''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகத்தான கலைப் படைப்புகளில் ஒன்று “வியட்நாம் வீடு” திரைப்படம். இந்தபடம் வெளிவந்து, இன்றோடு 53 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் இத்தருணம், இத்திரைப்படம் நமக்குள் ஏற்படுத்திய பாதிப்பு இன்னும் ஏராளமான ஐம்பது ஆண்டுகளை கடந்தும் நிலைத்திருக்கும் என்பதுதான் உண்மை.
“வியட்நாம் வீடு” சுந்தரம் அவர்களின் மேடை நாடகமான இக்கதைக்கு அவரையே திரைக்கதை, வசனம் எழுத வைத்து, வெள்ளித்திரையில் விருந்தாக்க நடிகர் சிவாஜி கணேசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான “சிவாஜி புரொடக்ஷன்ஸ்” சார்பில் தயாரித்து, நடித்திருந்த மாபெரும் திரைக்காவியம்தான் இந்த “வியட்நாம் வீடு”.
நடிகர் திலகத்தின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவர் என அறியப்பட்ட இயக்குநர் பி மாதவன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு, திரையிசைத் திலகம் கே வி மகாதேவனின் இசை வார்ப்பு இத்திரைப்படத்தின் வெற்றிக்கு துணை நின்றது.
“உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி” என்று மகாகவி பாரதியின் பாடல் வரிகளை பல்லவியாக சுமந்து வரும் இப்பாடலின் சரணத்தில் உறவுகள் தந்த வலி, ஏமாற்றத்தை உணர்வுபூர்வமாக எழுதி உச்சம் தொட்டிருப்பார் கவியரசர் கண்ணதாசன்.
“குணசேகரன்”, “சிக்கில் சண்முகசுந்தரம்”, “பாரிஸ்டர் ரஜினிகாந்த்”, போன்ற நடிகர் திலகம் ஏற்று நடித்திருந்த ஒருசில கதாபாத்திரங்கள் எப்படி நம் நினைவுகளில் ஆழமாக பதிந்திருக்கிறதோ அது போன்றுதான் இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ஏற்று நடித்திருந்த “பிரஸ்டீஜ்” பத்மநாபன் என்ற கதாபாத்திரமும். நடை, உடை, பாவனை, சிகை அலங்காரம் என அனைத்தும் ஆச்சார அனுஷ்டானங்களை கடைபிடிக்கும் ஒரு பிராமணரைப் போலவே படத்தில் வாழ்ந்திருப்பார் சிவாஜிகணேசன்.
இத்திரைப்படம் வெளிவந்த பின்பு நடிகர் திலகத்தின் கதாபாத்திரம், அவரது நடிப்பு, அங்க அசைவுகள், வசன உச்சரிப்பு என இவைகள் பலரது நிஜ வாழ்வில் ஒரு பாதிப்பை உண்டு பண்ணியது என்பது தான் உண்மை. வலுவான கதை, தேர்ந்த கலைஞர்கள், நேர்த்தியான இயக்கம், கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் ஏற்ற பாடல் வரிகள், உயிரோட்டமான இசை என அத்தனையும் மொத்தமாய் தந்து, தமிழ் ரசிக நெஞ்சங்களில் இன்றும் நிலைத்து நிற்கும் இந்த 'கலைப் பொக்கிஷம்' இன்னும் காலங்கள் கடந்தும் பேசப்படும் ஒரு “திரை ஓவியம்”.