சொர்க்கவாசல்,SorgaVaasal

சொர்க்கவாசல் - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ், திங்க் ஸ்டுடியோஸ்
இயக்கம் - சித்தார்த் விஸ்வநாத்
இசை - கிறிஸ்டோ சேவியர்
நடிப்பு - ஆர்ஜே பாலாஷி, சானியா ஐயப்பன், செல்வராகவன், கருணாஸ், நட்டி
வெளியான தேதி - 29 நவம்பர் 2024
நேரம் - 2 மணி நேரம் 17 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

சென்னையில் மத்திய சிறையில் 1999ம் ஆண்டு பெரும் கலவரம் ஒன்று நடைபெற்றது. துணை ஜெயிலர் எரித்துக் கொல்லப்பட்டடார், கலவரைத்தை அடக்க வந்த காவல்துறையினர் சுட்டதில் 9 கைதிகள் கொல்லப்பட்டனர். அந்தக் கலவரத்தை மையமாக வைத்து கற்பனை கலந்து இந்தக் கதையைக் கொடுத்திருக்கிறார்கள்.

சிறை கண்காணிப்பாளர், சிறைக் காவலர்கள், அங்குள்ள கைதிகள், கைதிகளுக்கு இடையிலான கோஷ்டிகள், அந்தக் கோஷ்டிகளின் தலைவன்கள், அங்குள்ள அப்பாவிக் கைதிகள் என ஒரு சிறை வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது இந்தப் படம். தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு வந்த சிறைப் படம் என்றால் 2004ல் வெளிவந்த கமல்ஹாசன் நடித்த 'விருமாண்டி' படத்தைச் சொல்லலாம். ஏறக்குறைய அந்தப் படப் பாணியில்தான் இந்தப் படத்தின் திரைக்கதையையும் அமைத்திருக்கிறார்கள். சிறைக் கைதியான ஆர்ஜே பாலாஜி, மற்ற சில கைதிகள், காவல் துறையினர் தங்கள் பக்க நியாயத்தை சொல்வது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

'விருமாண்டி' படத்தில் ஆவணப் படமெடுப்பவர் மற்றவர்களின் கதையைக் கேட்கிறார். இந்த 'சொர்க்கவாசல்' படத்தில் விசாரணை கமிஷன் நீதிபதி மற்றவர்களின் கதையைக் கேட்கிறார்.

சென்னை மத்திய சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் சிறை கண்காணிப்பாளர், சிறைக் காவலர்கள், சிறைக் கைதிகள் ஆகியோர் கொல்லப்பட்டது குறித்து அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன் தலைவரான நீதிபதி நட்டி அவரது விசாரணையை ஆரம்பிக்கிறார். அவரிடம் சிறையின் துணை கண்காணிப்பாளர் கருணாஸ், கொலைக் கைதியான ஆர்ஜே பாலாஜி, அவரது காதலி சானியா ஐயப்பன், மற்ற சிலர் நடந்தது என்ன என்பது பற்றி கூறுகிறார்கள். அவை பிளாஷ்பேக் காட்சிகளாக சொல்லப்படுகிறது. எப்படி, எதற்காக கலவரம் நடந்தது, அதன் முடிவு என்ன என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

படத்தின் போஸ்டர்களில் ஆர்ஜே பாலாஜி தான் கதாநாயகன் என்பது போல முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆனால், படத்தில் பலருக்கும் முக்கியத்துவம் உள்ளது. படத்தின் முதல் பாதியில் சிறைக் கைதி, பிரபல ரவுடி சிகா கதாபாத்திரத்தில் நடித்துள்ள செல்வராகவன் முக்கியத்துவம் பெறுகிறார். அடுத்து சிறை கண்காணிப்பாளராக புதிதாக வரும் ஷராப் யு தீன், துணை கண்காணிப்பாளர் கருணாஸ், ஆகியோருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருடனும் தொடர்பாகும் கொலைக்கைதியாக ஆர்ஜே பாலாஜியும் முக்கியத்துவம் பெறுகிறார்.

தள்ளு வண்டியில் சாப்பாடு கடை நடத்துபவராக பாலாஜி. அவர்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் கொன்ற குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். ஆனால், அவரை அந்தக் கொலையைச் செய்யவில்லை. இருந்தாலும் சாட்சிகள் அவர்தான் குற்றவாளி என்கிறது. சிறைக்குள் சென்ற அப்பாவியான பாலாஜி, அங்குள்ள கேங்வாரில் சிக்கி என்ன ஆகிறார் என்பதுதான் அவருக்கான கதை. அப்பாவியாக இருப்பார் என்பதால் பாலாஜியைத் தேர்வு செய்திருக்கலாம். அவரும் முடிந்தவரையில் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கிண்டலான கதாபாத்திரங்களில் நடித்து பார்த்துப் பழகியவரை பார்த்திபன் என்ற சீரியஸ் கதாபாத்திரத்தில் பார்க்கக் கொஞ்சம் நெருடல் இருக்கத்தான் செய்கிறது.

