தற்போது சிறுத்தை சிவா இயக்கியுள்ள கங்குவா படத்தில் நடித்திருக்கும் சூர்யா, இதையடுத்து சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தில் நடிக்க போகிறார். அந்த படத்தை முடித்ததும் மகாபாரதத்தை பின்னணியாக கொண்ட கதையில் தயாராகும் கர்ணா என்ற பான் இந்தியா படத்தில் நடிக்கப் போகிறார். 500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்தில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நாயகியாக நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தற்போது தயாரிப்பாளரும் ஜான்வி கபூரின் தந்தையுமான போனி கபூர், தான் அளித்த ஒரு பேட்டியில், சூர்யா நடிக்கும் கர்ணா படத்தில் ஜான்வி கபூர் நடிப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். அதோடு, ராம்சரண் தேஜாவின் 16வது படத்தில் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதையும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது கர்ணா படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.