''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்தித் தர வேண்டுமென தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு சில தினங்களுக்கு முன்பு கோரிக்கை வைக்கப்பட்டது. அது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துக்கள் வெளியாகின. பல தயாரிப்பாளர்கள் அந்த கட்டண உயர்வு கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மற்றொரு தியேட்டர் சங்கமான, தமிழ்நாடு தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “தமிழகத்தில் சினிமா டிக்கெட் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை மனு கொடுத்தது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்தான் மனு கொடுத்திருக்கிறார்கள். எங்களுடைய சங்கத்திற்கு அதில் உடன்பாடு இல்லை. தமிழகத்தில் தற்போதுள்ள சினிமா டிக்கெட் கட்டணங்களே போதுமானது.
அதிகபட்ச கட்டணமாக ரூ.150 மற்றும் வரிகள் அனைத்தும் சேர்த்து ரூ.190 வருகிறது. ஓடிடி தாக்கத்தினால் ஏற்கனவே மக்கள் தியேட்டர்களுக்கு வருவதில்லை. இப்போதெல்லாம் படங்களின் வசூல் மிகவும் குறைவாக உள்ளது. சிறிய ஊர்களில் தியேட்டர்களை நடத்தவே முடிவதில்லை. இப்போதிருக்கும் கட்டணங்களுக்கே ஆட்கள் வருவதில்லை, இன்னும் அதிகமாக்கினால் வட இந்தியாவில் சிங்கிள் தியேட்டர்கள் காணாமல் போனது போல் இங்கும் போய்விடும்.
எங்களது முக்கிய கோரிக்கைகள் இரண்டே இரண்டுதான். மின்சாரக் கட்டணம், சொத்துவரிக் கட்டணம் அதிகமாகிவிட்டது. தற்போதுள்ள தியேட்டர்கள் பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தித் தர வேண்டும். ஏசி தியேட்டர்களுக்கு ரூ.10ம், ஏசி அல்லாத தியேட்டர்களுக்கு ரூ.5ம் ஏற்றித் தர வேண்டும். அடுத்து, தமிழக அரசு விதிக்கும் உள்ளாட்சி கேளிக்கை வரியை நீக்கித் தர வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை வைக்கிறோம். இந்த கேளிக்கை வரி, ஜிஎஸ்டி வந்த பிறகு தமிழகம், கேரளாவில் மட்டுமே இருக்கிறது. இதனால், டிக்கெட் கட்டணம் 20 ரூபாய் வரை குறையும்.
250 ரூபாய் என கட்டணத்தை உயர்த்தினால் சிறிய நடிகர்களின் படங்கள் வரவே வராது. மாநகரம் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் தியேட்டர்கள் இருக்க வேண்டும். கட்டணத்தை குறைப்பதைத்தான் கவனிக்க வேண்டும், இன்னும் கட்டணத்தை உயர்த்தினால் வட இந்தியா போல் சிறிய தியேட்டர்கள் முழுவதுமாக அழிந்து, மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் மட்டுமே இருக்கும்.
மாநகரத்தில் என்ன மின்சார கட்டணம் கட்டுகிறார்களோ, அதேதான் கிராமப்புற தியேட்டர்களிலும் இருக்கிறது. அவர்களுக்கு டிக்கெட் கட்டணம் குறைவாக உள்ளது. அதை மட்டும் அதிகப்படுத்தித் தர வேண்டும். ஒரே மாதிரியாக 150 ரூபாய்க்கு மிகாமல் ஏசி தியேட்டர்களுக்கும், 120க்கு மிகாமல் ஏசி அல்லாத தியேட்டர்களுக்கும் வைத்தால் வரியுடன் சேர்த்து 190 மற்றும் 150 என கட்டணம் வரும். சிறிய படங்கள் வரும் போது நாங்கள் அதை 120 அல்ல 100 என வைத்துக் கொள்வோம்.
சினிமா டிக்கெட் கட்டணங்களை உயர்த்தினால் மாநகர தியேட்டர்களை மட்டுமே நடத்த முடியும். பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே ஓடும். கிராமப்புற தியேட்டர்களை மூட வேண்டிய சூழல் உருவாகும், சிறிய நடிகர்களின் படங்கள் ஓடவே ஓடாது. பெரிய நடிகர்களின் படங்களால் வருடத்திற்கு இரண்டு மாதங்கள் மட்டுமே தியேட்டர்களுக்கு படங்களைத் தர முடியும். மீதி பத்து மாதங்கள் சிறிய நடிகர்களின் படங்களால்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தியும், கேளிக்கை வரியையும் நீக்கினாலே போதும், தியேட்டர்களை நடத்த முடியும்,” என்று தெரிவித்துள்ளார்.