கவர்ச்சி புயல் சன்னி லியோன், இரண்டு வேடங்களில் நடித்து, கவர்ச்சியை வாரி வழங்கி, சுமார் 1400 திரையரங்குகளில் வௌியாகியிருக்கும் மியூசிக்கல் த்ரில்லர் படம் தான் ஏக் பஹேலி லீலா. இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு ஈர்த்துள்ளது என்று இனி பார்ப்போம்...
கதைப்படி மீரா எனும் சன்னி லியோன் ஒரு சூப்பர் மாடல். அவரது பெற்றோர் விமான விபத்தில் பலியாகி விட, இந்த சம்பவத்தை மறக்க குடிக்கு அடிமையாகிறார். இந்தசூழலில் பேஷன் ஷூட் ஒன்றுக்காக இங்கிலாந்தில் இருந்து ராஜஸ்தானின், ஜோத்பூருக்கு வருகிறார் சன்னி லியோன். ஷூட்டிங்கிற்கு வந்த இடத்தில் அந்த ஊர் இளவரசன் ரன்வீர் சிங் எனும் மொகித் அல்வாத் மீது காதல் கொள்கிறார். இருவரும், திருமணமும் செய்து கொள்கின்றனர். சொத்து பிரச்னைக்காக ரன்வீர் சிங் தன் சகோதரர் உடன் மோதலில் இருக்கிறார்.
இதுஒருபுறம் இருக்க ஜோத்பூரில் பேஷன் ஷோக்களுக்கு இசையமைத்து வரும் கரண் எனும் ஜெய் பகனுஷாலியின் கனவில் அடிக்கடி தன் பூர்வ ஜென்மத்து சம்பவங்கள் போன்று சில விஷயங்கள் வந்து செல்கிறது. இதுப்பற்றி சாமியார் ஒருவரிடம் கேட்க, அவரும் இது உன் பூர்வ ஜென்மத்து ஞாபகம் தான், உன் காதலி லீலா எனும் இன்னொரு சன்னி லியோன், பைவரவ்(ராகுல் தேவ்) என்பவனால் கொல்லப்பட்டாள் என்கிறார். நிகழ்காலத்தில் இந்த இரண்டு கதைகளும் எப்படி முடிவுக்கு வந்தது என்பது லீலா படத்தின் க்ளைமாக்ஸ்.
சன்னி லியோன் தன் முந்தைய படங்களை காட்டிலும் இப்படத்தில் நடிப்பில் இன்னும் முன்னேறி இருக்கிறார். அதேசமயம் கவர்ச்சியில் குறை வைக்கவே இல்லை. முதல் அரைமணி நேரம் கவர்ச்சி மழை பொழிந்து ரசிகர்களை நனைய வைத்துள்ளார்.
சன்னியை போலவே மொகித்தும் அற்புதமாக நடித்துள்ளார். ஆனால் ராகுல் தேவ், ராஜ்னிஷ் துக்கால் நடிப்பு கொஞ்சம் கூட ஈர்க்கவில்லை. மேலும் இஷான் குரேஷியின் டபுள்-மீனிங் காமெடி படத்தை பார்க்கும் ரசிகர்களை ரொம்பவே எரிச்சலடைய செய்கிறது.
டோலி தாரோ... ரீ-மிக்ஸ் பாடல் உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை தாளம் போட வைக்கிறது. படத்தில் இடம்பெற்றுள்ள செட்டிங் காட்சிகள் மற்றும் ஔிப்பதிவு படத்திற்கு ப்ளஸாக அமைந்துள்ளது. ஆனாலும் இதுபோன்ற பூர்வ ஜெமன்மத்து கதையை ரசிகர்களுக்கு எந்தளவுக்கு சுவாரசியமாக கொடுக்க வேண்டும்.? அதை செய்ய தவறிவிட்டார் இயக்குநர் பாபி கான். வெறும் கவர்ச்சியை மட்டுமே முன்னிறுத்தி படத்தை வெற்றி பெற செய்துவிடலாம் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டார். நிகழ்காலத்து சன்னி லியோனின் கதையை விரிவாக சொன்ன இயக்குநர், அவரது பூர்வ ஜென்மத்து கதையை விரிவாக சொல்லவில்லை. இதனால் ஏக் பகலி லீலா படம் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது.
''ஏக் பஹேலி லீலா'' படத்தை சன்னி லியோனின் தீவிர ரசிகர்களும், கவர்ச்சியை விரும்புவர்களும் மட்டுமே பார்க்கலாம். ஏனென்றால் படத்தில் கவர்ச்சியை தான் நல்லா காட்டுகிறார்கள், வேறொன்றையும் காட்டவில்லை!
மொத்தத்தில், ''ஏக் பஹேலி லீலா - சன்னி லியோனின் ரசிகர்களுக்கு கவர்ச்சி தீனி!''