான வெற்றிப் படங்களைத் தந்துள்ளார்.
1980க்குப் பிறகு நடிப்பிலிருந்து முற்றிலும் தன்னை விலக்கிக் கொண்டார். அடுத்த தலைமுறை நாயகர்களான ரஜினி, கமல் ஆகியோருக்கு இவரோடு இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமலே போயிற்று. பின்னாளில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான கே பாலாஜி தனது சொந்த தயாரிப்பான “பில்லா” திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஜெயலலிதாவை நடிக்க வைக்க முயற்சி செய்ததாகவும், பின் அது நிறைவேறாமல் போனதாகவும் கூட ஒரு செய்தி உண்டு.
அதேசமயம் நடிகர் கமல்ஹாசன் நடன இயக்குநர் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவி நடன இயக்குநராக பணிபுரிந்து வந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் உட்பட பல உச்ச நட்சத்திரங்களுக்கு அவர் நடனப் பயிற்சி அளித்ததுண்டு. அந்த வகையில் இயக்குநர் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில், ஆர் முத்துராமன், ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், மேஜர் சுந்தர்ராஜன், கேஏ தங்கவேலு, சச்சு ஆகியோர் நடித்து 1974ஆம் ஆண்டு வெளிவந்த “அன்புத்தங்கை” என்ற திரைப்படத்தில் கேவி மகாதேவன் இசையமைப்பில் பி சுசீலா பாடியிருக்கும் “மன்னர்கள் வணங்கும் சிலையானேன்” என்ற பாடல் காட்சியில் புத்தராக நடிகர் கமல்ஹாசன் தோன்ற, அவர் முன் நடனமாடி மயக்கும் நடன மங்கையாக ஜெயலலிதா ஆடிப் பாடும் அந்தப் பாடல் காட்சி கலைச்செல்வி ஜெயலலிதாவையும், கலைஞானி கமல்ஹாசனையும் இணைத்த ஒரு அபூர்வ பாடல் காட்சியாக அமைந்திருக்கின்றது என்பதில் எந்த ஐயமும் இல்லை.




