ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு மாணவன் போட்ட வழக்கு : அமரன் பட செல்போன் எண் நீக்கம் | சூரி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | ஒரு உயிர் பலி : சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது தெலங்கானா அரசு | புஷ்பா 2 - முதல்நாள் வசூல் முதல் கட்டத் தகவல் | டொவினோ தாமஸின் ‛ஐடென்டிடி' டீசர் வெளியானது | அரபு நாடுகளில் புஷ்பா 2 படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கம் | சுரேஷ் கோபி மகனுக்கு சண்டை சொல்லித்தரும் மம்முட்டி | புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல் | பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா | இறுதிக்கட்டத்தில் 'திருவள்ளுவர்' படம் : இளையராஜா இசை |
மீண்டும் மீண்டும் சளிப்பின்றி பார்க்கத் தூண்டும் திரைப்படங்களைத்தான் காலத்தை விஞ்சி நிற்கும் காவியத் திரைப்படங்களாக நாம் நினைவு கூர்வதுண்டு. அப்படி ஒரு காவியப் படைப்புதான் 1964ல் புதுமை இயக்குநர் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் உருவான “காதலிக்க நேரமில்லை”. “கல்யாணப்பரிசு”, “நெஞ்சில் ஓர் ஆலயம்”, “போலீஸ்காரன் மகள்”, “சுமைதாங்கி” என கண்களை ஈரமாக்கும் கனமான கதைக்களங்களில் பயணித்து வந்த இயக்குநர் ஸ்ரீதரிடமிருந்து யாரும் சற்றும் எதிர்பாராத வண்ணம் முழுநீள நகைச்சுவை கொண்ட ஒரு வண்ணத்திரைப்படமாய் வந்து நம்மை மகிழ்வித்ததோடு, நம் வாழ்வில் ஓர் அங்கமாகிப் போன இந்த “காதலிக்க நேரமில்லை” திரைப்படம் உருவான விதமே ஒரு அலாதியான அனுபவம்தான்.
இன்று ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்றால், கதை விவாதத்திற்காக நட்சத்திர ஓட்டல்களில் அறை எடுத்து தங்கி, லட்சக் கணக்கில் செலவு செய்தும் கூட, தெளிவான ஒரு முடிவுக்கு வர இயலாத நிலை இருக்கும் இக்கால சினிமா உலகம் போல் அல்ல அன்றைய சினிமா உலகம். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே இயக்குநர் ஸ்ரீதரும், சித்ராலயா கோபுவும் அமர்ந்து, விவாதித்து பின் முடிவு செய்யப்பட்ட திரைப்படம்தான் இந்த “காதலிக்க நேரமில்லை”.
விவாதத்தின் போது, நாம் ஏன் ஒரு நகைச்சுவை திரைப்படம் எடுக்கக் கூடாது? என இயக்குநர் ஸ்ரீதரைப் பார்த்து சித்ராலயா கோபு கேட்க, அதிர்ந்து போன ஸ்ரீதர், கோபுவை பார்த்து, இதுவரை நான் எடுத்த திரைப்படங்கள் எல்லாம் பெண்களை கவரும் வண்ணம் கண்ணீரை வரவழைக்கும் கனமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களாக இருக்க, நான் எப்படி நகைச்சுவை திரைப்படம் எடுப்பது? என மறுப்பளித்து பேசிய ஸ்ரீதருக்கு ஊக்கம் தந்து உறுதுணையாய் நின்றவர் சித்ராலயா கோபு. மாலை 5 மணிக்கு ஆரம்பித்த இந்த விவாதம் இரவு 10 மணி வரை நீடித்து, படத்தின் ஒன் லைன் உறுதி செய்யப்பட்டது.
