4 கோடி பார்வைகளை கடந்த ‛கோல்டன் ஸ்பாரோ' பாடல்! | இயக்குனர் பீம்சிங்கின் 100வது பிறந்தநாள்: நடிகர் பிரபு நெகிழ்ச்சி | ஜனவரி மாதத்தில் வா வாத்தியார் படத்தை வெளியிட திட்டம் | 'சித்தார்த் 40' படத்தில் இசையமைப்பாளராக இணைந்த பாம்பே ஜெயஸ்ரீ மகன் | வீர தீர சூரன் படத்திலிருந்து வெளிவந்த துஷாரா விஜயன் பர்ஸ்ட் லுக் | பிரியங்கா சோப்ரா கதை : துஷாரா ஆசை | அதிக படங்கள் நடிக்காததற்கு உடல்நல குறைவு தான் காரணம் : துல்கர் சல்மான் | மகிழ்ச்சியை உணர வெளியில் இருந்து உதவியை எதிர்பார்க்காதீர்கள் : மஞ்சு வாரியர் | ரசிகர் கொலை வழக்கு : நடிகர் தர்ஷினின் ஜாமீன் மனு மீண்டும் நிராகரிப்பு | பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் கிச்சா சுதீப் |
சமுத்திரகனி, தம்பி ராமய்யா, தீபக் ஹரி, சஞ்சிதா ஷெட்டி, ஷெரின், ஸ்ரீரஞ்சனி உள்பட பலர் நடித்த படம் விநோதய சித்தம். இந்த படம் கடந்த மாதம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தின் கதையை ஸ்ரீவத்சன் என்பவர் நாடகமாக எழுதி இருந்தார். தற்போது படம் வெளிவந்த நிலையிலும் ஸ்ரீவத்சன் தற்போது அதனை நாடகமாக நடத்தினார்.
நேற்று சென்னை நாரத கான சபாவில் நடந்த இந்த நாடகத்தை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். பின்னர் நாடக கலைஞர்களை பாராட்டி பேசினார். நாடகத்தை தொடர்ந்து நடத்த ஸ்ரீவத்சன் முடிவு செய்துள்ளார்.
கமல்ஹாசன் பேசியதாவது “நான் இங்கு வந்ததற்கு மிக முக்கிய காரணம் கேபி சார் தான். அவரையும் என்னையும் தனியாக பிரிக்க முடியாது. எனக்கு கிடைக்காத பாக்கியம் ஶ்ரீவத்சனுக்கு கிடைத்திருக்கிறது. கேபி சாருக்கு அவர் கதை எழுதியிருக்கிறார். அவருக்கு நிறைய கதை சொல்லியிருக்கிறேன் ஆனால் எழுதியதில்லை. ஒரு நூல் கொடுத்தால் போதும் அதை அழகான துணியாக மாற்றிவிடுவார் கேபி சார். இன்னொரு காரணம் நானும் டிகேஎஸ் நாடகக் குழுவிலிருந்து வந்தவன். ஒரு முறை பள்ளியில் மாடியில் இருந்து விழுந்து விட்டேன். அதை அப்போது, பையன் பிழைத்து கொண்டானா என டிகேஎஸ் குழுவில் விசாரிக்க, களத்தூர் கண்ணம்மாவில் நடித்த பையன் என்று சொல்லியிருக்கிறார்கள். என்னை நாடகத்தில் நடிப்பியா எனக் கேட்டு நாடகக் குழுவில் சேர்த்துக் கொண்டார்கள். அப்படித்தான் நாடக குழுவில் இணைந்தேன்.
எல்லோரும் நாடகத்திலிருந்து சினிமாவுக்கு போவார்கள், ஆனால் நான் சினிமாவில் இருந்து நாடகத்திற்கு வந்தேன், அந்த நாடகங்கள் பேரனுபவமாக இருந்தது. மீண்டும் என்னை சினிமாவை நோக்கி தள்ளி விட்டது நாடகம் தான். மீண்டும் நாடக மேடைக்கு வர நிறைய ஆசைப்பட்டேன், யாரும் என்னை இணைத்து கொள்ளவில்லை. நாடக மேடை என்பது மிகச்சிறப்பானது ஶ்ரீவத்சன் எடுத்துக் கொண்ட முயற்சி மிகச்சிறப்பானது.
