குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது | ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ கொடுத்த அப்டேட் | இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா | ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் |
சிறுகூடல்பட்டியில் உதயமாகி, சிகாகோ நகரில் அஸ்தமனமான சிங்காரத் தமிழ் ஒளி. சித்திரமாய் கவிதை பாடி, சிந்தையில் அழியா ஓவியமான 'கவியரசர்' கண்ணதாசனின் 97வது பிறந்த தினம் இன்று…
மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் வரிசையில் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞராய் அறியப்படும் 'கவியரசர்' கண்ணதாசன், தமிழ்நாட்டின் காரைக்குடிக்கு அருகிலுள்ள சிறுகூடல்பட்டி என்ற சிற்றூரில், 1927ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 24ம் நாள், சாத்தப்ப செட்டியார் மற்றும் விசாலாட்சி தம்பதியரின் 8வது மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் முத்தையா.
திரைத்துறையில் கோலோச்சியிருந்த மற்ற கவிஞர் பெருமக்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரு தனித்துவத்தோடு கவிபாடி, கலையுலகின் நிலைதனை உயர்த்தி 'கவியரசர்' என்ற பட்டத்திற்குரியவரானார் கண்ணதாசன்.
தன் சொந்த வாழ்க்கையில் தான் அனுபவித்து உணர்ந்த உண்மை நிகழ்வுகளுக்கு உயிர் கொடுத்து, கவிபாடி உள்ளங்களை கொள்ளை கொண்ட உன்னதக் கவிஞன்தான் 'கவியரசர்' கண்ணதாசன்.
காதல், சோகம், வீரம், விரக்தி, வேதனை, ஏமாற்றம், சோதனை, பக்தி என இவர் பாடாத பாடல்களே இல்லை. மனிதனின் வாழ்க்கையை மொத்தமாய் பாடிச் சென்ற முழுமையான கவிஞன்தான் 'கவியரசர்' கண்ணதாசன்.
'தான்' என்ற அகந்தை ஏதுமின்றி, 'தான்' என்ற சொல்லை கருப்பொருளாக்கி இராமச்சந்திர கவிராயர் எழுதிய “கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா? இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா? என்ற பாடலால் ஈர்க்கப்பட்ட 'கவியரசர்' கண்ணதாசனின் சிந்தையிலிருந்து பிறந்ததுதான் இந்தக் காதல் பாடல். “அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான் எப்படிச் சொல்வேனடி, அவர் கையைத்தான் கொண்டு மெல்லத்தான் வந்து கண்ணைத்தான் எப்படிச் சொல்வேனடி” என்ற “பாவமன்னிப்பு” படப்பாடல்.
ஐந்தாயிரத்திற்கும் அதிகமான திரைப்படப்பாடல்கள், நான்காயிரத்திற்கும் அதிகமான கவிதைகள், காப்பியங்கள், கட்டுரைகள் என இலக்கியத்தில் இவரது ஆளுமையும், சாதனையும் சொல்லிலடங்கா உச்சம். இவரது “சேரமான் காதலி” என்ற புதினம் சாஹித்ய அகாடமி விருதினை வென்றெடுத்தது.
இவரது “சண்டமாருதம்”, “திருமகள்”, “திரைஒலி”, “தென்றல்” போன்ற இதழ்கள் கவியரசர் கண்ணதாசனை ஆகச் சிறந்த பத்திரிகையாசிரியராக அடையாளப்படுத்தியது தமிழ் கூறும் நல்லுலகிற்கு. “அர்த்தமுள்ள இந்து மதம்”, “வனவாசம்”, “ஏசு காவியம்” போன்ற இவரது நூல்கள் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலில் இருப்பது அனைவரும் அறிந்ததே.
பாடலாசிரியர், பத்திரிகையாசிரியர், படத்தயாரிப்பாளர், வசனகர்த்தா, நடிகர், அரசியல்வாதி என்ற பன்முகத்தன்மை கொண்ட இந்த பைந்தமிழ் கவிஞன், “மாறாதிருக்க யான் வனவிலங்கல்ல, மாற்றம் என்பது மானிடத் தத்துவம், மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்” என்ற அவரது எழுத்துக்களைப்போல் ஆரம்ப காலங்களில் நாத்திகராக இருந்த இவர்,அதன்பின் ஆத்திகராக மாறினார்.
“கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே” என்று தன் முதல் பாடலை எழுதி, தான் கண்ட கனவை நனவாக்கி, நாடு போற்றும் நற்கவிஞனாய் உலகறியச் செய்த இந்த காரைமுத்துப் புலவரின் சிந்தையில் பிறந்த விந்தையான பாடல்கள் எண்ணிலடங்கா.
“மலர்ந்தும் மலராத பாதி மலர் போல”, “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது”, “மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா”, “போனால் போகட்டும் போடா”, என்று மனித வாழ்க்கையை பாடிச் சென்ற இவரது பாடல்கள் ஏராளம்! ஏராளம்!!
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டு, அரியணையை அலங்கரித்திருந்தார் கவியரசர் கண்ணதாசன்.
“எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்” இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது” என்று கவியரசர் அன்றே ஆரூடம் சொல்லி பாடிச் சென்றது போல், சிறுகூடல்பட்டியில் பிறந்து, சிகாகோ நகரில் உயிர் துறந்து, உலகத் தமிழ் உள்ளங்களில் இன்றும் உயரிய கவிஞனாய் வாழ்ந்து கொண்டிருக்கும் 'கவியரசர்' கண்ணதாசன் அவர்களின் பிறந்த தினமான இன்று அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பினை பகிர்ந்து கொள்வதில் நாம் பெருமை கொள்வோம்.