அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
2024ம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்ட தினமான, நாளை (ஆக., 15) மூன்று தமிழ்த் திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகின்றன. அந்தப் படங்களைப் பற்றிய ஒரு முன்னோட்டப் பார்வை.
தங்கலான்
தயாரிப்பு - ஸ்டுடியோ க்ரீன், நீலம் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - பா ரஞ்சித்
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு - விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி
இந்த 2024ம் ஆண்டின் துவக்கத்தில் வெளியிட திட்டமிட்டு, பின் கோடை விடுமுறைக்கு மாறி இப்போது நாளை(ஆக., 15) இப்படம் வெளியாக உள்ளது. சுதந்திரப் போராட்ட காலத்திற்கு முந்தைய காலகட்டத் திரைப்படம். ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த போது தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள 'கேஜிஎப்' என அழைக்கப்படும் 'கோலார் தங்க வயல்' சுரங்கம் எப்படி உருவாக்கப்பட்டது என்பதுதான் இந்தப் படத்தின் கதை என்கிறார்கள். படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவருக்குமே முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்கள்தான். விக்ரம், பார்வதி, பசுபதி என தங்களது நடிப்பால் ரசிகர்களைக் கவரும் முக்கிய நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அந்தக் காலக் கதையாக இருந்தாலும் இந்தக் கால ரசிகர்களும் ரசிக்கும் விதத்தில் சுவாரசியமான படமாக இருந்தால் படம் வரவேற்பையும், வெற்றியையும் பெற வாய்ப்புள்ளது.
டிமான்ட்டி காலனி 2
தயாரிப்பு - பிடிஜி யுனிவர்சல், ஞானமுத்து பட்டறை, ஒயிட் நைட்ஸ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - அஜய் ஞானமுத்து
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நாயகனாக நடித்து 2015ல் வெளிவந்த 'டிமான்ட்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் வெளியாகிறது. ஒன்பது வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் பாகம் வருகிறது. கதவு க்ரீச் சத்தத்துடன் திறப்பது, மூடுவது, விளக்குகள் அணைந்து, எரிவது, என வழக்கமான பேய்ப் படத்தைப் பார்த்து போரடித்துப் போன ரசிகர்களுக்கு புதுவிதமான பேய்ப் படமாக இந்தப் படம் இருக்கும் என்கிறது படக்குழு. பேய்ப் படங்களுக்கென்று ஒரு வரவேற்பு இப்போதும் இருக்கிறது. அருள்நிதி, பிரியா பவானி சங்கர் இந்தப் படம் மீது அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார்களாம். இந்த ஆண்டில் இதற்கு முன்பு வெளிவந்த பேய்ப் படமான 'அரண்மனை 4' படம் மற்ற சில முக்கிய படங்களை விடவும் அதிகமாக வசூலித்து 100 கோடி சாதனையைப் புரிந்தது. இந்த 'டிமான்ட்டி காலனி 2' படத்திற்கும் அப்படி ஒரு வெற்றி கிடைத்தால் தமிழ் சினிமாவில் மீண்டும் பேய்ப் படங்களின் டிரெண்டைப் பார்க்கலாம்.
ரகு தாத்தா
தயாரிப்பு - ஹொம்பலே பிலிம்ஸ்
இயக்கம் - சுமன் குமார்
இசை - ஷான் ரோல்டன்
நடிப்பு - கீர்த்தி சுரேஷ், எம்எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி
'கேஜிஎப், காந்தாரா' படங்களைத் தயாரித்த ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் இப்படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்ட நடந்த காலத்தில் நடக்கும் கதையாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது. டிரைலரில் ஹிந்தி எதிர்ப்பு காட்சிகள் இருந்தாலும் படத்தில் ஹிந்தி ஆதரவுக் காட்சிகளும் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஹிந்தி வேண்டாமென்று போராடியவர்கள் மறுபக்கம் ஹிந்தியைப் படித்து பதவி உயர்வு பெற்றார்கள் என்பதுதான் இதில் சொல்லப்படும் கருத்தாக இருக்கிறதாம். அதை நகைச்சுவைப் பாணியில் சொல்லி இருக்கிறார்களாம். கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். கதையின் நாயகியாக கீர்த்தி நடித்து நான்கு வருடங்களுக்கு முன்பு ஓடிடியில் வந்த 'பெண்குயின்' படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இந்த 'ரகு தாத்தா' தியேட்டர்களில் வெளியாவதால் இப்படத்தின் வரவேற்பும், வெற்றியும் கீர்த்திக்கு முக்கியமானது. அப்போதுதான் தொடர்ந்து கதையின் நாயகியாக நடிக்க முடியும்.
வெளியீட்டிற்கு முன்பு வரை சிறிய படங்கள், பெரிய படங்கள் என எதுவும் இல்லை. படம் வந்த பின் விமர்சகர்கள் வரவேற்பைப் பெற்று, ரசிகர்கள் வரவேற்பைப் பெற்று எந்தப் படம் வசூலைப் பெறுகிறதோ, பாராட்டைப் பெறுகிறதோ அதுவே பெரிய படம். அந்த விதத்தில் நாளை மூன்று விதமான படங்கள் வெளியாகின்றன. அந்த மூன்றில் எது முத்திரை பதிக்கப் போகிறது என்பது முதல் காட்சி முடிந்ததுமே தெரிந்துவிடும்.