நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி | நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு பத்ம பூஷன் விருது | இயக்குனரைக் கவர்ந்த ராஷ்மிகாவின் கண்கள் | ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி | வீடு வாடகை பிரச்னை ; கலைமாமணி பட்டத்தை காணவில்லை : கதறும் கஞ்சா கருப்பு | பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் |
இசை ஒன்றைத் தவிர வேறொன்றும் அறியா இன்னிசைக் காவலன் இவன். திரையிசையின் பொற்காலத்தில் தேவலோக பாடல்கள் தந்து, தென்னக திரையுலகை ஆண்ட திரையிசை மன்னன் இவன். நல்லிசையை மெல்லிசையாய் தந்து மெய் சிலிர்க்க வைத்த 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ் விஸ்வநாதனின் 96வது பிறந்த தினம் இன்று…
கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட 'மெல்லிசை மன்னர்' எம்எஸ் விஸ்வநாதன், பாலக்காட்டிற்கு அருகில் உள்ள எலப்பள்ளி என்ற சிற்றூரில், சுப்பிரமணியன் மற்றும் நாராயணி தம்பதியரின் மகனாகப் பிறந்தார்.
பண்பாடு சிதையாத பாடல்கள் இவரது கீதங்கள். வற்றாத ஜீவநதி போல் திரையிசையை மெல்லிசையாய் தந்த 'மேஸ்ட்ரோ' இவர்.
ஆரம்ப காலங்களில் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்த எம்எஸ் விஸ்வநாதன், ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த “கண்ணகி” திரைப்படத்தில் பால கோவலனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து, பின் அது தனது கைநழுவிப் போக, அதே அலுவலகத்தில் ஆபிஸ் பையனாக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்து பணியாற்றி வந்தார்.
அங்கே எஸ்வி வெங்கட்ராம அய்யர், கோவிந்தராஜுலு நாயுடு போன்ற இசை வல்லுனர்கள் பணிபுரிவதை நேரடியாக காணும் வாய்ப்பினை பெற்றிருந்த இவர், பின்னாளில் எஸ்எம் சுப்பையா நாயுடு, சிஆர் சுப்பராமன் ஆகிய இசை ஜாம்பவான்களிடம் ஆர்மோனிஸ்டாகவும், உதவியாளராகவும் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்து திரையிசையில் கவனம் செலுத்தலானார்.
இங்குதான் இவரது இணையரான இசையமைப்பாளர் டிகே ராமமூர்த்தியையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இசையமைப்பாளர் சிஆர் சுப்பராமனின் எதிர்பாராத மறைவால் அவர் இசையமைத்து வந்த “தேவதாஸ்” திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் சில பாடல்களுக்கு இசையமைக்கும் பொறுப்பு இவர்களை வந்து சேர, இசையமைப்பாளர்களாக திரையிசையின் களம் கண்டனர்.
ஒரு முழு இசையமைப்பாளர்களாக இந்த இரட்டையர் அறிமுகமானது கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் அவர்களின் “பணம்” திரைப்படத்தில் தான். அதன் பின் 1960களில் இவ்விருவரின் இசை வார்ப்பில் வந்த திரையிசைப் பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியா காவியப் பாடல்களாக இன்றும் நாம் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பது அனைவரும் அறிந்ததே.
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காலத்தால் அழியா எண்ணற்ற காவியப் பாடல்களைத் தந்த இந்த இரட்டையர், 1965ஆம் ஆண்டு வெளிவந்த “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்திற்குப் பின் பிரிந்து தனித்தனியே இசையமைக்கத் தொடங்கினர்.
சாக்ஸபோன், கிட்டார், ட்ரம்பட், கிளாரினெட் என மேலைநாட்டு இசைக்கருவிகளை அதிகம் பயன்படுத்தி, திரையிசையில் புதுமை பல படைத்து வெற்றி கண்டார் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன். கர்நாடக சங்கீதம் மட்டுமின்றி, ஹிந்துஸ்தானி ராகங்களையும் அழகுற கையாண்டு அற்புதமான பாடல்கள் பல தந்து அசைக்க முடியா இசை வித்தகராக உயர்ந்து நின்றார் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன்.
திரையிசைப் பாடல்கள் தவிர்த்து, இவரது தனிப்பாடல்களும் தனிச்சிறப்பு பெற்ற பாடல்களாகவே இன்றும் நாம் கேட்டு மகிழ்ந்து கொண்டுதான் இருக்கின்றோம். தமிழ்தாய் வாழ்த்துப் பாடலான “நீராறும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்” என்ற பாடலை மோகன ராகத்தில் இசையமைத்து அழகுபட தந்த இவர், “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே” என கிருஷ்ண பரமாத்மாவின் புகழையும், “ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ” என கண்ணனை உறங்க வைக்க தாலாட்டுப் பாடியும் நம் செவிகளுக்கு விருந்தளித்தார் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன்.
இவரது இசை எந்த அளவிற்கு இனிமையானதோ அதைவிட இவரது பழகும் பண்பும், பேசும் தன்மையும் மிக மிக இனிமையானதாகவே இருக்கும். யார் மனமும் புண்படும்படியோ, வருத்தப்படும்படியோ பேசியதே இல்லை எனலாம். இன்னும் எத்தனை எத்தனையோ உயரிய விருதுகள், பட்டங்கள் கொடுத்து கவுரவப்படுத்தப்பட வேண்டிய இந்த இசைமேதை, நான் சின்னவன் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என பணிவாக கூறுவதை வழக்கமாகக் கொண்டு வளரும் இளைய சமுதாயத்திற்கு ஒரு முன்னுதாரணமாகவும், வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகவும் வாழ்ந்து மறைந்தவர்தான் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன்.
இயக்குனரின் தேவையறிந்து, கதையோட்டத்தின் தன்மையறிந்து, கதாபாத்திரங்களின் உணர்வுகளுக் கேற்ப, ரசிகர்களின் நாடித் துடிப்பறிந்து ரசனை மிகு பாடல்களைத் தந்த மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதனை இன்றல்ல என்றென்றும் “நெஞ்சம் மறப்பதில்லை” என கூறி அவரது பிறந்த தினமான இன்று அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பினை பகிர்ந்து கொள்வதில் நாம் பெருமை கொள்வோம்.