தாடி பற்றிய விமர்சனம் ; தொடரும் டீசரில் பதில் சொன்ன மோகன்லால் | நீதிமன்றம் செல்வதை புறக்கணித்து விட்டு சினிமா பிரிவியூ பார்க்க சென்ற நடிகர் தர்ஷன் | அஜித் மகனாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணினேன் ; பிரேமலு ஹீரோ வருத்தம் | அஜித்தின் 'குட் பேட் அக்லி'யால் காத்து வாங்கும் வீர தீர சூரன்! | சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் |
ஒரு திரைப்பட நடிகையாக தனது கலைப் பணியை ஆரம்பித்து, பின் அரசியல்வாதியாக உருமாறி, அதன் பின் ஒரு கட்சியின் தலைவி என்ற இலக்கைத் தொட்டதோடு நில்லாமல், தமிழக முதல்வராக அரியணை ஏறி, மக்களின் மனம் கவர்ந்த ஆளுமையாக, “புரட்சித் தலைவி”, “அம்மா” என அன்போடும், மரியாதையோடும் அழைக்கப்பட்ட ஜெ ஜெயலலிதாவின் ஆரம்ப கால கலைப்பயணம் அலாதியான ஒன்று. “ஸ்ரீசைல மகாத்மியம்” என்ற கன்னட திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம், படத்தில் கதாநாயகியாக நடிக்க இருந்த குழந்தை உடல்நலமின்றி அன்று நடிக்க வர இயலாத நிலை ஏற்பட, படப்பிடிப்பை அன்றே முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த படக்குழுவினர் செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்த நேரத்தில், படப்பிடிப்பிற்கு வந்த நடிகை சந்தியா தனது மகளை அழைத்து வந்திருந்ததைப் பார்த்த படத்தின் தயாரிப்பாளர், உங்கள் மகள் அழகாக இருக்கிறாள்.
இந்த வேடத்தில் நடிக்கட்டுமே என கேட்க, அவள் நடிப்பதற்கு சம்மதிக்க மாட்டாள் என நடிகை சந்தியா கூற, குழந்தையிடம் கேட்டுப் பாருங்கள் என தயாரிப்பாளர் மீண்டும் சந்தியாவிடம் கேட்க, நடிக்கின்றாயா? என்று தனது மகளைப் பார்த்து சந்தியா கேட்க, நடிக்கின்றேன் என சிறுமி ஜெயா கூற, அவ்வாறு அவரது கலையுலகப் பயணம் ஒரு குழந்தை நட்சத்திரமாக ஆரம்பமானது.
தங்கச் சிலைபோல இருக்கும் இவள் எதிர்காலத்தில் கலை உலகில் மிகப் பெரிய உயரத்தை தொடுவாள் என்று “ரசிக ரஞ்சனி சபா” அரங்கில் நடைபெற்ற ஜெயலலிதாவின் நடன அரங்கேற்றத்தின் போது நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவரை வாழ்த்திப் பேசியிருந்தார். அவர் கூறியது போலவே “கர்ணன்” பட நூறாவது நாள் விழாவிற்கு அதில் நடித்திருந்த தனது தாயார் நடிகை சந்தியாவுடன் ஜெயலலிதாவும் செல்ல, ஜெயலலிதாவைப் பார்த்த தயாரிப்பாளரும் இயக்குநருமான பி ஆர் பந்துலு, இது உன் மகள்தானே? நான் அடுத்து எடுக்க இருக்கும் படத்திற்கு ஒரு புதுமுகத்தை தேடிக் கொண்டிருக்கிறேன்.
உன் மகளை அந்த வேடத்தில் நடிக்க வைக்கலாம் என நினைக்கின்றேன் என சந்தியாவிடம் கேட்க, பின் பி ஆர் பந்துலுவின் “சின்னத கொம்பே” என்ற படத்தில் ஒப்பந்தமானார் ஜெயலலிதா. “சின்னத கொம்பே” படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்புக் காட்சிகளைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தபோது, தனது அடுத்த படத்திற்கு ஒரு புதுமுக நடிகையை தேடிக் கொண்டிருந்த இயக்குநர் ஸ்ரீதர் அங்கு வர, ஜெயலலிதா நடித்திருந்த காட்சிகளைப் பார்த்த இயக்குநர் ஸ்ரீதர், தன்னை வந்து சந்திக்குமாறு நடிகை சந்தியாவிற்கு அழைப்பு விடுக்க, அதன்படி சந்தியாவும் தனது மகள் ஜெயலலிதாவை அழைத்துக் கொண்டு ஸ்ரீதரின் “சித்ராலயா” அலுவலகம் சென்றார்.
படத்தின் கதையை சந்தியாவிடம் சுருக்கமாகச் சொன்னார் ஸ்ரீதர். படத்தில் வரும் நாயகியின் பாத்திரம் மிகவும் சிரமமான ஒன்று. ஆரம்பத்தில் பைத்தியம் பிடித்தவளாக, பின் இன்பம் பொங்கும் இளம் நாயகியாக நாயகனுடன் காதல் புரிபவளாக, அதன் பின் விரக்தியடைந்து, வாழ்க்கையையே வெறுத்து, அதன் காரணமாய் உள்ளப் போராட்டத்தின் விளைவால் ஏற்படும் பலதரப்பட்ட உணர்ச்சிகளைக் காட்டக் கூடிய ஒரு இளம் விதவையின் கதாபாத்திரம்.
உன்னால் இந்த வேடத்தை ஏற்று நடிக்க முடியுமா? உனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறதா? என ஜெயலலிதாவைப் பார்த்து இயக்குநர் ஸ்ரீதர் கேட்க, முடியும்! எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது என ஜெயலலிதாவும் பதிலளிக்க பின் நாயகியாக ஒப்பந்தமானார் ஜெயலலிதா. துள்ளித் திரியும் சிறு பெண்ணாக அறிமுகமாகி, ஒருவனை காதலித்து, அவளுக்குப் போட்டியாக இன்னொருத்தியை வரவழைத்து, படத்தின் நாயகி நாயகனைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழப் போகின்றாள் என படம் பார்க்கும் பார்வையாளர்களை எதிர்பார்க்கச் செய்து, இறுதியில் அவள் விதவை என்று காட்டி, வெள்ளாடை அணிந்து வரச் செய்து திடுக்கிடச் செய்த “வெண்ணிற ஆடை”யின் அந்த தில்லான கதாபாத்திரம்தான் ஜெயலலிதா என்ற ஆளுமையின் ஆரம்பகால கலையுலகப் பயணத்தின் ஆரம்பப் புள்ளி. ஆணிவேர்.