‛பிக்பாஸ் சீசன் 8' - கமலுக்கு பதில் களமிறங்கிய விஜய் சேதுபதி : கோலாகலமாய் துவங்கியது | சிவகார்த்திகேயனுக்கு விஜய் அளித்த காஸ்ட்லி வாட்ச்! | ஜூனியர் என்டிஆர்.,-ஐ இயக்கும் நெல்சன்? | வெறுப்பு செய்தி! - நெட்டிசன்களுக்கு பிரியாமணி வைத்த வேண்டுகோள்!! | அக்டோபர் 18ல் வெளியாகும் விமலின் ‛சார்' | கால்பந்து போட்டியை நேரில் பார்க்க ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற ஷாலினி அஜித் - ஆத்விக்! | கவர்ச்சியாக உடலை காட்டக்கூடாது என்பதில் உறுதி: பிரியா பவானி சங்கர் ‛ஓபன் டாக்' | ‛மும்பையில் பிறந்தாலும் மனசுல தமிழ் பொண்ணுதான்': ஹன்சிகா திடீர் மதுரை விசிட் | கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் இதோ! | பில்லா, அசல் வரிசையில் ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த பிரபு |
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஏஆர் ரஹ்மான்
திரைத்துறையில் கதாநாயகனாக தான் உண்ணும் அதே தரமான உணவே எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று போராடி வென்றார். பசியாற்றிய வள்ளல் என்று இன்று எல்லோரும் அவரைப் புகழ்வது நெகிழ்ச்சியாக இருக்கிறது. #RIPCaptainVijayakanth
சூர்யா
அவருடன் பணியாற்றிய, பேசிப்பழகிய, சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை… யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதே இல்லை.. கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்து புரட்சிக் கலைஞனாக உயர்ந்த அண்ணன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!!
ராதிகா சரத்குமார்
திரை உலகில் கடுமையான உழைப்பால் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் விஜயகாந்த்! அதேபோல் அரசியலிலும் ஈடுபட்டு அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றவர்..!! விஜயகாந்த் வில்லனாக நடித்த காலத்திலிருந்தே நிறைய படங்களில் அவருடன் நான் நடித்திருக்கிறேன்..!! தன்மானத்தை தனது உயிரை விட பெரிதாக கருதியவர் அவர்.!! சினிமாவில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து அடித்தட்டு மக்களின் மனங்களை கவர்ந்தவர் ...!!
அப்படிப்பட்ட விஜயகாந்த் சில வருடங்களாக உடல் நலம் குன்றி அடிக்கடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது எல்லோருக்குமே அது வேதனையாக இருந்தது..!! அவருடைய நண்பர்களும் ரசிகர்களும் மிகவும் துடித்து போனார்கள்..!! விஜயகாந்த் இந்த உலகில் இனி இல்லை என்பதை யாருடைய மனமும் ஏற்றுக் கொள்ளாது...!! அந்த அளவுக்கு மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்..!!
இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசின் முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகளை நடத்த முன் வந்தது விஜயகாந்த் அவர்களுக்கு அளித்த உண்மையான கௌரவம் என்று நான் கருதுகிறேன்...!!
ஏழை எளிய மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்ற விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்...!!
இயக்குனர் லிங்குசாமி
சினிமா, அரசியல் இரண்டிலும் இரு துருவங்களை எதிர்கொண்ட
ஆச்சர்யம் நீ.
நீ இன்ஸ்டியூட்டில் பயிலவில்லை.. இன்ஸ்டியூட்டில் பயின்ற பலரை இயக்குநராக்கியிருக்கிறாய்..
மக்களின் கண்ணீரை உணர்ந்தவன் நீ
எதிரே நிற்பவர் பசி அறிந்தவன் நீ. இதயத்திலிருந்தே எல்லா முடிவுகளையும் எடுத்தாய். அதனாலேயே பல இதயங்களை வென்றாய். போய் வாருங்கள் கேப்டன். #RIPCaptainVijayakanth
அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்...!!
