ஓ மை கோஸ்ட்
விமர்சனம்
தயாரிப்பு - விஎயு மீடியா என்டர்டெயின்மென்ட், ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ்
இயக்கம் - யுவன்
இசை - ஜாவேத் ரியாஸ்
நடிப்பு - சன்னிலியோன், சதீஷ், ரமேஷ் திலக், தர்ஷா குப்தா
வெளியான தேதி - 30 டிசம்பர் 2022
நேரம் - 2 மணி நேரம் 5 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5
ஒரு படம் என்றால் அதில் ஏதாவது கதை இருக்க வேண்டும். கதையே இல்லாமல் எதையெதையோ கதை என்று சொல்லி படமெடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தப் படத்தில் என்ன அப்படி ஒரு கதை இருக்கிறது, எதற்காக இந்தப் படத்தை எடுத்தார்கள் என்பது அதை எடுத்தவர்களுக்கே தான் தெரியும்.
எப்படியோ சன்னி லியோனின் கால்ஷீட்டை வாங்கிவிட்டார்கள் போலிருக்கிறது. அதனால், அவசர அவசரமாக கதை என்று எதையோ எழுதி படத்தை எடுத்து முடித்துள்ளார்கள். இடைவேளைக்குப் பின்னர்தான் சன்னி லியோன் வருகிறார். அவரை ஒரு தமிழ்ப் படத்தில் வேறு எப்படி காட்ட முடியும். எல்லை மீறி அவரைக் கவர்ச்சி காட்டி நடிக்க வைக்கவும் முடியாது. அவரை முழுவதுமாகப் பயன்படுத்தவும் முடியாமல், அவருக்கான சரியான காட்சிகளை உருவாக்கவும் முடியாமல் திணறியிருக்கிறார்கள்.
ஆபாசப்படங்கள் எடுக்கும் இயக்குனர் சதீஷ். அவரது நண்பர் ரமேஷ் திலக்குடன் தங்கியுள்ளார். சதீஷின் காதலி தர்ஷா குப்தாவுக்கு திடீரென பேய் பிடிக்கிறது. சதீஷையும், ரமேஷ் திலக்கையும் அனகொண்டாவும் என்ற ஊருக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு ஒரு பேயை விடுவிக்கிறார். அந்தப் பேயை சதீஷால் மட்டும்தான் அடக்க முடியுமாம். அப்புறம் என்ன நடக்கும் என அனைவருக்குமே தெரியும்.
பிளாஷ்பேக்கில் அனகொண்டபுரம் பேரரசியாக பேரழகியாக வருகிறார் சன்னி லியோன். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு 'டபுள் ஏ' சான்றிதழ் கொடுக்கலாம். சதீஷ் எந்தப் படத்திலும் ரசிகர்களை சிரிக்க வைத்தது இல்லை, சிரிக்க வைக்க முயற்சித்து அவரே சிரித்துக் கொள்வார். இந்தப் படத்திலும் அதுவே தொடர்கிறது. அவர்தான் படத்தின் கதாநாயகன் என்று சொல்கிறார்கள்.
யோகிபாபுவும் படத்தில் இருக்கிறார். ஆனால், ஒரு காட்சியில் கூட சிரிப்பு வரவில்லை. சதீஷின் நண்பராக ரமேஷ் திலக். காதலியாக தர்ஷா குப்தா.
ஆயிரம் ஆண்டு வரலாறு, ஆவி, பேய் என சிறு குழந்தைகள் இஷ்டத்துக்கு கதை சொல்வது போல சொல்லியிருக்கிறார்கள். பல காட்சிகள் நமது பொறுமையை சோதிக்கின்றன. எந்த இடத்திலும் பயமோ, பரபரப்போ படத்தில் இல்லை.
சன்னி லியோன் நடிக்கும் தமிழ்ப் படம் என விளம்பரப்படுத்தியதற்கு கொஞ்சமாவது ரசிக்கும்படியாகக் கொடுத்திருக்கலாம்.
ஓ மை கோஸ்ட் - காட் தான் காப்பாத்தணும்...
பட குழுவினர்
ஓ மை கோஸ்ட்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்