சிபிஐ 5 - தி பிரெய்ன் (மலையாளம்),CBI 5 - The Brain
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : ஸ்வர்க்கசித்ரா பிலிம்ஸ் / அப்பச்சன்
இயக்கம் : கே.மது
கதை : எஸ்.என்.சுவாமி
இசை : ஜேக்ஸ் பிஜாய்
நடிகர்கள் : மம்முட்டி, முகேஷ், ஆஷா சரத், அனூப் மேனன், ரெஞ்சி பணிக்கர், சாய்குமார், சுதேவ் நாயர், கனிகா, பிரதாப் போத்தன் மற்றும் பலர்
வெளியான தேதி : 01.05.2022
நேரம் : 2 மணி 42 நிமிடம்
ரேட்டிங் : 2.75 / 5

கடந்த 35 வருடங்களில் ஏற்கனவே இந்த சிபிஐ படத்தின் நான்கு பாகங்கள் வெளியாகியுள்ளன. அதிலும் நான்காம் பாகம் வெளியாகி கிட்டத்தட்ட 17 வருட இடைவெளி விட்டு இந்த 5ஆம் பாகம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகி உள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த ஐந்தாம் பாகம் பூர்த்தி செய்திருக்கிறதா பார்க்கலாம் .

விமானத்தில் பயணம் செய்யும்போது அமைச்சர் சுரேஷ்குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைகிறார். ஆரம்பத்தில் இதை இயற்கையான மரணம் என கூறினாலும் இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளது எனக் கூறிய பத்திரிகையாளர் ஒருவரும் அமைச்சரின் உடல்நலனை கவனித்து வந்த டாக்டர் ஒருவரும், இந்த வழக்கை விசாரித்து வந்த போலீஸ் அதிகாரி ஒருவரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுகிறது. சிபிஐ அதிகாரி மம்முட்டி (சேதுராம ஐயர்) அமைச்சருக்கு எதிரானவர்கள் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாமோ என்கிற கோணத்தில் விசாரிக்கிறார். அப்போதுதான் அமைச்சர் இறந்தது செயற்கையாக வரவழைக்கப்பட்ட ஹார்ட் அட்டாக் மூலமாக என்பதும் அதேசமயம் அது வேறொரு பேருக்காக வைக்கப்பட்ட பொறியில் அமைச்சர் எதேச்சையாக சிக்கி உயிரை விட்டதும் தெரிய வருகிறது.

அப்படியானால் அந்த விமானத்தில் பயணம் செய்த வேறு யாருக்காக குறி வைக்கப்பட்டது..? அப்படி இதை செயல்படுத்தியவர் யார்..? அதற்கான பின்னணி காரணங்கள் என்ன என்பது குறித்தெல்லாம் பல திடுக்கிடும் உண்மைகளை கண்டுபிடிக்கிறார் மம்முட்டி.. இறுதியில் குற்றவாளி அதற்காக சொல்லும் காரணம் படம் பார்க்கும் அனைவரையும் திகைக்க வைக்கிறது

35 வருடங்களுக்கு முன்பு வெளியான முதல் பாகத்தில் பார்த்த அதே சேதுராம ஐயர் கதாபாத்திரத்தில் தோற்றத்தில் பெரிதாக எந்த மாறுபாடும் இல்லாமல் அதே இளமை துடிப்புடன் ஆச்சரியப்படுத்துகிறார் மம்முட்டி. மற்ற நான்கு பாகங்களிலும் பெரும்பாலும் மம்முட்டியே அனைத்து துப்புகளையும் கண்டுபிடிப்பார்.. இந்த படத்தில் டெக்னாலஜி ரீதியாக அவருக்கு சிலர் உதவுகிறார்கள். இருந்தாலும் முக்கியமான திருப்பங்களை மம்முட்டியே கண்டுபிடிப்பது அவரது சேதுராம ஐயர் கதாபாத்திரத்திற்கு இன்னும் வலு சேர்க்கிறது .

நான்கு பாகங்களிலும் மம்முட்டியுடன் இணைந்து சிபிஐ அதிகாரிகளாக பணியாற்றிய முகேஷ் மற்றும் ஜெகதி ஸ்ரீகுமார் இருவரும் நட்புக்காக இதில் சில காட்சிகள் வந்து செல்கிறார்கள். அதிலும் ஒரு விபத்திற்கு பிறகு கடந்த சில வருடங்களாகவே ஆக்டிவாக நடிக்கும் நிலையில் இல்லாத ஜெகதி ஸ்ரீகுமாரை இந்த ஐந்தாம் பாகத்திலும் அவர் இடம் பெற வேண்டும் என்பதற்காக ஒரு பிளாஷ்பேக் காரணத்தை சித்தரித்து அவரது கதாபாத்திரத்தை லாஜிக்காக நியாயப்படுத்தி உள்ளார்கள். ஜெகதி ஸ்ரீகுமாரும் வசனம் பேசாமலேயே வரும் முக பாவங்களால் அந்த சில நிமிட காட்சிகளில் ஜமாய்த்து விடுகிறார். ஒரு நல்ல கலைஞனை எதிர்பாராத விபத்து எப்படி புரட்டிப்போட்டு விட்டது என்பதை நினைக்கும்போது வருத்தமாக தான் இருக்கிறது.