பின்னர் முழுக்கதையும் முடிவான பின் கதாபாத்திரங்களுக்கான நடிகர்களின் தேர்வு நடைபெற்றது. முதலில் தேர்வு செய்யப்பட்டதே படத்தின் நாயகியரின் தந்தை விஸ்வநாதன் கதாபாத்திரத்திற்கு நடிகர் டி எஸ் பாலையா. ஆரம்பத்தில் கதைப்படி இந்த கதாபாத்திரத்தின் பெயர் சந்திரசேகர் என்று தான் எழுதப்பட்டிருந்தது. பின்னர்தான் விஸ்வநாதன் என மாற்றினர். அதேபோல் படத்தின் இரண்டு நாயகர்கள் கதாபாத்திரங்களுக்கு தனது முந்தைய திரைப்படமான “நெஞ்சில் ஓர் ஆலயம்” திரைப்படத்தில் ஜிப்பா சகிதமாய் ஒரு நோயாளியாக வந்துபோன நடிகர் முத்துராமனை இரு நாயகர்களில் ஒருவராக மிக அற்புதமாக காட்டியிருப்பார் இயக்குநர் ஸ்ரீதர்.
மற்றொரு நாயகன் கதாபாத்திரத்திற்கு முதலில் இவர்களது தேர்வாக இருந்தது தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக பின்னாட்களில் மாறியிருந்த நடிகர் கிருஷ்ணாவும், தமிழ் திரையுலகின் என்றும் மார்கண்டேயன் என அழைக்கப்படும் நடிகர் சிவாகுமாரும்தான். பின்னர் அவ்விருவரும் நிராகரிக்கப்பட்டு நடிகர் ரவிச்சந்திரன் தேர்வானார். இரண்டு நாயகியரில் ஒருவர் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த வசுந்தராதேவி என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை காஞ்சனா.
மற்றொரு நாயகியான தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இவர்கள் தேர்வு செய்ய இருந்தவர் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா. பின்னர் அவரும் நிராகரிக்கப்பட்டு, அந்த கதபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்ற விவாதத்தின்போது, சித்ராலயாவின் ஆடிட்டர் ஒருவர் தெலுங்கு நடிகையான குசுமகுமாரி என்பவரை சிபாரிசு செய்ய, ஒளிப்பதிவாளர் வின்சென்ட் மலையாள நடிகையான கிரேஸி என்பவரின் பெயரைச் சொல்ல, இறுதியாக சித்ராலயா கோபு “பூம்புகார்” திரைப்படத்தில் மாதவியாக நடித்த ராஜஸ்ரீ சரியான தேர்வாக இருப்பார் என கூற, ராஜஸ்ரீ இரண்டாவது நாயகியாக அந்த தங்கை கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். இதில் என்ன வேடிக்கை என்றால் சித்ராலயா ஆடிட்டர் சொன்ன நடிகையும், ஒளிப்பதிவாளர் வின்சென்ட்டும் சொன்ன நடிகையும் சாட்சாத் ராஜஸ்ரீயே. தெலுங்கில் அவரது பெயர் குசுமகுமாரி, மலையாளத்தில் கிரேஸி.
படத்தில் சினிமா இயக்குநராக வேண்டும் என்ற ஒரு சினிமா பைத்திய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகர் நாகேஷிற்கு ஜோடியாக நடிகை சச்சுவை தேர்வு செய்ய அவரை அணுகியபோது, நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க அவரது பாட்டி சம்மதம் தெரிவிக்க மறுத்துவிட்டார். காரணம் அப்போதுதான் அவர் “வீரத்திருமகன்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். படத்தில் இவரும் ஒரு நாயகியே என்பதை சித்ராலயா கோபு பக்குவமாக எடுத்துக் கூறி, பின் சம்மதத்தைப் பெற்றார். இதே திரைப்படம் ஹிந்தியில் “பியார் கியே ஜா” என்ற பெயரில் வெளிவந்தபோது, சச்சு கதாபாத்திரத்தில் அங்கே நடித்திருந்தவர் நடிகை மும்தாஜ். இங்கே கதாநாயகி என்ற இடத்திலிருந்து நகைச்சுவை நாயகி என்ற இடத்திற்கு மாற்றமானவர் நடிகை சச்சு. அங்கே நகைச்சுவை நாயகி என்ற இடத்திலிருந்து பின் கதாநாயகி என்ற இடத்திற்கு இடம்பெயர்ந்தவர் நடிகை மும்தாஜ் என்பது ஒரு வியத்தகு உண்மை.
