மோகன்குமார் பேன்ஸ் (மலையாளம்),Mohankumar fans

மோகன்குமார் பேன்ஸ் (மலையாளம்) - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன்
டைரக்சன் : ஜிஸ் ஜாய்
இசை : பிரின்ஸ் ஜார்ஜ் & வில்லியம் பிரான்சிஸ்
நடிப்பு : குஞ்சாக்கோ போபன், சித்திக், ஜாய் மேத்யூஸ், அனார்கலி, முகேஷ், வினய் போர்ட், ரமேஷ் பிஷரோடி, கிருஷ்ண சங்கர் மற்றும் பலர்
வெளியான தேதி : 19 மார்ச் 2021
நேரம் : 2 மணி 01 நிமிடங்கள்
ரேட்டிங் : 3/5

சினிமாவை பின்னணியாக வைத்து படங்களை உருவாக்குவதில் தொடர்ந்து ஆச்சர்யப்படுத்தி வரும் மலையாள திரையுலகில் மீண்டும் ஒரு சுவாரஸ்யமான பீல்குட் படமாக வெளியாகியுள்ளது இந்த மோகன்குமார் பேன்ஸ். ஒரு வாழ்ந்துகெட்ட ஹீரோவின் கதை தான் மொத்த படமும்.

ஒருகாலத்தில் சினிமாவில் பிரபல ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் மோகன்குமார் (சித்திக்). மோகன்லால், மம்முட்டி வருகைக்குப்பின் அவரது மார்க்கெட் படிப்படியாக இறங்குகிறது.. இந்தநிலையில் பல வருடங்கள் கழித்து, மீண்டும் குணச்சித்திர நடிகராக மாறி, சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் மோகன்குமார். அவர் நடித்த படத்தில் அவரது நடிப்பு எல்லோராலும் பாராட்டப்படுகிறது, ஆனால் அவருக்கு கிடைக்கவேண்டிய கேரள அரசு விருது, அவர் மீது பொறாமைகொண்ட நபர் ஒருவரால், கைக்கு கிட்டாமல் போகிறது.

ஆனால் மோகன்குமாரின் நலம் விரும்பிகளான தயாரிப்பாளர் முகேஷ் மற்றும் பாடகரும் மோகன்குமாரின் ட்ரைவருமான குஞ்சாக்கோ போபன் ஆகியோர் தேசிய விருதுக்கான போட்டியில் அவரை கலந்து கொள்ள செய்ய விரும்புகின்றனர். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாளில், பல போராட்டங்களுக்கு இடையே, அதற்கான ஆவணங்களை டில்லிக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இதற்கிடையே மோகன்குமாருக்கு திடீரென ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது. மிக கடினமான ஆபரேஷன் ஒன்றை செய்தாக வேண்டும் என்றும் அதுவரை அதிர்ச்சியான தகவல் எதையும் அவரிடம் சொல்லக்கூடாது என்றும் டாக்டர்கள் சொல்கின்றனர். அதேசமயம் ஆபரேஷனுக்கு முதல்நாள் தான் இந்த விருது அறிவிப்புகள் வெளியாகும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார் மோகன்குமார்.

இந்தநிலையில் தான், தேசிய விருதுக்காக டில்லிக்கு அனுப்பிய ஆவணங்களில், தயாரிப்பாளரின் கடிதம் மட்டும் அனுப்பப்படாமல் மிஸ் ஆனது குஞ்சாக்கோ போபனுக்கு தெரிய வருகிறது. டில்லி விருது கமிட்டியில் விசாரித்ததில், மோகன்குமாருக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பில்லை என்பதை அறிந்த குஞ்சாக்கோ போபன், இந்த அதிர்ச்சி செய்தியை மோகன்குமாருக்கு தெரியாமல் மறைக்கும் முயற்சியில் ஒரு நாடகம் ஆடுகிறார்.. அவரால் அதை மறைக்க முடிந்ததா, அதற்காக அவர் ஆடிய நாடகம் கை கொடுத்தா, இல்லை உண்மை தெரியவந்து அது மோகன்குமாரின் உயிருக்கே உலை வைத்ததா என்பது க்ளைமாக்ஸ்.

