3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - வியாகாம் 18 ஸ்டுடியோஸ், ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - ரா கார்த்திக்
இசை - கோபி சுந்தர்
நடிப்பு - அசோக் செல்வன், ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர்
வெளியான தேதி - 4 நவம்பர் 2022
நேரம் - 2 மணி நேரம் 26 நிமிடம்
ரேட்டிங் - 3/5

படத்தின் தலைப்பைப் பார்த்ததும் இது ஒரு காதல் கதை என்று நினைப்போம். ஆனால், காதலை விடவும் ஒரு தனி மனிதன் தன் வாழ்க்கையை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று பாடம் எடுக்கும் ஒரு படம்.

இயக்குனர் ரா கார்த்திக், ஒரு 'பீல் குட்' படத்தைக் கொடுக்க வேண்டும் என்று முயற்சித்திருப்பது தெரிகிறது. கதைக்குள் கதை என புதுவிதமாகவும் யோசித்திருக்கிறார். அதே சமயம், படம் பார்க்கும் ரசிகர்கள் தொடர்ச்சியாக சுவாரசியத்தை எதிர்பார்ப்பார்கள் என்பதை இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால் இந்தப் படம் வேறு மாதிரியாக அமைந்திருக்கும்.

ஐ.டி. கம்பெனியில் வேலை பார்ப்பவர் அசோக் செல்வன். சுத்தமாக இருக்க வேண்டும், எதுவும் ஒழுங்காக இருக்க வேண்டும், எதையும் முறையாகச் செய்ய வேண்டும் என்ற குணம் கொண்டவர். வீட்டில் இருக்கும் நாயைக் கூடத் தொடாதவர். அப்படிப்பட்டவருக்கு திருமணம் நிச்சயமாகி திருமணத்தன்று அதிகாலையில் மணப் பெண் அவரது காதலனுடன் செல்கிறேன் எனச் சொல்லிவிட்டுச் செல்கிறார். அசோக் செல்வனின் டாக்டரான அபிராமி, அசோக்கிடம் அவர் எழுதிய சிறு கதைகளைக் கொடுத்து படிக்கச் சொல்கிறார். ஆனால், அந்தக் கதைகளில் முடிவுகள் கிழிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பேராவலில் அபிராமியிடம் அதைப் பற்றிக் கேட்க. அவை கதை அல்ல, உண்மை, அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள அவர்களைத் தேடிப் போ என முகவரிகளைக் கொடுக்கிறார். அசோக்கும் அவர்களைப் பார்க்கக் கிளம்புகிறார். அதன்பின் அந்தப் பயணத்தில் அவர் என்ன அனுபவங்களைக் கற்றுக் கொள்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சிறு வயதிலிருந்தே எந்த கதை புத்தகத்தைப் படித்தாலும் அதில் வரும் கதாநாயகர்களாக தன்னையே நினைத்துக் கொள்பவர் அசோக். டாக்டர் அபிராமி கொடுத்த சிறு கதைகளில் உள்ள இரண்டு கதைகளின் கதாநாயகர்களாக தன்னையே நினைத்துக் கொள்கிறார். அதில் ஒருவர் இஞ்சினியரிங் கல்லூரி மாணவர் வீரா கதாபாத்திரம். அக்கதாபாத்திரத்தில் 'மௌனராகம், இதய தாமரை' கார்த்திக்கை ஞாபகப்படுத்துகிறார் அசோக் செல்வன். இரண்டாவது கதையில் கொங்கு தமிழ் பேசும் பிரபா கதாபாத்திரம். நகைச்சுவைக் கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பேன் என அக்கதாபாத்திரத்தில் புரிய வைக்கிறார். அந்தப் பிரபா யார் என்பது பிறகு தெரிய வரும் போது எதிர்பாராத சஸ்பென்ஸ். கதையில் படித்தவர்களைத் தேடிப் புறப்படும் அர்ஜுன் கதாபாத்திரம் என மூன்று விதமான கதாபாத்திரங்களிலும் தனித் தனியே முத்திரை பதித்திருக்கிறார் அசோக் செல்வன்.

முதல் சிறு கதையாக வரும் இஞ்சினியரிங் கல்லூரி காதலில் வீராவின் காதலியாக மீனாட்சி கதாபாத்திரத்தில் ஷிவாத்மிகா ராஜசேகர். அப்படியே நம் பக்கத்து வீட்டுப் பெண்களில் ஒருவராகத் தெரிகிறார். அவர் பார்க்கும் காதல் பார்வையும், வீரா மீது வரும் காதலுமாக கிடைத்த அரை மணி நேரத்தில் அசத்தியிருக்கிறார் ஷிவாத்மிகா.

படத்தின் மற்றொரு அசத்தல் அபர்ணா பாலமுரளி. கோவை பக்கம் கிராமங்களில் இப்படியும் ஒரு பெண் இருப்பாரா என்ற சந்தேகம் எழுந்தாலும், அந்த மதி கதாபாத்திரத்திற்கு தன் நடிப்பால் மதிப்பு கூட்டுகிறார் அபர்ணா.

அசோக்கின் பயணத்தில் பயணத் தோழியாக இணைகிறார் ரித்து வர்மா. இருவரும் முதலில் கொஞ்சம் சண்டை போட்டுக் கொண்டாலும் போகப் போக மற்றவரைப் புரிந்து கொண்டு நெருக்கமாகிறார்கள். ரித்து போல ஒரு தோழி கிடைத்தால் இக்கால இளைஞர்களுக்குக் கொண்டாட்டமாகவே இருக்கும்.

ஷிவாத்மிகா, அபர்ணா, ரித்து என மூன்று கதாநாயகிகளுடனும் அப்படியே 'அட்டாச்' ஆகிவிடுகிறார் அசோக் செல்வன்.

கோபி சுந்தர் பின்னணி இசையும், விது அய்யன்னா ஒளிப்பதிவும் படத்தின் தரத்தை மெருகூட்டியுள்ளன. இந்த மாதிரியான படங்களுக்கு பாடல்கள் பக்கபலமாக அமைய வேண்டும். அழகான பயணத்தில் அவை வேகத் தடைகளாக அமைந்துள்ளன.

படத்தின் ஆரம்பக் காட்சிகள் படம் எதை நோக்கி நகர்கிறது எனத் தெரியாமல் நகர்கிறது. சில பல தேவையற்ற காட்சிகளுக்குப் பிறகுதான் கதைக்குள் அழைத்துச் செல்கிறார் இயக்குனர். கிளைமாக்ஸ் காட்சிகள் நெகிழ்வு. மனதை எளிதாக்கும் மந்திரம் என்ன என்பதை புரிய வைக்கும் படம்.

நித்தம் ஒரு வானம் - எண்ணமும் வண்ணமும்…

 

நித்தம் ஒரு வானம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

நித்தம் ஒரு வானம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