தனுஷ்
ஆழ்ந்த இரங்கல் கேப்டன் சார்
விக்ரம் பிரபு
அன்பு + கம்பீரம் = கேப்டன்! எனது அன்பும் மரியாதையும் என்றென்றும்
தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு
'கேப்டன்' விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ் திரையுலகத்திற்கு மிகப்பெரும் இழப்பு. ஒரு நடிகராக தனக்கென்று தனி முத்திரை பதித்ததோடு மட்டுமல்லாமல் சிறந்த மனிதநேயம் கொண்டவராக, தனது உறவுகளான திரைத் துறையினருக்கு சிறப்பான வகையில் உதவி புரிந்தவராக, நல்ல அரசியல்வாதியாக, குடும்ப தலைவனாக, அனைவருக்கும் சிறந்த நண்பராக என எல்லாவகையிலும் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர். இது ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு. அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்! ஓய்வெடுங்கள் 'கேப்டன்'.
டி ராஜேந்தர்
திரை உலகில் ஒரு நடிகராய் உதயமாகி, புரட்சிகலைஞராய் பெயரெடுத்து, கேப்டன் என்று தலையெடுத்து, தென்னிந்திய நடிகர் சங்க தலைவராய் பதவி வகித்து, தேமுதிக தலைவராய் உருவெடுத்து, தமிழக எதிர்கட்சி தலைவராய் கால் பதித்து, தனகென்று ஒரு தனி பெயரை ஈட்டிய அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் இயற்கை எய்தினார் என்ற செய்தி எனது இதயத்தை ஈட்டி போல் தாக்கியது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கஸ்தூரி ராஜா
500 பேர்களுக்கு மேல் சர்ஜரி செய்வதற்கு என் மகள் டாக்டர் என்ற அடைமொழி பெறுவதற்கு காரணமாக இருந்தவர் கேப்டன் அவர்கள் தான். அவர் இல்லையென்றால் ஒரு டாக்டர் குடும்பம் இருந்திருக்காது. தன் மகளுக்கு மருத்துவ படிப்புக்கு சீட் வாங்கி கொடுத்தை கண்ணீருடன் இயக்குனர் கஸ்தூரி ராஜா பதிவு.
கார்த்தி
கேப்டன்' விஜயகாந்த் காலமானார் என்கிற செய்தி என் மனதை கடும் சோகத்தில் ஆழ்த்துகிறது. அவரின் மறைவு, திரையுலகிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கே மாபெரும் இழப்பு. தான் முன்னெடுத்த எல்லா செயல்களிலும் / பொறுப்புகளையும் வென்று காட்டியதில் 'கேப்டனுக்கு' நிகர் உண்டோ என்றே எண்ண தோன்றுகிறது. நடிப்பு என்பதைத் தாண்டி சக நடிகர்கள், பெப்சி தொழிலாளர்கள், நடிகர் சங்கம் உள்ளிட்ட அனைவரது முன்னேற்றத்திலுமே கேப்டனின் பங்கு அளப்பரியது. தென்னிந்திய நடிகர் சங்கத்தை, கடனில் இருந்து மீட்டெடுத்த இமாலய சாதனை 'கேப்டன்' அவர்களையே சாரும்.
எல்லாரையும் சமமாக பாவித்து, சிறந்த பண்பாளராக திகழ்ந்த 'கேப்டன்' அவர்களை நினையும் போது மிகப்பெரிய பெருமிதம் மட்டுமே இதயத்தில் நிற்கிறது. வெள்ளி விழா கதாநாயகனாக, உணவளிப்பதில் வள்ளலாக, நடிகர் சங்க தலைவராக, வெளிப்படையான அரசியல் தலைவராக, நல்லுள்ளம் படைத்த சிறந்த மனிதராக, நாடி வரும் அனைவருக்கும் பெரிய மனம் படைத்த ஒரு அண்ணனாக, தலைமை பண்போடு வாழ்ந்து காட்டிய 'கேப்டன்' அவர்களின் வாழ்க்கை, நம் எல்லாருக்கும் ஒரு முன்னுதாரணம்.
