நடிகர்கள் : பிஜூமேனன், அனு சித்தாரா, திலீஷ் போத்தன், ஷைஜூ குறூப், சேதுலட்சுமி, பஷில் ஜோசப், ஹரீஷ் கணரன்
இயக்கம் : ரபீக் இப்ராஹிம்
வேண்டியவருக்காக பழிவாங்க புறப்படுவதை இவ்வளவு காமெடியாக கூட சொல்ல முடியுமா என ஆச்சர்யப்பட வைக்கின்ற 'காமெடி குண்டர்கள் கதை தான் இந்த படையோட்டம்..
திருவனந்தபுரம் பகுதியில் உள்ளூர் ரவுடிகளான திலீஷ் போத்தன், ஷைஜூ குறூப் ஆகியோர் தங்களுக்கு தெரிந்த பையனான பஷில் ஜோசப்பை ஒரு சிக்கலில் இருந்து காப்பாற்றுகின்றனர். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக சரக்கு பார்ட்டி வைக்கிறார் பஷில். அப்போது சிகரெட் வாங்கப்போன இடத்தில் போதையில் வம்பிழுத்து ஒருவனிடம் அடிவாங்குகிறார் பஷில். விஷயம் அறிந்து கோபமான உள்ளூர் ரவுடிகள் அடித்தவனை இழுத்துவந்து பஷிலிடம் மன்னிப்பு கேட்க வைப்பதற்காக அவனை தேடிக்கிளம்ப, அவனோ 550 கி.மீ தாண்டி உள்ள காஸர்கோட்டை சேர்ந்தவன் என்பது தெரிய வருகிறது.
அவ்வளவு தூரம் போய் எதிரியை அள்ளி வருவதென்றால் பலசாலியான ஒரு ஆள் துணை வேண்டும் என்பதற்காக தங்களது குருவான செங்கல் ரகு எனப்படும் பிஜூமேனனின் உதவியை நாடுகின்றனர். அடிவாங்கிய பஷில் ஒருகாலத்தில் தன்னை காப்பாற்றியவன் என்பதால் பிஜூமேனனும் இதற்கு ஒப்புக்கொண்டு கிளம்புகிறார்.
போகும் வழியில் அவர்களது பயணம் பல இடைஞ்சல்களை சந்தித்து கார், பஸ், லாரி என காமெடியாக தொடர்கிறது. ஒருவழியாக காஸர்கோட்டை அடைந்ததும் தான், தாங்கள் தேடிவந்த பையன் காஸர்கோட்டின் பிரபல தாதா ஒருவனின் மகன் என்பதும் அவனை யாரோ கடத்தி விட்டார்கள் என்பதும் தெரிகிறது.. அதைவிட அதிர்ச்சியாக பிஜூமேனன் குரூப் தான் தங்கள் பையனை கடத்திவிட்டதாக நினைத்து, திருவனந்தபுரத்திற்கே சென்று பிஜூமேனன் அம்மா மற்றும் பஷில் குடும்பத்தினரையும் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து, தனது மகனை அழைத்துக்கொண்டு திருவனந்தபுரம் வருமாறு கட்டளையிடுகிறான் அந்த தாதா.
இதென்னடா வம்பாக போயிற்று என அந்த பையனை தேட ஆரம்பிக்கிறது பிஜூமேனன் அன் கோ. அந்த பையன் அவர்களிடம் சிக்கினானா, இவர்களுக்கு முன்னரே அந்த பையனை கடத்தியது யார், எதற்காக கடத்தினார்கள், பஷில் ஜோசப்புக்காக பிஜூமேனன் அன் கோ செய்த சபதம் என்ன ஆயிற்று என்பதை விவரிக்கிறது மீதிக்கதை.