பாலாஜி தவிர படத்தில் மூன்று கதாபாத்திரங்கள் ஏறக்குறைய மற்ற கதாநாயகர்கள் போலத்தான் படத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளார்கள். சிறைக்குள் இருந்து கொண்டே சென்னையை ஆட்டிப் படைக்கும் ரவுடி சிகா கதாபாத்திரத்தில் செல்வராகவன். அவரைக் கண்டால் சிறையில் உள்ள காவலர்களும் நடுங்குகிறார்கள்.கொஞ்சம் நீளமான முடி, தாடி, லுங்கி சட்டை என தோற்றத்தில் கரடு முரடாக இருந்து அதிரடி காட்டியுள்ளார் செல்வராகவன்.

சிறை கண்காணிப்பாளர் சுனில் குமார், மொத்த சிறையையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள எதைப் பற்றியும் கவலைப்படாமல் என்னென்னமோ செய்கிறார். பத்து வருடங்களுக்கு முன்பு வந்த 'நேரம்' படத்தில் அறிமுகமானவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வந்து மிரட்டியிருக்கிறார்.

துணை கண்காணிப்பாளர் கதாபாத்திரத்தில் கருணாஸ். சிறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற முடியாத கோபத்தில் இருப்பவர். இக்கதையின் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் முக்கியமானவர். வெளியில் பழகுவதைப் பார்த்து நம்பக் கூடாது என்பதற்கு உதாரணமான ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

பாலாஜியின் காதலியாக கொஞ்ச நேரமே வந்து போகிறார் சானியா ஐயப்பன். சிறையின் சமையல் பொறுப்பில் இருக்கும் கைதியாக பாலாஜி சக்திவேல் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்.

விசாரணை கமிஷன் நீதிபதியாக நட்டி. ஒரு அறைக்குள் கேமரா, டேப்ரிக்கார்டர், ஒரு டைப்பிஸ்ட் சகிதம் அமர்ந்து கொண்டு ஒரு முக்கியமான விசாரணையை உட்கார்ந்த இடத்திலேயே நடத்தி முடிக்கிறார். சம்பவம் நடந்த இடத்திற்கெல்லாம் நேரில் சென்று கூட பார்க்காத ஒரு விசாரணையா என அதிர்ச்சியூட்டுகிறது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள். விசாரணை கமிஷன் விசாரணை இப்படித்தான் நடக்கும் என்று சொல்ல வருகிறார்களா என்பதை இயக்குனர்தான் சொல்ல வேண்டும்.

மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு கலை இயக்குனர் ஜெயச்சந்திரன் பற்றித்தான் முதலில் குறிப்பிட வேண்டும். சென்னை மத்திய சிறைச்சாலை இப்படித்தான் இருக்கும் என்பதை நம்ப வைத்துவிட்டார். பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு மொத்த சிறை வளாகத்தையும் தனது கேமராவில் விதவிதமாக சிறை பிடித்திருக்கிறது. கிறிஸ்டோ சேவியர் பின்னணி இசையில் பல இடங்களில் 'லெவல்' மீறி இருக்கிறது. முக்கிய வசனங்களைக் கேட்க முடியவில்லை. மிக்ஸிங் செய்தவராவது கவனித்திருக்க வேண்டும். இப்படியான படங்களில் வசனங்கள் கேட்கும்படி இருப்பது முக்கியம். தினேஷ் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் சினிமாத்தனமில்லாமல் அமைந்துள்ளன.

அப்பாவியான பாலாஜி கொலைக் குற்றவாளியாக்கப்பட்டு சிறைக்குள் வருகிறார். அவர் மீது நமக்கு ஆரம்பம் முதலே ஒரு அனுதாபம் வர வேண்டும். அது அழுத்தமில்லாமல் இருக்கிறது. கருணாஸ் தான் விசாரணையில் படத்தை ஆரம்பித்து வைப்பது அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். மாறாக பாலாஜி பற்றிய கதையுடன் படம் ஆரம்பமாகி இருந்தால் அந்த அழுத்தமும், அனுதாபமும் கிடைத்திருக்கலாம். 'விருமாண்டி, விசாரணை' ஆகிய படங்களில் அதிகாரத்தில் இருப்பவர்களின் கொடுமைகள் நம் மனதை பாதிக்கும் அளவில் அனுதாபம் வரும் அளவில் அழுத்தமாய் கொடுக்கப்பட்டிருந்தது. அதனால், சிறை பற்றிய படங்களில் அவை இன்றும் பேசப்படுகிறது. இந்தப் படத்தில் அந்த அனுதாபமும், அழுத்தமும் மிஸ்ஸிங்.

சொர்க்கவாசல் - நரகத்தின் கதை…

 

சொர்க்கவாசல் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

சொர்க்கவாசல்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