'கேப்டன்' அவர்கள் மறைந்த இந்த தருணத்தில் முன்னின்று செய்ய வேண்டிய பொறுப்பில் இருந்தும், நான் வெளிநாட்டில் இருப்பதினால், அவரின் மறைவுக்கு உடனே நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத சூழ்நிலை , என்னை மிகவும் மனம் வருந்தச்செய்கிறது. கேப்டன் விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், தொண்டர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் சங்கத்திற்காகப் பல நல்ல முன்னெடுப்பைச் செய்த அவரது மறைவு, நடிகர் சங்கத்திற்கும் தனித்த பேரிழப்பாகும்.
விஷால்
என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிக உன்னதமான மனிதர்களில் ஒருவர் கேப்டன் விஜய்காந்த். அண்ணாவின் மறைவைக் கேட்டு நான் அங்கு பக்கத்தில் இல்லையே என்ற குற்ற உணர்ச்சியால் உள்ளேன். நான் உங்களிடமிருந்து சமூக சேவை என்பதை கற்றுக்கொண்டேன். இன்று வரை உங்களைப் பின்தொடர்ந்தேன். உங்கள் பெயரில் அண்ணா அதை நான் தொடர்வேன். நம் சமுதாயத்திற்குத் தேவையானவர்களை கடவுள் ஏன் இவ்வளவு வேகமாக அழைத்துச் செல்கிறார். உங்களை கடைசியாக ஒரு முறை பார்க்க வராததற்கு வருந்துகிறேன். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். நீங்கள் நீண்ட காலமாக நினைவில் இருப்பீர்கள். ஏனென்றால், மக்களுக்கும், நடிகர் சங்கத்துக்கும் நீங்கள் செய்த சேவை எல்லோர் இதயங்களிலும் என்றும் நிலைத்து நிற்கும்.
சோனுசூட்
“கள்ளழகர்” என்னுடைய முதல் படம், லெஜண்ட் “விஜயகாந்த்” சார் கொடுத்த பரிசு.. என்னுடைய இந்த ஸ்டில் அவர் கண்ணில் பட்டது, கொஞ்ச நேரத்தில் நான் அவருடன் படப்பிடிப்பில் இருந்தேன்.. என் கேரியருக்கு நான் கடன்பட்டிருக்கிறேன்.. உங்களை மிஸ் செய்வேன். ஆழ்ந்த இரங்கல் கேப்டன்.
பிரகாஷ் ராஜ்
மிஸ் யூ கேப்டன். அற்புதமான மனிதருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. தைரியமான மற்றும் அக்கறையுள்ள மனிதர். மிஸ் யூ.
குஷ்பு
தங்க மனம் படைத்தவரான கேப்டன் விஜயகாந்தை நாம் இழந்து இருக்கிறோம். அவர் உண்மையிலேயே தகுதியான மனிதர். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று நடிகை குஷ்பு எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
யோகிபாபு
விஜயகாந்த் சார் பிரிந்தாலும் அவர் பெயரும் புகழும் நிலைத்திருக்கும். நிறைய நல்ல விஷயங்களை எனக்கு கற்று கொடுத்துள்ளார் கேப்டன் விஜயகாந்த். சின்னவர்கள், பெரியவர்கள் என எல்லோரையும் மதிக்கும் நல்ல உள்ளம் படைத்தவர். அவரின் இறுதி ஊர்வலத்தில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. குருவாயூரில் பிரித்விராஜ் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். அவரின் குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விஜயகாந்த்தின் ஆன்மா சாந்தி அடைய நான் வணங்கும் முருகப்பெருமானை வேண்டுகிறேன்.