நடிகர்கள்: பிரித்விராஜ், சுராஜ் வெஞ்சரமூடு, மியா ஜார்ஜ், தீப்தி சதி, சைஜூ குறூப், லாலு அலெக்ஸ், சலீம்குமார், சுரேஷ் கிருஷ்ணா, மேஜர் ரவி, நந்து மற்றும் பலர்.
கதை, திரைக்கதை: சாச்சி
டைரக்சன்: ஜீன் பால் லால் (லால் ஜூனியர்)
ரேட்டிங் 3.5/5
வெளியான நாள்: 20 டிச., 2019
தனது அபிமான ஹீரோ மேல் தீவிர பக்தனாக இருக்கும் ரசிகனுக்கும் அந்த ஹீரோவுக்கும் எதிர்பாராமல் ஏற்படும் யுத்தம்தான் படத்தின் கதை.
மலையாள திரையுலகில் பிரபல ஹீரோ ஹரீந்திரன் (பிரித்விராஜ்). மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றும் சுராஜ் வெஞ்சரமூடு, இவரது தீவிரமான ரசிகர்.. பிரித்விராஜ் சம்பந்தப்பட்ட ஒரு படத்தின்ன் கிளைமாக்ஸ் காட்சியை ஆர்மி பகுதிகளில் படமாக்க அனுமதி வாங்குவதற்கு அவரது டிரைவிங் லைசென்ஸ் தேவைப்படுகிறது. ஆனால் அது அவரிடம் இருந்து காணாமல் போனது தெரிய வருவதுடன் அது தொடர்பான டாக்குமென்ட்டுகள் ஆர்டிஓ அலுவலகத்திலும் தொலைந்து போனதும் தெரிய வருகிறது. அதை மீண்டும் புதுப்பிக்க வழி இல்லாத நிலையில் புதிய லைசென்ஸ் விண்ணப்பிக்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்படுகிறது.
இந்த வேலையை விரைந்து முடித்து தருவாதாக கூறும் பிரித்விராஜின் அரசியல் நண்பரான சைஜு குறூப் என்பவர் இதற்காக சுராஜ் வெஞ்சரமூடுவின் உதவியை நாடுகிறார்.. தனது அபிமான ஹீரோவுக்கு உதவி செய்வதற்கு தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழும் சுராஜ், இரண்டு தினங்களில் அதை முடித்து தருவதாகவும் ஒரே ஒருமுறை பார்மாலிட்டிக்காக பிரித்விராஜை ஆர்டிஓ அலுவலகத்திற்கு வந்து செல்லுமாறும் அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள தான் விரும்புவதாகவும் அவரிடம் கூறி அனுப்புகிறார். ரகசியமாக இருந்த இந்த விஷயம் எப்படியோ கசிந்து மறுநாள் பிரித்விராஜ் ஆர்டிஓ அலுவலகத்திற்கு வரும்போது அங்கே கூடியிருக்கும் மீடியாக்கள் மூலமாக அவருக்கு டிரைவிங் லைசென்ஸ் இல்லாத விஷயம் நாடே அறிந்த தலைப்புச் செய்தியாகி விடுகிறது.
இந்த விஷயம் இப்படி வெட்டவெளிச்சம் ஆவதற்கு சுராஜ் தான் காரணம் என நினைக்கும் பிரித்விராஜ், தங்களது முதல் சந்திப்பிலேயே அவரிடம் கோபமுகம் காட்டி கடுமையாக திட்டி விடுகிறார்.. அந்த நொடி முதல் தனது அபிமான ஹீரோ என்கிற பிம்பம் சுராஜின் மனதில் இருந்து சுக்கு நூறாக உடைந்து போக, அதன் பிறகு ஒரு கண்டிப்பான மோட்டார் வாகன ஆய்வாளராக பிரித்விராஜூடன் போருக்கு தயாராகிறார் சுராஜ். அதன் பிறகு இருவருக்கும் டிரைவிங் லைசன்ஸ் விவகாரத்தில் ஏற்படும் மோதல் மீடியாக்கள் வாயிலாக ஊதிப் பெரிதாக்கப்படுகிறது. ஒருகட்டத்தில் தனது மனைவியின் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருக்கும் பிரித்விராஜின் பயணத்தையும் இது முடக்கிப்போடுகிறது. இவர்களது இந்த யுத்தம் முடிவுக்கு வந்ததா..? இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் மீதி படம்
இதுநாள் வரை திரையுலக பிரபலங்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களிக்கும் காட்சிகளை பார்த்திருக்கிறோம்.. ஆனால் டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதற்கு ஒரு ஹீரோ படும்பாட்டை இந்தப் படம் ரொம்பவே நகைச்சுவையாகவும், அதேசமயம் நெகிழவைக்கும் விதமாகவும் சித்தரிக்கிறது.
