ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றிக்கு பிறகும் கூட தெலுங்கு திரையுலகில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார் நடிகர் ஜூனியர் என்டிஆர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருந்து அவரது படங்கள் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வருகின்றன.
ஆர்ஆர்ஆர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து மலையாள திரை உலகிலும் அவருக்கு ஒரு தனி ரசிகர் வட்டம் உருவாகிவிட்டது. அதே சமயம் அவரது டப்பிங் படங்களில் எல்லாம் யாரோ ஒருவர் தான் அவருக்காக இதுவரை குரல் கொடுத்து வருகின்றனர். ஆர்ஆர்ஆர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக கேரளா சென்றிருந்த சமயத்தில் அங்கு கூடியிருந்த ரசிகர்களிடம் அடுத்து என்னுடைய படங்களில் நானே எனது சொந்த குரலில் மலையாளத்தில் பேசுவேன் என உறுதி அளித்தார் ஜூனியர் என்டிஆர்.
தற்போது கொரட்டாலா சிவா இயக்கத்தில் தேவரா என்கிற படத்தில் நடித்து வருகிறார் ஜூனியர் என்டிஆர். சமீபத்தில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. இந்த வீடியோவின் மலையாள வெர்சனில் இறுதியில் இடம்பெறும் வசனங்களை தனது சொந்தக்குரலில் பேசியுள்ளார் ஜூனியர் என்டிஆர். அந்த வகையில் இந்த படம் வெளியாகும் சமயத்தில் இதன் மலையாள வெர்சனில் முழுக்க முழுக்க தனக்காக தானே குரல் கொடுப்பார் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.