பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? | அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி | ஹீரோ ஆனார் ராம்கோபால் வர்மா | தர்மேந்திரா பிறந்தநாளில் ரசிகர்களின் பார்வைக்காக பண்ணை வீடு திறப்பு |

பழம்பெரும் நடிகை சி.கே.சரஸ்வதி என்றால் இன்றைய தலைமுறைக்கு தெரியாது. 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் பத்மினிக்கு தாயாக நடித்தவர் என்றால் புரிந்து கொள்வார்கள். படங்களில் வில்லியாகவும், பணக்காரியாகவுமே நடித்த சரஸ்வதி கடைசி காலத்தில் வறுமையில் வாழ்ந்தார், அரசு கொடுத்த மாதம் 2 ஆயிரம் ரூபாயை வாங்குவதற்கு நடையாக நடந்தார் என்பதுதான் காலத்தின் சோகம்.
உயரம் குறைவான, பருமன் உருவ தோற்றம், கணீர் குரல் வளம், வெடுக்கு பேச்சு, ஏற்றம் இறக்கத்துடன் வசனங்கள் என எதிராளிகளை அடக்கி விடும் ஆளுமை என சி.கே.சரஸ்வதியின் பாணி. 40 ஆண்டுகாலம் வில்லத்தனமான கதாபாத்திரங்களிலேயே நடித்து தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கியவர் சி.கே. சரஸ்வதி.
குணச்சித்திர கதாபாத்திரங்கள் மற்றும் அம்மாவாக பல படங்களில் நடித்திருந்தாலும் கொடுமைக்கார மாமியாராக அவர் நடித்த படங்களே ஏராளம். பெண் ரசிகைகளின் வெறுப்பை சம்பாதித்தது அவரின் நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம். 'பாகப்பிரிவினை' அகிலாண்டம், 'தில்லானா மோகனாம்பாள்' வடிவு, 'வாணி ராணி' நாகவேணி உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் காலத்தை கடந்தும் நிற்கிறது.
1945ம் ஆண்டு 'என் மகன்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சி.கே.சரஸ்வதி. அதைத்தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது 'பாகப்பிரிவினை'. பெரியம்மா கதாபாத்திரத்தை கூட இவ்வளவு வில்லத்தனமான செய்ய முடியுமா என ஆச்சரியப்படுத்தினார்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, நான் சொல்லும் ரகசியம், நல்ல இடத்து சம்பந்தம், பாக்கியலட்சுமி, பூலோக ரம்பை, மங்கள வாத்தியம், நவரத்தினம், பார்த்தால் பசி தீரும், லட்சுமி கல்யாணம், பாத காணிக்கை, மகாகவி காளிதாஸ், படித்தால் போதுமா, இரு கோடுகள், நவராத்திரி போன்றவை அவர் நடித்த முக்கியமான படங்கள். 1998ம் ஆண்டு வெளியான 'பொன்மானை தேடி' திரைப்படம் தான் இறுதி படமாக அமைந்தது.
திரையில் பட்டு புடவையும், நகைகளையும் அணிந்து கம்பீரமாக தோற்றமளித்தவர், கடைசி காலத்தில் கட்டிக் கொள்ள நல்ல புடவை கூட இல்லாமல் கிழிந்த ஆடைகளுடன் வாழ்ந்தார். நலிந்த திரை கலைஞர்களுக்கு வழங்கப்படும் 2000 ரூபாய்க்காக கால்கடுக்க அலைந்து திரிந்து வாங்கி சென்ற காட்சிகளைகூட அன்றைய மக்களால் பார்க்க முடிந்தது. இருந்த சொத்துக்களை எல்லாம் பிடுங்கிக் கொண்டு கணவர் கைவிட்டதாலேயே அவர் வறுமையில் வாடி மறைந்ததாக சொல்வார்கள்.