ஒரு பக்கம் நடிப்பு, அதற்கு சமமாக இன்னொரு பக்கம் வித விதமான கார்களை ஓட்டும் ஆசை, என்ன ஆனாலும் குடும்பத்திற்காக குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிய தீருவேன் என்கிற மன வைராக்கியம் இவற்றின் மொத்த கலவையாக ஹீரோ ஹரீந்திரன் கதாபாத்திரத்தில் பிரித்விராஜ்.. கிட்டத்தட்ட பாதிப்படம் வரை நெகடிவ் சாயல் கொண்ட நடிப்பில் மிரட்டுகிறார்.. குறிப்பாக தனது ரசிகர் சுராஜூடன் அவர் மோதல் போக்கை கடைபிடிக்கும் காட்சிகளும் அதற்கு பதிலடி தரும் சுராஜை சாமர்த்தியமாக அவர் சமாளிக்கும் காட்சிகளும் சபாஷ் போட வைக்கின்றன
ஒரு ஹீரோவை கடவுளுக்கு சமமாக நினைக்கும் அதே ரசிகன் ஹீரோவின் உண்மை முகம் தெரியும்போது என்ன விதமான நிலைக்கு மாறுகிறான் என்பதை இரண்டு விதமான நடிப்பால் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் மோட்டார் வாகன ஆய்வாளராக வரும் சுராஜ் வெஞ்சரமூடு. கடைசி அரைமணி நேரத்தில் டிரைவிங் லைசன்ஸ் தருவதற்காக பிரித்விராஜை அவர் படுத்தும் பாட்டை பார்க்கும்போது நெகடிவ் சாயல் சுராஜின் மீது அழகாக திரும்பி ஒரு கட்டத்தில் அவர் மீதே நமக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அந்த அளவிற்கு மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் மனிதர். க்ளைமாக்ஸ் காட்சிகள் காரில் அமர்ந்தபடி பிரிதிவிராஜூடன் சுராஜ் பேசிக்கொள்ளும் காட்சி நம்மை ரொம்பவே நெகிழ வைக்கிறது.
சுராஜின் மனைவியாக மியா ஜார்ஜ்.. படபடவென பேசி கணவருக்கு தேவையில்லாத சிக்கலை உண்டு பண்ணும் கலாட்டா கதாபாத்திரம்.. மிகச் சரியாக செய்திருக்கிறார்.. பிரித்விராஜின் மனைவியாக வரும் தீப்தி சதி சில காட்சிகளே வந்தாலும் அமைதியான் நடிப்பால் மனதில் நிற்கிறார்.. பிரித்விராஜின் சக போட்டி நடிகராக வரும் சுரேஷ் கிருஷ்ணா, அவருக்கு எதிராக செய்யும் அலம்பல்கள் எல்லாமே குபீர் சிரிப்பு வரவழைக்கும் ரகம்.
பிரித்விராஜ் காரை ஓட்ட பின் சீட்டில் உயிரைப் பிடித்தபடி அமர்ந்து வரும் அவரது கார் டிரைவராக நந்துவின் குணச்சித்திர நடிப்பு பாந்தம். பிரித்விராஜை சந்தித்தால் இரண்டே நிமிடத்தில் அவரது பிரச்சினையை தீர்த்து விடுவேன் என்று அடிக்கடி கூறும் சலீம்குமாரின் கதாபாத்திரம் அவரை சந்திக்க முடியாமல் போவதும், ஒருவழியாக அவரை கிளைமாக்ஸ் காட்சியில் சந்திக்கும்போது அவரிடம் வெளிப்படுத்தும் உண்மையைக் கண்டு தியேட்டரில் கைதட்டாத நபர்கள் யாரும் ஏற்க மாட்டார்கள்..
பிரித்விராஜ் நண்பர் கதாபாத்திரத்தில் பப்ளிசிட்டி விரும்பி அரசியல்வாதியாக சைஜு குறூப் செய்யும் அலப்பறைகள் மலையாள சினிமாவில் இளமையான குணச்சித்திர கதாபாத்திரத்தில் இவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்று சொல்லாமல் சொல்கிறது. பிரபல ஹீரோக்களை வைத்து படம் தயாரிக்கும் படத்தயாரிப்பாளர் ஒருவர் எப்படியெல்லாம் மன உளைச்சலுக்கு ஆளாவர் என்பதை அழகாக வெளிப்படுத்தி உள்ளார் டென்சன் பார்ட்டியாக வரும் லாலு அலெக்ஸ். மோட்டார் வாகன அதிகாரியாக வரும் மேஜர் ரவியும் தன பங்ளிப்பை சிறப்பாக அளித்திருக்கிறார்.
சினிமாவை மையப்படுத்தி எடுக்கப்படும் கதை எந்த அளவிற்கு விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்க வேண்டுமென இந்த படத்தின் மூலம் ஒரு பாடமே எடுத்திருக்கிறார் இயக்குனர் லால் ஜூனியர் (சண்டக்கோழி வில்லன் நடிகர் லாலின் மகன் தான் இவர்). ஒரு டிரைவிங் லைசென்ஸ் விஷயத்தை வைத்துக்கொண்டு காட்சிக்கு காட்சி அதை அடுத்த கட்டத்திற்கு விறுவிறுப்பாகவும் சற்றே த்ரில்லிங்காகவும் நகர்த்திக் கொண்டு செல்வதில் ஒரு அனுபவப்பட்ட இயக்குனராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் லால் ஜூனியர். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் தன்னால் பாதிக்கப்படும் சுராஜ் வெஞ்சரமூடுவை காப்பாற்றுவதற்காக பிரித்விராஜ் ஓடிவரும் அந்தக் காட்சி நெகிழ வைப்பதுடன் ஒரு ஹீரோ எப்படி இருக்க வேண்டும், அவரது ரசிகர்கள் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கான உதாரணத்தையும் காட்டுவதாக அமைந்துள்ளது..
மொத்தத்தில் தங்களது அபிமான ஹீரோக்களை வெறித்தனமாக ஆராதிக்கும் ரசிகர்கள் இந்த படத்தின் மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன.. ஹீரோக்களுக்கும் தான்..
டிரைவிங் லைசென்ஸ் - ஒரு பீல் குட் படம்