வீட்ல விசேஷம்
விமர்சனம்
தயாரிப்பு - ஜீ ஸ்டுடியோஸ், பே வியூ புராஜக்ட்ஸ், ரோமியோ பிக்சர்ஸ்
இயக்கம் - ஆர்ஜே பாலாஜி, என்ஜே சரவணன்
இசை - கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
நடிப்பு - ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி
வெளியான தேதி - 17 ஜுன் 2022
நேரம் - 2 மணி நேரம் 10 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5
குடும்பப் பாங்கான கதைகள் தமிழ் சினிமாவில் வருவது மிகவும் குறைந்துவிட்டது. எப்போதோ ஒரு முறைதான் இப்படியான கதைகள் வருகீறது. இந்த 'வீட்ல விசேஷம்' ஒரு குடும்பக் கதைதான், ஆனால், விவகாரமான ஒரு குடும்பக் கதை.
நிஜ வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்கலாம். எங்கோ ஒரு சில இடத்தில் நடந்திருக்க வாய்ப்புண்டு. இல்லையென்றால் 40, 40 வருடங்களுக்கு முன்பு இப்படி நடந்திருக்கலாம். இந்த விவகாரமான குடும்பக் கதையை எந்த ஆராய்ச்சியும் செய்யாமல், நகைச்சுவைப் படமாக நினைத்து மட்டுமே கடந்து போக வேண்டும்.
ரிட்டயர்மென்ட் வயதில் இருப்பவர் டிடிஆர் வேலை பார்க்கும் சத்யராஜ். மனைவி ஊர்வசி, ஆசிரியர் வேலை பார்க்கும் மூத்த மகன் ஆர்ஜே பாலாஜி, + 2 படிக்கும் விஸ்வேஷ், அம்மா கேபிஎசி லலிதா ஆகியோருடன் பாசமான குடும்பமாய் இருப்பவர். மகன் பாலாஜி அவரது பள்ளி நிர்வாகியான அபர்ணா பாலமுரளியை பள்ளியில் படித்த காலத்திலிருந்தே காதலித்து வருகிறார். இந்நிலையில் ஊர்வசி கர்ப்பமடைகிறார். 50 வயதில் குழந்தை பெற்றுக் கொள்வதா என பெரும் சலசலப்பு குடும்பத்தில் உண்டாகிறது. குழநதை பெற்றே தீருவேன் என ஊர்வசி வைராக்கியமாக இருக்கிறார். இதனால், குடும்பத்தில் பிரச்சினைகள் வருகிறது. அதன்பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஹிந்தியில் 2018ல் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய 'பதாய் ஹோ' படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்தப் படம். தமிழுக்கு ஏற்றபடி பொருத்தமான நட்சத்திரத் தேர்வு, அவர்களது சிறப்பான நடிப்பு இந்தப் படத்தை தமிழிலும் பேச வைக்கும் படமாக மாற்றிவிட்டது.
படத்தின் நாயகன் என்று ஆர்ஜே பாலாஜியை சொல்ல முடியாது. சத்யராஜைத்தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அவர்தான் படத்தில் அதிக நேரம் வருகிறார். இத்தனை வருட நடிப்புக் காலத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருக்கவே மாட்டார். ஒரு பக்கம் பெருமிதமாகவும் நடந்து கொள்ள வேண்டும், இன்னொரு பக்கம் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற அச்சத்திலும் நடந்து கொள்ள வேண்டும். ஒரு பக்கம், அம்மா மறுபக்கம் மனைவி, இன்னொரு பக்கம் மகன்கள் என சமாளிக்க வேண்டும். அனைத்தையும் சமாளித்து தனி சாம்பியனாக பெயரெடுக்கிறார் சத்யராஜ்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திரம் என இரண்டிலும் நாற்பது வருடங்களாக தனது நடிப்பில் தனி முத்திரை பதித்த நடிகை ஊர்வசி. இந்தப் படத்திலும் தன்னுடைய வழக்கமான முத்திரையைப் பதித்திருக்கிறார். யார் என்ன சொன்னாலும் சரி தான் குழந்தை பெற்றே தீருவேன் என உறுதியாக இருக்கிறார். எந்த கேலி கிண்டலையும் தாங்கிக் கொள்ளும் வலிமையுடன் இருக்கிறார். இவரை விட்டால் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க தமிழ் சினிமாவில் வேறு எவரும் இல்லை என்பது உண்மையோ உண்மை.
ஒரு சுவாரசியமான படத்தில் தான் இருந்தால் போதும் என்ற பெரிய மனதுடன் பாலாஜி நடித்திருக்கிறார். சத்யராஜ், ஊர்வசி ஆகியோரது அனுபவ நடிப்பிற்கு முன்னால் பாலாஜி இருப்பதும் தெரிய வருவது போன்று 'நச்' என சில காட்சிகளை தனக்காக வைத்துள்ளார். அபர்ணாவின் அம்மாவிடம் சண்டை போடும் ஒரு காட்சி போதும் உதாரணத்திற்கு.
சத்யராஜின் அம்மாவாக கேபிஎசி லலிதா ஆரம்பத்தில் ஊர்வசியை வார்த்தையால் சுடுகிறாரே என்று யோசிக்க வைக்கிறார். ஆனால், மற்ற மருமகள்கள் ஊர்வசியை கிண்டல் செய்யும் போது ஊர்வசிக்கு ஆதரவாக இருந்து மற்ற மருமகள்களை வறுத்தெடுக்கும் காட்சியில் கண்ணீர் விட வைக்கிறார். சத்யராஜின் இளைய மகனான விஸ்வேஷ் வரும் காட்சிகளில் தன் வசனத்தால் தான் இருப்பதை உணர்த்துகிறார்.
பாலாஜியின் காதலியாக அபர்ணா பாலமுரளி. அதிக வேலையில்லை என்றாலும் அவர் வரும் காட்சிகளில் அம்சமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை எந்தெந்த இடத்தில் உணர்வுகளை இன்னும் உருக்கமாகக் காட்ட வேண்டுமோ அங்கெல்லாம் சரியாகக் காட்டி, கூட்டுகிறது. ஒரு ரயில்வே குவார்ட்டர்ஸில் மட்டும் நடக்கும் கதை. இருப்பினும் மேக்கிங்கில் எந்த குறையும் இல்லாமல் ஒளிப்பதிவாளரும், படத்தொகுப்பாளரும் தங்கள் பணியைச் செய்திருக்கிறார்கள்.
இடைவேளைக்குப் பின் திரைக்கதை சற்றே தள்ளாடி பிறகு சரியாகிறது. ஜாலியாக, சுவாரசியமாக ஒரு படத்தைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது என்று ஆதங்கப்படுபவர்களுக்காக வந்துள்ள படம் இது.
வீட்ல விசேஷம் - நல் விருந்து…
வீட்ல விசேஷம் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
வீட்ல விசேஷம்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்