பாப்பன் (மலையாளம்),Paappan
Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : கோகுலம் கோபாலன்
இயக்கம் : ஜோஷி
இசை : ஜேக்ஸ் பிஜாய்
நடிகர்கள் : சுரேஷ்கோபி, ஆஷா சரத், கனிகா, நீட்டா பிள்ளை, கோகுல் சுரேஷ், அஜ்மல், விஜயராகவன் மற்றும் பலர்
வெளியான தேதி : 29.07.2022
நேரம் : 2 மணி 49 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5

ஒரு சினிமா ஹீரோவின் மேனேஜர் மர்மமாக கொல்லப்பட அந்த வழக்கை இளம் ஏஎஸ்பி நீட்டா பிள்ளை விசாரிக்கிறார்.. அடுத்து வரும் நாட்களில் அவரது விசாரணை டீமில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவரும் கொல்லப்படுகிறார். கொல்லப்படும் நபர்களின் உடல்களில் வித்தியாசமான எண்கள் காணப்படுகின்றன. காவல்துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் அதிகாரி சுரேஷ்கோபியின் உதவியை நாடுகிறார் மேலதிகாரி.

விசாரணை அதிகாரி நீட்டா பிள்ளையின் அப்பா தான் சுரேஷ்கோபி. இந்த கொலைகளில் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தின் தன்மையை கொண்டு இதை செய்தவர் சாக்கோ என்கிற பழைய குற்றவாளி தான் என முடிவு செய்கின்றார் நீட்டா பிள்ளை.. ஆனால் சுரேஷ்கோபியோ நிச்சயம் சாக்கோ இதை செய்திருக்க முடியாது என மறுக்கிறார். காரணம் தனது மனைவியின் இறப்புக்கும் தனது வேலை பறிபோவதற்கும் காரணமாக அமைந்த சாக்கோவை அவன் ஜெயிலில் இருந்து விடுதலையான நாளில் இருந்தே தன்னுடைய பாதுகாப்பில் அடைத்து வைத்திருக்கிறார் சுரேஷ்கோபி.

அதேசமயம் நிஜமான கொலையாளியை சீண்டும் விதமாக சாக்கோ தான் இந்த கொலைகளை செய்தார் என மீடியா மூலம் செய்தி பரப்புகிறார் சுரேஷ்கோபி. இதனால் கோபமான உண்மை கொலையாளி மூன்றாவதாக ஒரு நபரையும் கொள்கிறான். அவன் எண்கள் மூலமாக கொடுத்த க்ளூவையும் மேலும் சில தடயங்களையும் வைத்து நிஜமான குற்றவாளியை நெருங்குகிறார் சுரேஷ்கோபி.

ஆனால் அவன் சுரேஷ்கோபியின் மகளையும் கடத்துகிறான். தொடர்ந்து மூன்று கொலைகளை செய்த அந்த கொலைகாரன் யார், அதற்கான காரணம் என்ன, சுரேஷ்கோபியின் மகளையும் கடத்த வேண்டிய அதிர்ச்சி பின்னணி என்ன என பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது கிளைமாக்ஸ்.

கொஞ்சமே கொஞ்ச நேரம் ப்ளாஷ்பேக் காட்சிகளில் மட்டும் அதிரடி போலீஸ் அதிகாரியாக பழைய சுரேஷ்கோபியை மீண்டும் பார்க்க முடிகிறது. அதேசமயம் பெரும்பாலான காட்சிகளில் நரைத்த தாடி, ஓரளவு கொட்டிப்போன முடியுடன் தற்போது இருக்கும் வழக்கமான கெட்டப்பில் நடித்திருக்கும் சுரேஷ்கோபியை நிச்சயம் பாராட்டிய தீர வேண்டும். அதே சமயம் எந்த இடத்திலும் தனது நடிப்பில் சோடை போகாமல் விறுவிறுப்பை காட்டி இருக்கிறார் சுரேஷ்கோபி.

படத்தில் சுரேஷ்கோபிக்கு மனைவியாக கொஞ்ச நேரமே வந்து பரிதாபமாக உயிரை விடும் நைலா உஷா, மற்றும் எதற்காக சுரேஷ்கோபியுடன் சேர்ந்து வாழ்கிறார் என்பதே தெரியாமல் பயணிக்கும் கதாபாத்திரமான கனிகா என இரண்டு நடிகைகள் இருந்தாலும் சுரேஷ்கோபியின் மகளாக உயர் போலீஸ் அதிகாரியாக வரும் நீட்டா பிள்ளையின் மிடுக்கும் கம்பீரமும் கலந்த நடிப்பு படத்தின் ஹைலைட்டாக அமைந்துவிட்டது. இந்த படத்திற்கு இன்னொரு பிளஸ் பாயிண்டும் அவர்தான்.

டாக்டராக வரும் ஆஷா சரத் கதாபாத்திரமும் எதிர்பாராத ட்விஸ்ட் தான். கிளைமாக்ஸ் மற்றும் ப்ளாஷ்பேக்கில் என கொஞ்ச நேரம் வந்தாலும் நடிகர் அஜ்மல் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளது அவருக்கு கிடைத்த எதிர்பாராத பரிசு தான். சுரேஷ்கோபியின் மகன் கோகுல் சுரேஷும் இந்தப்படத்தில் அவரது வளர்ப்பு மகனாகவே நடித்திருந்தாலும் பெரிதாக நம்மை கவரவில்லை.

கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படங்களின் அடிநாதமே தொடர் கொலைகள் நடக்கிறது என்றால் அதற்கு பின்னணியில் இருக்கும் வலுவான காரணம் மற்றும் அதை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரி அந்த வழக்கை மிகவும் சிரமப்பட்டு கண்டுபிடிக்கும் விதமாக பின்ணனியில் அமைக்கப்படும் ட்விஸ்ட் மற்றும் சஸ்பென்ஸ் ஆகியவைதான் இவை மூன்றுமே இந்த படத்தில் சரிவிகிதமாக கலக்கப்பட்டுள்ளதால் மிக எளிதாக வெற்றிப்படம் என்கிற இலக்கையும் தொட்டு விடுகிறது..

ஆக்சன் படங்களில் பிதாமகர் என அழைக்கப்படும் மலையாள இயக்குனர் ஜோஷி கடந்த சில வருடங்களாக தோல்வி படங்களால் சரிவை சந்தித்தவர், இந்த படத்தில் மீண்டும் நிமிர்ந்து நின்று பார்முக்கு திரும்பியுள்ளார். ஜோஷி-சுரேஷ்கோபி படம் என எதிர்பார்த்து வந்த ரசிகர்களை ஏமாற்றாமல் அனுப்பி வைக்கின்றனர் இந்த இருவரும்.

பாப்பன் ; பலவான்

 

பட குழுவினர்

பாப்பன் (மலையாளம்)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