இந்தப் படத்திற்கு தலைப்பு தேர்வு செய்யப்பட்டதே அலாதியான ஒன்று. ஸ்ரீதரின் முந்தைய திரைப்படமான “நெஞ்சில் ஓர் ஆலயம்” திரைப்படத்தில் சிதார் இசைக்கருவியை வாசித்தவாறு நடிகை தேவிகா பாடுவது போல் இடம்பெற்ற “சொன்னது நீதானா? சொல் சொல் சொல் என்னுயிரே” என்ற பாடல் காட்சியில் ஒரு இடத்தில் சிதார் இசைக்கருவியை வேகமாக இசைப்பது போல் வரும் இடத்தில் கைவிரல்களின் அசைவையும் அதற்கேற்றவாறு விரைவுபடுத்திக் காட்டி நடிக்க வேண்டும். ஆனால் நடிகை தேவிகாவிற்கு அது சரியாக வராததால், சித்ராலயா கோபுவின் மனைவிக்கு தெரிந்த ஒருவரான, அகில இந்திய வானொலியில் சிதார் இசைக்கலைஞராக இருந்தவரை வரவழைத்து அந்த குறிப்பிட்ட காட்சியை மட்டும் அவரை வாசிக்க வைத்து அவரது கைவிரல்களை படமாக்கினர்.
இதன் காரணமாக இயக்குநர் ஸ்ரீதரை நேரில் சந்தித்து, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவருடைய ஆட்டோகிராப் வாங்க அந்த சிதார் இசைக்கலைஞர் மற்றும் சிலரை அழைத்துக் கொண்டு சித்ராலயா கோபு அவர்களின் மனைவி, கடற்கரையில் விவாதத்தில் இருந்த ஸ்ரீதரை சந்திக்க வந்ததை அறிந்த சித்ராலயா கோபு, வேகமாக அவர்களை நோக்கி சென்று விபரம் அறிந்து, அவர்களிடம் ஸ்ரீதர் தற்போது தீவிரமாக கதை விவாதத்தில் இருப்பதாகவும் அதற்கு இப்போது நேரமில்லை பின்னொரு நாளில் பார்ப்போம் என்று சொல்லி அனுப்ப, வந்தவர்கள் இந்தப் படம் வழக்கம்போல் சோகப்படம் இல்லையே என கேள்வி எழுப்ப, இல்லையில்லை இது முழுக்க முழுக்க காதல் கதை என சொல்லி அனுப்பி, பின் நடந்த விபரம் முழுவதையும் ஸ்ரீதரிடமும் சித்ராலயா கோபு சொல்ல, ஆட்டோகிராப், புகைப்படம் எடுக்க 'நேரமில்லை' என்ற அந்த ஒரு வார்த்தையும், இது முழுக்க முழுக்க 'காதல்' கதை என்று சொன்னதில் 'காதல்' என்ற வார்த்தையும் ஸ்ரீதரின் சிந்தனையைத் தூண்டி, அதன் விளைவாக பிறந்ததுதான் “காதலிக்க நேரமில்லை” என்ற இத்திரைப்படத்தின் தலைப்பு. ஒரு ஆய்வறிக்கையே சமர்பிக்கும் அளவிற்கு விசயங்கள் விரவிக் கிடக்கும் இத்திரைப்படம் நேற்றல்ல, இன்றல்ல, நாளையல்ல என்றென்றும் எவர்கிரீன் நகைச்சுவை காதல் திரைப்படம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.