படத்தின் ஹீரோ குஞ்சாக்கோ போபன் என்றாலும் கதையின் நாயகனாக மொத்த படத்தையும் தனது தோளில் தாங்கி பிடித்திருக்கிறார் மோகன்குமாராக நடித்துள்ள குணச்சித்திர நடிகரான சித்திக். அடுத்தடுத்து ஹீரோக்கள் புதிதாக வரும்போது, மார்க்கெட் இழக்கும் ஒரு முன்னாள் ஹீரோவின் மன வேதனையை படம் முழுதும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் சித்திக்

குஞ்சாக்கோ போபனுக்கு பாதிப்படத்திற்கு மேல், அமைதியாக அண்டர் பிளே செய்யும் வேலை தான். மனிதரும் அது பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் நடித்துள்ளார். சித்திக்கிடம் உண்மையை மறைக்க அவர் நாடகம் ஆட தயாராகும் நிமிடத்தில் இருந்து அவரிடம் இருக்கும் பரபரப்பு நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

நாயகி அனார்கலிக்கு படம் முழுவதும் வருகின்ற வேடம் என்றாலும் வேலை குறைவு தான். ஆனாலும் ரொம்பவே டீசன்டான நடிப்பால் நம்மை கவர்கிறார். படத்தில் சினிமா ஹீரோவாக வரும் வினய் போர்ட்டின் அலப்பறைகள் காமெடி ஏரியாவை கொஞ்சமும் குறைவில்லாமல் பார்த்து கொள்கின்றன. இவர் பிரேமம் படத்தில் சாய்பல்லவியை ஒருதலையாக காதலிக்கும் பேராசிரியராக நடித்து கலகலப்பூட்டியவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த கதையுடன் நம்மை ஒன்றிப்போக செய்யும் விதமாக துணை கதாபாத்திரங்களில் நடித்த அத்தனை பேருக்கும் சம பங்கிருக்கிறது. வளர்ந்து வரும் ஹீரோவிடம் கால்ஷீட் வாங்குவதற்காக அலையும் நொடிந்து போன தயாரிப்பாளரான முகேஷ், தனது படத்தில் நடித்த மோகன்குமாருக்கு தேசிய விருது கிடைத்துவிட வேண்டும் என முழுமூச்சாக உதவும் தயாரிப்பாளர் ஆகியோர் குணச்சித்திர நடிப்பால் நெகிழ வைக்கின்றனர்.

அதேசமயம் புரொடக்சன் மேனேஜராக வரும் ரமேஷ் பிஷரோடி, கடைசி நேரத்தில் முந்திரிக்கொட்டை தனமாக குஞ்சாக்கோவின் நாடகத்தை விவரம் புரியாமல் தகர்க்க முயல்வதும், முகேஷ் அதை ஒரு வழியாக சமாளிப்பதும் சரியான காமெடி. மும்பை போலீஸ் போன்ற ஆக்சன் படமானாலும் ஹவ் ஓல்டு ஆர் யூ போல பெண்கள் முன்னேற்ற படமானாலும் விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் குன்றாமல் கதையை உருவாக்கும் இரட்டை கதாசிரியர்களான பாபி-சஞ்சய் இந்தப்படத்திலும் தங்களது பணியை குறைவில்லாமல் செய்துள்ளனர்.

ஏற்கனவே பைசைக்கிள் தீவ்ஸ், சண்டே ஹாலிடே என விதவிதமான ஜானர்களில் வெற்றிகளை கொடுத்த இயக்குனர் ஜிஸ் ஜாய், இதில் சினிமா களம் என்பதால் ரிலாக்ஸாக கதையை நகர்த்தி சென்றிருக்கிறார். சினிமா கதை என்றாலும் ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக கொடுக்க முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார். அந்தவகையில் ரசிகர்களை மீண்டும் கவர்ந்த சினிமா கதைக்கள படங்களின் பட்டியலில் இந்த மோகன்குமார் பேன்ஸ் படமும் இடம்பிடித்திருக்கிறது.

மோகன்குமார் பேன்ஸ் : விசிலடிச்சான் குஞ்சுகள் அல்ல

 

பட குழுவினர்

மோகன்குமார் பேன்ஸ் (மலையாளம்)

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