பத்மினி (மலையாளம்)
விமர்சனம்
தயாரிப்பு : லிட்டில் பிக் பிலிம்ஸ்
இயக்கம் : சென்னா ஹெக்டே
இசை : ஜேக்ஸ் பிஜாய்
நடிகர்கள் : குஞ்சாக்கோ போபன், மடோனா செபாஸ்டியன், அபர்ணா பாலமுரளி மற்றும் பலர்
வெளியான தேதி : 14 ஜூலை 2023
நேரம் : 2 மணி 15 நிமிடங்கள்
ரேட்டிங் : 2.5/5
கிராமத்து பள்ளிக்கூடம் ஒன்றில் மலையாள ஆசிரியராக வேலை பார்க்கிறார் குஞ்சாக்கோ போபன். திருமணமான நாளன்று இரவே அவரது மணப்பெண் அவரை தந்திரமாக ஏமாற்றிவிட்டு தனது காதலனுடன் தப்பித்து செல்கிறார். இதனால் ஆரம்பத்தில் விரக்தி அடைந்தாலும் பின்னர் தனக்கான இன்னொரு பெண்ணை தேட ஆரம்பிக்கிறார் குஞ்சாக்கோ. ஊரில் பலரும் இவரை பத்மினி என்கிற பெயரில் கிண்டல் செய்வதால் அப்படி அழைப்பவர்களை போட்டு புரட்டி எடுத்து விடுவார்.
இந்த நிலையில் குடும்ப நீதிமன்ற வழக்கறிஞரான அபர்ணா பாலமுரளியை பெண்பார்க்க செல்லும்போது அவரது வீட்டில் பிரீமியர் பத்மினி கார் இருப்பதை பார்த்து கோபமாகி இந்தப்பெண் வேண்டாம் என கூறிவிட்டு வருகிறார். அதேபோல பள்ளியில் புதிதாக கணக்கு ஆசிரியையாக பணியில் சேரும் மடோனா செபாஸ்டியனின் பெயர் கூட பத்மினி என்பதால் அவரிடமும் பாராமுகம் காட்டுகிறார். ஆனால் மடோனாவே, குஞ்சாக்கோ போபனிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை அகற்றிவிட்டு நட்பாகி, ஒரு கட்டத்தில் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறார்.
அதற்கு மடோனாவின் குடும்பத்தில் உள்ளவர்கள் சம்மதம் தெரிவித்தாலும் மடோனாவின் தாய் மாமா ஏற்கனவே குஞ்சாக்கோவுக்கு நடைபெற்ற திருமண பதிவை ரத்து செய்துவிட்டு வாருங்கள் உங்கள் திருமணத்தை நடத்தி வைக்கிறேன் என்கிறார். இது குறித்து விவாகரத்து வழக்கிற்கு விண்ணப்பிக்க வழக்கறிஞரான அபர்ணா பாலமுரளியின் உதவியை நாடுகிறார் குஞ்சாக்கோ நீதிமன்றம் ஓடிப்போன அவரது மனைவியை அழைத்து வரச் சொல்கிறது. ஓடிப்போன பெண் எங்கே இருக்கிறார் என தெரியாத நிலையில் அவரைத் கண்டுபிடித்து குஞ்சாக்கோ போபன் விவாகரத்து பெற்றாரா ? மடோனாவை கைப்பிடித்தாரா ? இதில் அபர்ணாவின் பங்கு என்ன என்பது மீதிக்கதை.
குஞ்சாக்கோ போபன் வழக்கம்போல அலட்டல் இல்லாத நடிப்பில் ஸ்கோர் பண்ணுகிறார். முதலிரவன்று தான் திருமணம் செய்த பெண்ணிடம் அவர் ஏமாறுவது சரியான காமெடி. பத்மினி என்கிற பெயரில் தன்னை கிண்டல் பண்ணும்போது அவருக்கு வரும் கோபத்தை அழகாக வெளிப்படுத்தி உள்ளார். அதன் விளைவுகளும் கலாட்டாவாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வழக்கறிஞராக வரும் அபர்ணா கோபிநாத் படபட பட்டாசாக பொரிகிறார். ஆரம்பத்தில் துடுக்குத்தனமான பெண்ணாக தன்னை காட்டிக் கொண்டாலும் போகப்போக வருங்கால கணவன் என்கிற ஒரு சந்தேகப் பேர்வழியிடம் தான் சிக்கிக்கொண்டு படும் அவஸ்தைகளையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். குஞ்சாக்கோவுக்கு தன்னம்பிக்கை தந்து உற்சாகப்படுத்தும் ஒரு கதாபாத்திரமாக அறிமுகமாகும் மடோனா செபாஸ்டியன் போகப்போக குடும்பத்தின் நெருக்கடி காரணமாக முடிவெடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவதை மிகச்சரியாக பிரதிபலித்துள்ளார்.
ஓடிப்போன மணப்பெண்ணாக ஆரம்பத்தில் சில நிமிட காட்சிகளே வந்தாலும் கலகலப்பூட்டும் வின்சி அலோசியஸ், கிளைமாக்ஸுக்கு சற்று முன்னதாக மீண்டும் அதிரடி என்ட்ரி கொடுத்து நகைச்சுவைக்கு உத்தரவாதம் தருகிறார். ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் நடிகை மாளவிகா மேனன் ஆரம்பத்தில் குஞ்சாக்கோவுக்கு எதிர்பாராத அதிர்ச்சி ஒன்றை கொடுத்துவிட்டு செல்கிறார். இது தவிர சந்தேகப் பேர்வழியாக நடித்துள்ள சஜின் செருகயில் தன் பங்கிற்கு கலகலப்பூட்டுகிறார். மடோனாவின் தாய்மாமா. குஞ்சாக்கோவின் நண்பர் என இன்னும் சில கதாபாத்திரங்களும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீராஜ் ரவீந்திரன் ஒளிப்பதிவு கிராமத்து குளுமையை அழகாக திரையில் கொண்டு வந்துள்ளது. ஜேக்ஸ் பிஜாயின் பாடல்களும் பின்னணி இசையும் இந்த படத்திற்கு தேவையான பணியை மட்டும் செய்துள்ளது.
சிம்பிளான ஒரு கதை தான்.. ஆனாலும் அதை எந்தவித தொய்வும் இல்லாமல் நகைச்சுவையாக நகர்த்திக் கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் சென்னா ஹெக்டே. இடைவேளையில் வரும் ட்விஸ்ட் எதிர்பாராதது என்றாலும் கிளைமாக்ஸ் இப்படித்தான் முடியும் என முன்பே நம்மால் யூகிக்க முடிகிறது. படம் சற்றே மெதுவாக நகர்வது ஒன்று மட்டும் தான் குறையாக தெரிகிறது. மற்றபடி இது ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படம் தான்.
பத்மினி : கலாட்டா கல்யாணம்
பட குழுவினர்
பத்மினி (மலையாளம்)
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்