படத்தின் கதைக்கு திருப்புமுனையாக பல கதாபாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இதுநாள்வரை நகைச்சுவை நடிகராக பார்த்துவந்த சௌபின் சாஹிர் இதில் முழுக்க முழுக்க வயலன்ஸ் இல்லாத வில்லத்தனம் காட்டியுள்ளார். அதேபோல தேசிய விருது பெற்ற நடிகரான சுதேவ் நாயரும் வில்லனாக பளிச்சிடுகிறார். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றச்சொளும் போலீஸ் அதிகாரியாக வரும் அனூப் மேனனின் டுவிஸ்ட்டும் எதிர்பாராத ஒன்றுதான்.

சிபிஐ அதிகாரிகளாக ரஞ்சி பணிக்கர், ரமேஷ் பிஷரோடி, அன்சிபா ஹாசன் ஆகியோர் பாசிட்டிவ் முகம் காட்டியுள்ளனர். கொஞ்சம் நெகட்டிவ் சாயல் கொண்ட கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக வரும் ஆஷா சரத்தின் நடிப்பும் கதைக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது.. க்ளைமாக்ஸில் என்ட்ரி கொடுத்தாலும் கனிகாவின் கதாபாத்திரம் தான் இந்தகதைக்கே அடிநாதமாக மைந்துள்ளது. அதிகார தோரணையுடன் வளவளவென பேசும் போலீஸ் அதிகாரியாக சாய்குமார் தனித்து தெரிகிறார். ஓரிரு காட்சிகளில் வந்து செல்லும் இன்னும் சில நடிகர்களும் படத்தில் முக்கியத்துவத்துடன் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

கடந்த நான்கு பாகங்களை போலவே இந்தப்படத்திலும் வழக்கு எந்த திசையை நோக்கி நகர்கிறது என்பதை படம் பார்ப்பவர்கள் யூகிக்க முடியாமல் கொண்டு செல்லும் விதமாக திரைக்கதையை அமைத்து இருக்கும் கதாசிரியர் எஸ்.என். சுவாமியும், இயக்குனர் மதுவும் இந்த படத்திலும் அதை திறம்பட சாதித்துள்ளனர்.

குறிப்பாக கிளைமாக்ஸ் நெருங்குவதற்கு முன்பாக, ஆரம்பத்தில் கொல்லப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரியின் மரணத்துக்கு இரண்டு விதமான காரணங்களை இரண்டையுமே நம்பும்படியாக சொல்லி அதே சமயம் அதில் எது உண்மை என்பதை சேதுராம ஐயர் கதாபாத்திரம் உடைக்கும் இடம் நிச்சயமாக யூகிக்க முடியாதது.

குற்றவாளி யார் என்பதும் குற்றத்தை செய்ததற்காக அவர் சொல்லும் காரணமும் திடுக்கிட வைக்கும் ரகம். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் பெரிய அளவில் இல்லாததால் தற்போதைய இளைஞர்களுக்கு படம் மெதுவாக நகர்வது போன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அதேசமயம் ஏற்கனவே நான்கு பாகங்களையும் பார்த்து ரசித்து இந்த 5ம் பாகத்திற்காக காத்திருந்தவர்களுக்கு இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு திருப்தியை தந்துள்ளது என்று சொல்லலாம்.

சிபிஐ 5 - தி பிரெய்ன் - ‛‛சேதுராம ஐயர் எனும் மார்க்கண்டேயன்''

 

பட குழுவினர்

சிபிஐ 5 - தி பிரெய்ன் (மலையாளம்)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மம்மூட்டி

மலையாள திரையுலகினர் சூப்பர் ஸ்டார் என போற்றப்படுவர் மம்மூட்டி, 1951-ம் ஆண்டு செப்., 7ம் தேதி, கோட்டயம் அருகே உள்ள வைகோமில் முகமது குட்டியாக பிறந்தவர். சினிமாவுக்காக மம்மூட்டி என பெயரை மாற்றிக்கொண்டார். மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். இவருக்கு சல்பாத் என்ற மனைவியும், சுருமி, துல்கர் சல்மான் என்ற மகனும் உள்ளார். தற்போது இவரது மகனான துல்கர் சல்மானும் நடிக்க வந்துவிட்டார். இருந்தாலும் தொடர்ந்து சூப்பர் ஸ்டாராகவே வலம் வருகிறார்.

மேலும் விமர்சனம் ↓