ரன் பேபி ரன்
விமர்சனம்
தயாரிப்பு - பிரின்ஸ் பிக்சர்ஸ்
இயக்கம் - ஜியென் கிருஷ்ணகுமார்
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - ஆர்ஜே பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ்
வெளியான தேதி - 3 பிப்ரவரி 2023
நேரம் - 2 மணி நேரம் 13 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
த்ரில்லர் படங்கள் என்றாலே மலையாளப் படங்கள் தான் என்பது கடந்த இரண்டு வருடங்களாக ஓடிடியில் படங்களைப் பார்த்த ரசிகர்களின் ஏகோபித்த கருத்தாக இருக்கிறது. மலையாள இயக்குனரான ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளதால் இதுவும் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு டிரைலரைப் பார்த்து வந்தது. ஆனால், படத்தைப் பார்த்த பின் அந்த எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது.
ஜியென் கிருஷ்ணகுமாரே மலையாளத்தில் வெளிவந்த பல சிறந்த த்ரில்லர் படங்களைப் பார்த்திருக்கமாட்டார் போலிருக்கிறது. இந்தப் படத்தில் சஸ்பென்ஸை மட்டும் கடைசி வரை காப்பாற்றியிருக்கிறார். அதுவரை இந்த 'ரன்' எங்கெங்கோ சுற்றிச் சுற்றி ஓடுகிறது.
வங்கியில் வேலை பார்ப்பவர் ஆர்ஜே பாலாஜி.அவருக்கு இஷா தல்வார் உடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது. ஒரு நாள் யாரிடமிருந்தோ தப்பித்து பாலாஜியின் காரில் ஏறி மறைந்து கொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்படியே பாலாஜியிடம் உதவி கேட்டு அவருடைய பிளாட்டிலும் சில மணி நேரம் தங்க அனுமதி வாங்கி விடுகிறார். ஒரு ஜும் மீட்டிங்கில் கலந்து கொண்டு அப்படியே தூங்கிவிடுகிறார் பாலாஜி. விடிந்த பின் பார்த்தால் ஐஸ்வர்யா ராஜேஷ் அவருடைய வீட்டில் பிணமாகக் கிடக்கிறார். போலீஸ் நண்பன் ஒருவரின் ஆலோசனைப்படி ஐஸ்வர்யாவின் பிணத்தை எங்கோ கொண்டு போய் போட முடிவெடுக்கிறார். காரில் அப்படி கொண்டு செல்லும் போது சில பல சம்பவங்கள் நடக்கிறது. அவற்றையெல்லாம் சொல்ல இடம் போதாது. ஐஸ்வர்யாவைக் கொன்றவர்கள் யார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இதுவரை நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த ஆர்ஜே பாலாஜி, ஒரு சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடைய முகத்திற்கு அது துளியும் செட்டாகவில்லை. ஐஸ்வர்யா காரில் ஏறியதையே பயந்து போய் தடுமாறுகிறார். ஆனால், அவரது பிணத்தை தைரியமாகக் காரில் ஏற்றிக் கொண்டு போகிறார். இப்படி முரணான காட்சிகள் அடிக்கடி வந்து போகின்றன. சீக்கிரம் முடிக்க வேண்டிய காட்சிகளை இ…………ழுத்து முடிக்கிறார்கள்.
படத்தில் மூன்று கதாநாயகிகள் ஐஸ்வர்யா ராஜேஷ், இஷா தல்வார், ஸ்முருதி வெங்கட். மூவருமே மூன்று நிமிடங்களுக்கு மேல் படத்தில் வந்திருக்க மாட்டார்கள். ஐஸ்வர்யாவிற்கு மட்டும் எமோஷனலான சில வரி வசனங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.
ஐஸ்வர்யாவின் பிணத்தை காரில் கொண்டு செல்லும் போது வழியில் கார் ரிப்பேராகிவிட, பிணமிருக்கும் சூட்கேஸ் உடன் சிலர் பயணிக்கும் ஒரு வேனில் அந்த சூட்கேஸை ஏற்றிக் கொண்டு பாலாஜியும் செல்கிறார். அங்கிருந்து கதை வேறொரு ரூட்டில் பயணிக்கிறது. பின்னர் டிஎஸ்பி தமிழ் வருகிறார். அவரும் எதையோ கண்டுபிடிக்கப் போகிறார் என்று பார்த்தால் ஏமாற்றமே. பின்னர் பாலாஜி திடீரென ஜேம்ஸ்பாண்ட் ஆக மாறி உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார். எப்புட்றா…..என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
பின்னணி இசை சாம்சிஎஸ் என்று டைட்டிலில் வருகிறது. ஒளிப்பதிவாளர் யுவா மட்டும் இரவு நேர லைட்டிங்கில் கவனம் செலுத்தியிருக்கிறார்.
ஒரு பெரிய மெடிக்கல் காலேஜ் குற்றப் பின்னணிதான் படத்தின் மையக் கரு. அதை கிளைமாக்சில் மட்டுமே சொல்கிறார்கள். எதையோ நினைத்து வேறெதையோ எடுத்திருக்கிறார்கள்.
ரன் பேபி ரன் - 'ஸ்லோ' ரன்
ரன் பேபி ரன் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
ரன் பேபி ரன்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்