துண்டு (மலையாளம்)
விமர்சனம்
தயாரிப்பு : ஆஷிக் உஸ்மான் மற்றும் ஜிம்ஸி காலித்
இயக்கம் : ரியாஸ் ஷெரிப்
இசை : கோபி சுந்தர்
நடிப்பு : பிஜூமேனன், ஷைன் டாம் சாக்கோ, உன்னி மாயா பிரசாத்
வெளியான தேதி : 16 பிப்ரவரி 2024
நேரம் : 2 மணி 05 நிமிடம்
ரேட்டிங் : 2.5 / 5
பள்ளி கல்லூரி தேர்வுகளில் மாணவர்கள் பிட் அடிப்பார்கள் என கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் காவல்துறையில் உயர் பதவிக்கு செல்வதற்காக எழுதும் தேர்வில் பிட் (துண்டு) அடிக்கும் ஒரு போலீஸ்காரரை பற்றிய படம் தான் இது.
போலீஸ் ஸ்டேஷனில் சாதாரண கான்ஸ்டபிளாக வேலை பார்ப்பவர் பிஜூமேனன். தன்னுடைய ஸ்டேஷனிலேயே கான்ஸ்டபிள் ஆக இருந்து ஏட்டையாவாக மாறிய ஷைன் டாம் சாக்கோவிடம் ஈகோ காரணமாக மோதல் போக்கை கடைபிடிக்கிறார் பிஜூமேனன். இப்படி ஈகோ உருவாக காரணமும் அவர்தான். ஆனால் தானும் ஒரு ஏட்டையாவாக பதவி உயர்வு பெற்று விட்டால் தான் மன உளைச்சலின்றி தன்னால் நிம்மதியாக வேலை பார்க்க முடியும் என நினைத்து அதற்கான போலீஸ் தேர்வு எழுத தயாராகிறார் பிஜூமேனன்.
ஒரு தனியார் நிறுவனம் மூலமாக தனிப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து, செய்முறை தேர்வுகளில் வெற்றி வரும் பிஜூமேனன், எழுத்து தேர்வு வரும்போது கலங்கி போய் நிற்கிறார். சில மாதங்களுக்கு முன்பு தனது மகன் பள்ளி தேர்வில் பிட் அடித்தான் என்று பிரின்ஸ்பல் அழைத்து கண்டித்தபோது மகனிடம் இனிமேல் அப்படி செய்யக்கூடாது என்று கூறிய பிஜூமேனனே சந்தர்ப்ப சூழ்நிலையால் பிட் அடிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார். அதற்கு வேறு வழியின்றி தனது மகனின் புத்திசாலித்தனமான உதவியையும் நாடுகிறார்.
ஆனாலும் பிட் அடித்து மாட்டிக்கொண்டு மீடியாக்களில் செய்தி வெளியாகி அவமானம் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் ஆயுதப்படை போலீஸ், நாய்கள் பராமரிப்பு என மாற்றி மாற்றி தூக்கி அடிக்கப்படுகிறார். மீண்டும் இன்னொரு தேர்வுக்கு தயாராகும் நிலையில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. அது என்ன ? அவருக்கு அது சாதகமாக இருந்ததா என்பது கிளைமாக்ஸ் .
அய்யப்பனும் கோஷியும் படத்தில் அய்யப்பன் நாயர் கதாபாத்திரத்தில் எந்த அளவிற்கு ஒரு ஸ்ட்ரிக்ட்டான போலீஸ் ஆபீஸராக பார்த்தோமோ, அதற்கு நேர் மாறாக பயந்த சுபாவம் கொண்ட அதே சமயம் ஈகோ மனப்பான்மை கொண்டவராக ஒரு புதிய கதாபாத்திரத்தில் அப்படியே தன்னை மாற்றிக் கொண்டுள்ளார் பிஜூமேனன். குறிப்பாக படம் முழுக்க காமெடிக்கு முழு உத்தரவாதம் தந்து நடித்துள்ளார். அவர் பிட்டு அடித்து மாட்டிக் கொள்வது முதல் பணி இடமாற்றம் செய்யப்பட்டு சந்திக்கும் சங்கடங்கள் எல்லாமே அக்மார்க் காமெடி ரகங்கள் தான்.
ஜிகர்தண்டா, தசரா உள்ளிட்ட படங்களில் கொடூர வில்லனாக பார்த்த ஷைன் டாம் சாக்கோ இதிலும் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரம் என்றாலும் முழுக்க முழுக்க நகைச்சுவை மூலம் பூசப்பட்டுள்ளதால் அவரையும் அழகாக ரசிக்க முடிகிறது. பிஜூமேனனின் நண்பராக வரும் இன்னொரு காவலர் செய்யும் அப்பாவித்தனமான சேஷ்டைகள் எல்லாம் அடப்பாவி என்று சொல்லும் விதமாக முடிந்து அவருக்கு எதிராக திரும்புவது எல்லாமே சிரிப்புக்கு உத்தரவாதம் தரும் காமெடி தான்.
பிஜூமேனனின் மகனாக நடித்துள்ளவர் பிட் அடிப்பதற்காக கையாளும் வழிமுறைகளை பார்க்கும்போது நமக்கே தலை சுற்றுகிறது. இனி இதை பார்த்து மாணவர்களும் இதேபோல முயற்சித்தால் சிக்கல் தான். பிஜூமேனனின் மனைவியாக நடித்திருக்கும் உன்னி மாயா பிரசாத் ஒரு சராசரி குடும்பத் தலைவியாக தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். போலீஸ் உயரிய வருபவர் கறாரும் கண்டிப்புமாக நடந்து கொண்டாலும் அவரது கதாபாத்திரத்திலும் காமெடியை வரவழைத்து இருக்கிறார்கள். மற்றும் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள மற்ற காவலர்களும் அங்கே நடைபெறும் காட்சிகளும் படத்தை கலகலப்பாக நகர்த்த உதவி இருக்கின்றனர்.
இது போலீஸ் படம் என்றாலும் அங்கே எதார்த்தமாக நடைபெறும் குளறுபடிகள் காவலர்களுக்குள் தனிப்பட்ட முறையில் இருக்கும் ஈகோ மோதல், அதை காமெடியாக சொன்ன விதம் என இரண்டு மணி நேரம் ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரியாஸ் ஷெரிப். அதேசமயம் கதையில் மிகப்பெரிய அழுத்தம் இல்லாததும் அடுத்து என்ன நடக்குமோ என்கிற விறுவிறுப்பு இல்லாததும் ஒரு மிகப்பெரிய குறை. கவலை மறந்து இரண்டு மணி நேரம் சிரித்து விட்டு வர வேண்டுமானால் அதற்கு ஏற்ற படம்தான் இந்த 'துண்டு'.
துண்டு : காட்டன் அல்ல... பாலிஸ்டர்
பட குழுவினர்
துண்டு (மலையாளம்)
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்