நான் நாடகத்தின் ரசிகன் என்பது தான் எனது முதல் தகுதி. நிஜமான திறமையை அடையாளப்படுத்துவது நாடக மேடை தான். சினிமாவில் நான் நடிக்க கூட தேவையில்லை, ஹோலோகிராம் மூலம் என் போன்ற உருவத்தை கொண்டு வந்து விட முடியும் அந்தளவு டெக்னாலஜி வந்துவிட்டது. ஆனால் இங்கு மேடையில் நிகழ்வது தான் நிஜமான திறமை. ஒரே ஒரு தடவை பார்த்த சோ அவர்களின் நாடகத்தின் ஒவ்வொரு காட்சியும் எனக்கு இப்போதும் ஞாபகமிருக்கிறது. எனக்கு நல்ல நாடகங்கள் பார்க்க மிகவும் பிடிக்கும். மீண்டும் நாடகங்கள் நடிக்க ஆசை. இவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கண்டிப்பாக வேறு மேடை ஏற உள்ளேன். அரசியல் மேடை இல்லை. மும்பையில் சசிகபூர் அவர்கள் பிரித்வி தியேட்டர் என ஒன்றை நிறுவியிருக்கிறார்கள். அது போல் ஒன்றை இங்கு அமைக்க ஆசைப்படுகிறேன்.
இந்த நாடகத்தை பொறுத்த வரையில் நிறைய சொல்ல வேண்டும். எனது உத்தம வில்லனில் ஒரு பாடல் வரும் சாகாவரம் போல் சோகம் உண்டோ என்ற பாடல் அந்த பாடலின் மேம்பட்ட வடிவமாகத் தான் இந்த நாடகம் உள்ளது. மரணத்துடனான அழகான உரையாடலாக இந்த நாடகம் அமைந்துள்ளது. இந்த உரையாடலை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். நம் அனைவருக்குமான தேதி நிச்சயிக்கப்பட்ட ஒன்று. வீடு கட்டும் போது கழிவறை பற்றி சிந்திக்க மாட்டோம். வாழ்கைக்கு இருக்கும் மரியாதை மரணத்திற்கு தரப்பட வேண்டும், அதை இந்த நாடகம் செய்துள்ளது.
என்னுடைய பிறந்தநாள் சிறப்பாக இதை அரங்கேற்றியதாக கூறியதற்கு நன்றி. நாம் அனைவரும் உணர வேண்டிய உண்மையை அழகாக மென்மையாக எடுத்துரைக்கிறது இந்த நாடகம். இந்த நாடகத்தை அரங்கேற்றுவதும், அதில் நான் கலந்து கொள்வதும் மகிழ்ச்சி. இதில் கலந்து கொண்டவர் ஒத்திகைக்கு போகவில்லை என்றால் நாடகத்தை நிறுத்தி விடுவார்கள் என்று சொன்னார், ஒத்திகை நாம் அந்த படைப்புக்கு தரும் மரியாதை. ஒத்திகையை நம்பும் வாத்தியார் எனக்கு கிடைத்தார். அதனால் அதன் அருமை எனக்கு தெரியும். நான் இயக்கும் படத்தை எத்தனை முறை பார்ப்பீர்கள் என்று கேட்டார்கள். ஒரு முறை நிஜத்தில் எண்ணிப் பார்த்தேன், நிஜமாகவே 100, 150 முறை பார்ப்பேன். டப்பிங், ரெக்கார்டிங் என மீண்டும் மீண்டும் புசித்து, சாப்பிட்டுவிட்டு தான் உங்களுக்கு தருவேன். நீங்கள் வெற்றி பெற வைப்பதற்கு பார்ப்பதை விட அதிக முறை நான் பார்ப்பேன். இங்கு இந்த நாடகத்தில் விமர்சனம் என்பதே இல்லை, அத்தனை பேரும் அருமையாக செய்துள்ளார்கள். நடித்தவர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் இணையத்தில் பார்க்க முடிகிற காலத்தில் இங்கு நேரில் வந்து ரசிக்கும் ரசிகர்களுக்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.
பல வருடங்களுக்கு பிறகு ஒரு திரைப்படம் நாடகமாக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.