திரையுலகில் 22 ஆண்டுகள் : சூர்யா 45 படப்பிடிப்பில் த்ரிஷா கேக் வெட்டி கொண்டாட்டம் | படைதலைவன் படத்தின் டிரைலரில் தனது ஹிட் பாடலுடன் முகம் காட்டிய விஜயகாந்த் | அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராஷ்மிகா - நானி | பிளாஷ்பேக் : விசுவை சினிமா நடிகராக்கிய எஸ்.பி.முத்துராமன் | பிளாஷ்பேக் : கண்ணாம்பா வசனத்தால் தோல்வி அடைந்த படம் | 'கொரோனா குமார்' வழக்கு முடித்து வைப்பு | லண்டன் இசை பள்ளியின் கவுரவத் தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம் | ஹீரோ ஆனார் ரோபோ சங்கர் | மற்றுமொரு ஓடிடி தளத்தில் ‛ஹிட் லிஸ்ட்' | பெண் குழந்தைக்குத் தாயான ராதிகா ஆப்தே |
தமிழ் திரையுலகின் தொடக்க காலம் தொட்டே, நடிப்புத் துறையிலும், இசைத் துறையிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களின் பங்களிப்பு என்பது, வேறுபல துறைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் ஒரு அசுரத்தனமான வளர்ச்சி என்றே கூற முடியும். இருப்பினும் திரைக்குப் பின்னால் இயங்கி வரும் தொழில்நுட்ப கலைஞர்களில் பெண்களின் பங்களிப்பு என்பது இன்னும் குறைவான எண்ணிக்கையில் இருக்கின்றது என்பதை யாரும் மறுத்துவிட இயலாது.
அவ்வாறு திரைக்குப் பின்னால் செயல்படும் துறைகளில் ஒன்றான பாடலாசிரியர்கள் பட்டியலில் பெண்களின் பங்களிப்பு என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே இன்னமும் இருந்து வருகின்றது. இப்போதுள்ள திரைப்பட பாடலாசிரியர்கள் பட்டியலில் கூட, பெண் பாடலாசிரியர் என்று தாமரை ஒருவரைத் தவிர வேறு யாரும் பெரிதாக திரை வெளிச்சத்தில் இருப்பதாக தெரியவில்லை. அப்படி ஒரு பெண் பாடலாசிரியராக 60களில் அறிமுகமானவர்தான் இஸ்லாமிய பெண் பாடலாசிரியர் ரோஷனாரா பேகம்.
கோவையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், அங்குள்ள புனித பிரான்ஸிஸ் கான்வென்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை படித்திருக்கின்றார். பள்ளி நாட்களிலேயே கவிதை ஞானம் உள்ளவராகவும், இசையில் நாட்டம் கொண்டவராகவும் இருந்திருக்கின்றார். மகளின் ஆர்வத்தை அறிந்திருந்த அவரது தந்தை ஷேக் முஸ்தபா அவரை ஊக்குவிக்கும் விதத்தில் அவருக்கு உறுதுணையாய் இருந்திருக்கின்றார். மேலும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கோவை வரும்போதெல்லாம் இவரது வீட்டிற்கு வந்து செல்லும் அளவிற்கு இருவருக்குமிடையே நட்பும் இருந்தது.
இதனால், ரோஷனாரா பேகம் அவர்களின் திறமையையும், ஆர்வத்தையும் அறிந்த எம் எஸ் விஸ்வநாதன், தயாரிப்பாளர் ஜி என் வேலுமணியிடம் இவருக்கு பாடல் எழுத வாய்ப்பு தரவேண்டும் என அழுத்தம் தர, அவரும் சம்மதித்தார். 1968ம் ஆண்டு “சைனா டவுன்” என்ற ஹிந்தி திரைப்படத்தின் மறு உருவாக்கமான “குடியிருந்த கோயில்” என்ற திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பும் கிடைக்கப் பெற்றார் ரோஷனாரா பேகம்.
“குங்குமப் பொட்டின் மங்கலம் நெஞ்சமிரண்டின் சங்கமம்” என்று பல்லவியை எழுதித் தர, தயாரிப்பு தரப்பிலிருந்தும் பாடலின் பல்லவி உடனே ஓகே செய்யப்பட்டது. காரணம் இந்தப் படத்திற்கு அவர்கள் முதலில் வைத்த பெயர் “சங்கமம்”. விபரம் ஏதும் அறியாத ரோஷனாரா பேகம் எழுதித் தந்த பல்லவியில் படத்தின் முந்தைய பெயரான “சங்கமம்” என்ற வார்த்தை தற்செயலாக இடம் பெற்றதில் தயாரிப்பு தரப்பிற்கு ஆச்சர்யத்தோடு கூடிய மிகுந்த மகிழ்ச்சியும் கிடைக்க, முழுப் பாடலையும் எழுதித் தந்தார் ரோஷனாரா பேகம்.
இஸ்லாமிய பெண் பாடலாசிரியரான ரோஷனாரா பேகம் கைவண்ணத்தில் உருவான “குங்குமப் பொட்டின் மங்கலம் நெஞ்சமிரண்டின் சங்கமம்” என்ற “குடியிருந்த கோயில்” திரைப்படப் பாடல் அன்றிலிருந்து இன்றுவரை இளம் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் ஒரு வசீகரப் பாடலாகவே இருக்கின்றது என்றால் அது மிகையன்று. தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம் ஜி ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்திருக்கும் இந்தப் பாடலே கவிஞர் ரோஷனாரா பேகம் எழுதிய முதல் மற்றும் இறுதிப் பாடலாக அமைந்தது அவருக்குமட்டுமின்றி திரையிசை ரசிகர்களுக்கும் ஒரு பேரிழப்பே.