90% காமெடி 10% சீரியஸ் என முடிவு செய்தே கதையை எழுதியிருக்கிறார்கள்.. பிஜூமேனன் ஆகிருதியான தோற்றத்துடன் ஒரிஜினல் ரவுடியாக வந்தாலும், படம் முழுக்க நடக்கும் பயணத்தில் அவரை காமெடி தோரணத்தில் கட்டி தொங்க விட்டுள்ளார்கள். அதனால், தான் வரும் காட்சிகளில் எல்லாம் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறார் பிஜூமேனன். அதிலும், தன்னுடன் வரும் அல்லக்கைகளிடம் சிக்கிக்கொண்டு அவர் படும் பாடு இருக்கிறதே, நமக்கே அவரை பார்க்கும்போது பாவமாக இருக்கிறது.
பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்த கதையாக பிஜூமேனனுடன் கூடவே இருந்து கொண்டு வெட்டி உதார் விட்டு, வழியெல்லாம் பிரச்சனைகளை விலைக்கு வாங்கும் சுதி கோப்பா மீது பிஜுமேனனுக்கு மட்டுமல்ல நமக்கும் கூட கோபம் வருகிறது. சேனன் என்கிற ரவுடி கேரக்டரில் பிஜூமேனனுடன் படம் முழுவதும் அதகளம் பண்ணும் இயக்குனரான திலீஷ் போத்தன் நாளுக்குநாள் மிகச்சிறந்த நடிகராக மாறி வருகிறார்.. அப்படியே ரசிகர்களுக்காக அவ்வப்போது டைரக்சன் பக்கமும் தலைகாட்டுங்கள் சாரே..
ஷைஜு குறூப்பிடம் உள்ள ஸ்பெஷலே வில்லத்தனமோ, காமெடியோ இறங்கி அடிப்பது தான்.. இதில் காமெடி ஏரியாவில் கலக்குகிறார். நகை அடகு வைக்கப்போன இடத்தில் நக்கலாக சிரித்து, தனது மனைவியின் மோதிரத்தை பறிகொடுக்கும் காட்சியில் தியேட்டர் அதிர்கிறது. இது போதாதென்று நாடோடிகள் கஞ்சா கருப்பு பாணியில் காஸர்கோட்டில் இவர்களுக்கு உதவுவதாக உள்ளே நுழைந்து குட்டிக்கலாட்டா பண்ணும் ஹரீஷ் கரணன் தனது பங்கிற்கு காமெடியில் வச்சு செய்கிறார்.
இந்த மொத்தக்கதைக்கும் பிள்ளையார் சுழி போட்ட இருபது வயது இளைஞனாக பஷில் ஜோசப் மருத்துவமனையில் படுத்துக்கொண்டு பண்ணும் அலம்பல்கள் அட்டகாசம். கடைசியில் அவரை அடித்தவன் யாரென்கிற உண்மை தெரியவரும்போதும், தனது கழுத்தில் அணிந்துள்ள சங்கிலி பற்றிய உண்மையை அறியும்போதும் பிஜூமேனனுக்கு ஒரு விரக்தி வரும் பாருங்கள்.. அது படம் பார்த்தால் தான் புரியும்..
கதாநாயகி பற்றி சொல்லவே இல்லை என்கிறீர்களா..? பிஜுமேனனின் அம்மாவாக, வரும் காட்சிகளில் எல்லாம் வசனங்களால் காமெடி பட்டாசு வெடிக்கும் சேதுலட்சுமி கூட படம் முழுக்க வருகிறார். ஆனால் இரண்டே காட்சிகளில் ஒரு பேருந்து பயணத்தில் வெறும் ஐந்து நிமிடம் மட்டும் தலைகாட்டியதோடு அதன்பின் க்ளைமாக்ஸ் வரை எங்கேயும் கண்ணில் படாத அனு சித்தாராவை கதாநாயகி என்று சொன்னால் அவரே கோபித்துக்கொள்வார்.
மொத்தத்தில் இந்த காமெடி குண்டர்கள் படம் முழுதும் நம்மை ஒருவழி பண்ணி அனுப்பி வைக்கிறார்கள்.. சந்தோஷமாகத்தான்..