தினமலர் விமர்சனம் » என்றென்றும்
தினமலர் விமர்சனம்
உலகையே திரும்பி பார்க்க வைத்து, மறைந்த இங்கிலாந்து இளவரசி டயனாவின் பெயரை இப்பட கதாநாயகி பிரியங்கா ரெட்டியின் பாத்திரத்திற்கும், அவரது கணவர் சார்லஸின் பெயரை இப்பட நாயகர் சதீஷ் கிருஷ்ணாவின் பாத்திரத்திற்கும் சூட்டி 'என்றென்றும்' பட ஆரம்ப காட்சிகளில் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறார் அறிமுக இயக்குநர் சினிஷ்!
கதைப்படி, விபத்தொன்றில் சிக்கி ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடும் கதாநாயகி டயானா, தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு கிடப்பது, தன்னுடைய இந்தநிலைமைக்கு காரணமானவனை பழிவாங்குவதற்குதான். அதற்கு தான் குடியிருந்த வீட்டில் சட்ட விரோதமாக வந்து தங்கும் கதாநாயகர் சார்லஸை தேர்வு செய்கிறார். சாவாமலே கிட்டத்தட்ட ஆவி அல்லது பேய் ஆகும் டயானா, சார்லஸை உசுப்பேற்ற, அவர் வில்லனை கொல்லுவதுடன் டயானா(ஆவி?) நினைவுகளுடன் தானும் அம்மணி கல்லறை அருகிலேயே சமாதி ஆவது தான் 'என்றென்றும்' படம் மொத்தமும்! இளவரசி டயானா மாதிரியே 'என்றென்றும்' படமும் சில இடங்களில் புரியாத புதிராகவும், இழுவையாகவும் இருப்து தவிர குறையேதுமில்லை.
டயானா - பிரியங்கா, சார்லஸ் - சதீஷ் கிருஷ்ணா, 'காமெடி' பாலா உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
தரணின் இசையில் பாடல்களும் அதற்கு சரவணனின் ஒளிப்பதிவும் பிரமாதம்! இயக்குநர் சினிஷ், காமெடியன் பாலா இருந்தும் சீரியஸாக கதை சொல்லி இருக்கிறார். அதற்காக அவரை குறை சொல்ல முடியாது. காரணம், ''சினிமா அனுபவம் இல்லாமல் சினிமா படம் இயக்க வேண்டும் என்ற கனவுடன் சினிமா இயக்குநர் ஆன புதியவர் சினிஷ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் 'என்றென்றும்!' இதை நாம் சொல்லவில்லை... இயக்குநர் சினிஷே திரை விமர்சகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் எழுதியிருக்கும் கடிதத்தில் தெரிவித்து, தவறுகள் இருந்தால் தெரிவியுங்கள் என்றிருக்கிறார். அவருக்கு, நாம் தெரிவிக்க விரும்புவது எல்லாம் ஒன்று தான். அது., சினிமாதெரிந்து பயின்ற சினிமா எடுக்கும் சிலரைக்காட்டிலும் சிறப்பாகவே 'என்றென்றும்' படத்தை எழுதி இயக்கியிருக்கிறீர்கள். சினிஷ் வாழ்த்துக்கள்!
அதேநேரம் கதையிலும், பாடல்காட்சிகளிலும் காட்டியிருக்கும் கவனத்தை சற்றே படக்காட்சிகளிலும் பறைசாற்றியிருந்தீர்கள்... என்றால் என்றென்றும் பேசப்பட்டிருக்கும்! ஆனாலும், சினிமா ஆசையில் அனுபவமின்றி சுயபரிசோதனை முயற்சியாக ஒரு குறும்படத்தை ஆரம்பித்து, அது திட்டமிட்ட பட்ஜெட்டில் முடியாததால், அதையே திரைப்படமாகவும், சற்றே திரைக்கதையை மாற்றி ஏற்றி காட்டி வெற்றி பெற்றிருக்கும் உங்கள் சாமர்த்தியம் 'என்றென்றும்' பேசப்படும்!
இனி, ''என்றென்றும் - ரசிகர்கள் மனதிலும், திரையரங்குகளிலும் நின்று ஓடணும்!'' அவ்வளவே!!