தலவன் (மலையாளம்),Thalavan

தலவன் (மலையாளம்) - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : அருண் நாராயணன் புரொடக்சன் மற்றும் லண்டன் ஸ்டுடியோஸ்
இயக்கம் : ஜிஸ் ஜாய்
இசை : தீபக் தேவ்
நடிகர்கள் : பிஜூமேனன், ஆசிப் அலி, மியா ஜார்ஜ், அனுஸ்ரீ, கோட்டயம் நசீர், திலீஷ் போத்தன்
வெளியான தேதி : 24 மே 2024
ஓடும் நேரம் : 2 மணி 13 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5

மலையாளத்தில் கடந்த பத்து வருடங்களாக நடிகர் ஆசிப் அலியை வைத்தே தொடர்ந்து படங்களை இயக்கி வரும் இயக்குநர் ஜிஸ் ஜாய் ஐந்தாவது முறையாக அவருடன் இணைந்திருக்கும் படம் இது. ஒரு கொலை, அதன் பின்னணியில் உள்ள மர்மம் என்கிற வழக்கமான புலனாய்வு கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்தப் படம் எந்த வகையில் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக தனித்து நிற்கிறது ? பார்க்கலாம்.

ஒரு காவல் நிலையத்தில் சம அதிகாரத்தில் இருப்பவர்கள் சீனியரான பிஜூமேனன் மற்றும் ஜூனியரான ஆசிப் அலி. ஆரம்பத்தில் இருவருக்கும் சில விஷயங்களில் மோதல் போக்கு ஏற்படுகிறது. இந்த நிலையில் ஒரு வழக்கில் சிக்கிய தனது கணவனை சிறையில் இருந்து விடுவிக்கும் விதமாக தொடர்ந்து பிஜூமேனனை சந்திக்கிறார் அனுஸ்ரீ. ஆனால் பிஜூமேனன் அவரிடம் கடுமை காட்டி உதவி செய்ய மறுக்கிறார். ஒரு நாள் எதிர்பாராத விதமாக அனுஸ்ரீ கொல்லப்பட்டு சாக்கு முட்டையில் கட்டப்பட்டு பிஜூமேனன் வீட்டு மாடியில் கிடக்கிறார். ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் பிஜூமேனன் கைது செய்யப்பட்டு சிறை செல்கிறார்.

அதே சமயம் அவர் மீது கோபதாபங்கள் இருந்தாலும் இந்த வழக்கில் பிஜூமேனன் மீது குற்றம் இல்லை என நம்பும் ஆசிப் அலி இதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார் என புலனாய்வு செய்யத் துவங்குகிறார். ஒரு பக்கம் மேலதிகாரிகளின் குறுக்கீடு, இன்னொரு பக்கம் தன்னையே இதுபோன்று இன்னொரு வழக்கில் சிக்க வைக்க எதிரி நடத்தும் சூழ்ச்சி என பல சிக்கல்களை சந்திக்கிறார். இதற்கிடையே ஜாமீனில் வெளிவரும் பிஜூமேனனும் ஆசிப் அலியுடன் கைகோர்த்து உண்மையை கண்டுபிடிக்க களமிறங்குகிறார் இறுதியில் யார் குற்றவாளி என்பதும் அதற்கான காரணம் என்ன என்பதும் தெரிய வரும்போது நிஜமாகவே அவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் அதிர்ச்சி தான்.

ஆரம்பத்தில் இது அய்யப்பனும் கோஷியும் போல இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு இடையேயான இன்னொரு ஈகோ மோதல் கதையோ என நினைக்கும் விதமாக துவங்கினாலும் போகப்போக ரூட் மாறி ஒரு பக்காவான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஆக மாறுகிறது.

இளம் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஆசிப் அலி கடந்த சில வருடங்களாக ஒரு சரியான வெற்றி படத்தை கொடுக்க தடுமாறி வரும் நிலையில் இந்த படம் அவருக்கு ஒரு கம் பேக் படமாக அமைந்துள்ளது. சக அதிகாரி தனக்கு பிடிக்காதவர் என்றாலும் கூட அவர் தவறு செய்யாதவர் என்பதை நிரூபிக்க துடிக்கும் நேர்மையான ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் படம் முழுவதும் ஒரு கம்பீரம் காட்டி நடித்திருக்கிறார் ஆசிப் அலி.

பிஜூமேனன் பற்றி சொல்லவே தேவையில்லை. வழக்குகளிலும் சரி, தன் கீழ் பணியாற்றும் போலீசாரிடமும் சரி கண்டிப்பும் கறாருமாக நடந்து கொள்வதும் பின்னர் சூழல் காரணமாக குற்றவாளியாக்கப்பட்டாலும் கெத்து குறையாமல் நடிப்பில் மிடுக்கு காட்டி இருக்கிறார் பிஜூமேனன்.

பிஜூ மேனனின் மனைவியாக மியா ஜார்ஜ், பாதிக்கப்பட்ட பெண்ணாக அனுஸ்ரீ என இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும் அளவோடு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர். உயரதிகாரியாக வரும் திலீஷ் போத்தன் இந்த வழக்கு குறித்து, தான் ஓய்வு பெற்றபின் தொலைக்காட்சி ஒன்றில் க்ரைம் ஸ்டோரியாக கதையை சொல்வது போல உருவாக்கப்பட்டிருக்கும் யுக்தியும் அதேசமயம் இந்த வழக்கின் குற்றவாளி யார் என அவர் கூறிய அடுத்த நாளே அவர் கொல்லப்படுவதும் எதிர்பாராத அதிர்ச்சி. போலீஸ் ஏட்டாக நடித்துள்ள கோட்டயம் நசீருக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னை மீண்டும் வெளி(ச்ச)ப்படுத்திக் கொள்ளும் ஒரு கதாபாத்திரம். சிறப்பாக செய்து இருக்கிறார்.

தீபக் தேவின் பின்னணி இசையும், சரண் வேலாயுதத்தின் ஒளிப்பதிவும் இந்த கதைக்கான விறுவிறுப்பை கொஞ்சம் கூட குறையாமல் பார்த்துக் கொண்டுள்ளன.

காவல்துறையில் இருக்கும் உயர் அதிகாரிகள், கீழேயுள்ள சக அதிகாரிகளின் கெஞ்சலுக்கு செவிசாய்க்காத போது ஏற்படும் பின் விளைவுகள் இப்படி எல்லாம் கூட இருக்குமா என்கிற ஒரு பழிவாங்கல் பின்னணியில் இந்த கதையை பிசிறு தட்டாமல் நகர்த்திக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் ஜிஸ் ஜாய். குற்றவாளி யாராக இருக்கும் என கடைசி வரை யூகிக்க முடியாதபடி ரசிகர்களை இரண்டு மணி நேரமும் ஒருவித டென்ஷனுடனேயே யோசிக்க வைத்து கடைசி வரை சஸ்பென்ஸை கட்டிக்காத்து திரைக்கதையில் விளையாட்டு காட்டி இருக்கிறார். சமீப நாட்களாக மலையாள படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்று வரும் நிலையில் இந்தப்படமும் அந்தப்பட்டியலில் இடம் பிடிக்கும் என் நம்பலாம்.

தலவன் : விவேகம்

 

பட குழுவினர்

தலவன் (மலையாளம்)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