ஏற்றி விட்ட ஏணியை மறந்து போன நடிகர்கள் : பாவமில்லையா பாரதிராஜா...! | மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் | 'பேடி' படத்தின் புதிய அப்டேட் | தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! |
மனம் மகிழும் திரையிசையின் துணை கொண்டு, மனித குலத்தின் மாண்பினை பாடித் தந்த மகத்தான கவிஞனாக, இருபதாம் நூற்றாண்டு கண்ட இணையற்ற இசைத் தமிழாக அறியப்படும் 'கவியரசர்' கண்ணதாசன், ஒரு பாடலாசிரியராக, பத்திரிகை ஆசிரியராக, படத்தயாரிப்பாளராக, வசனகர்த்தாவாக, நடிகராக, அரசியல்வாதியாக என பன்முகத்தன்மை கொண்ட பைந்தமிழ் கவிஞனாக பன்னெடுங்காலமாய் பயணித்து, பின்னாளில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம் ஜி ஆர் அவர்களால் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டு, அரியணையை அலங்கரித்த இந்த ஆற்றல்மிகு கவிஞனின் அறிமுகப் பாடலின் அனுபவப் பின்னணியைத்தான் நாம் இங்கே காண இருக்கின்றோம்.
அக்காலத்தில் முன்னணி தமிழ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான “ஜுபிடர் பிக்சர்ஸ்”, ஏராளமான படங்களை எடுத்துக் கொண்டிருந்த நேரம் அது. அங்கு கதை எழுதுவதற்கோ, வசனம் எழுதுவதற்கோ வாய்ப்பேதும் கிடைக்குமா? என்ற நம்பிக்கையோடு ஓர் இளைஞன் அங்கு வந்து, நிர்வாகி வெங்கடசாமி என்பவரைப் பார்த்து வாய்ப்பு கேட்க, பத்து நாள்கள் கழித்து வந்து பார்க்குமாறு கூறி அனுப்பிவிட்டார் நிர்வாகி வெங்கடசாமி. நம்பிக்கையோடு பத்தாவது நாள் வெங்கடசாமி முன் வந்து நின்ற அந்த இளைஞரைப் பார்த்து, என்ன மாதிரியான வேலையை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? என வெங்கடசாமி கேட்க, நான் அருமையாக கதை எழுதுவேன். அற்புதமாக வசனம் எழுதுவேன் என அந்த இளைஞர் பதில் கூற, அதற்கெல்லாம் ஆட்கள் இங்கு இருக்கின்றனர். உனக்கு பாடல் எழுத வருமா? என வெங்கடசாமி அந்த இளைஞனைப் பார்த்து கேட்க, வரும் என தலையசைத்த அந்த இளைஞனை அழைத்துக் கொண்டு படத்தின் இயக்குநரான கே ராம்னாத்தின் முன் நிறுத்தினார்.
ஆண் வேடமிட்ட பெண் ஒருத்தி இன்னொரு பெண்ணுக்கு ஆறுதல் கூறுவது போல் வரும் காட்சிக்கு பாடல் வேண்டும் என பாடலுக்கான காட்சியை விளக்கி, முதலில் பாடலை எழுதிக் கொண்டு வாருங்கள் அதன்பின் இசையமைப்பாளரோடு அமரலாம் என்று இயக்குநர் கே ராம்னாத் கூற, உடனே பாடலை எழுதித் தந்தார் அந்த இளைஞர்.
“கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே” என்று எழுதியிருந்த அந்த இளைஞரின் பாடல் இயக்குநர் கே ராம்னாத்திற்கு பிடித்துப் போக, சன்மானமாக 100 ரூபாய் அந்த இளைஞனுக்குத் தந்தார். ஷேக்ஸ்பியரின் “ட்வெல்த் நைட்” என்ற நாவலை ஜுபிடர் நிறுவனத்திற்காக “கன்னியின் காதலி” என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கம் செய்ய, அதில்தான் இந்தப் பாடல் இடம் பெற்றது. பாடலை எழுதிய அந்த இளைஞர் வேறு யாருமல்ல. பின்னாளில் கலையுலகமும், தமிழ் கூறும் நல்லுலகமும் கொண்டாடித் தீர்த்த 'கவியரசர்' கண்ணதாசன்.