
பயணிகள் கவனிக்கவும்
விமர்சனம்
தயாரிப்பு - ஆல் இன் பிக்சர்ஸ்
இயக்கம் - சக்திவேல்
இசை - ஷமந்த் நாக்
நடிப்பு - விதார்த், கருணாகரன், லட்சுமிப்ரியா, மசூம் சங்கர்
வெளியான தேதி - 29 ஏப்ரல் 2022 (ஓடிடி)
நேரம் - 1 மணிநேரம் 55 நிமிடம்
ரேட்டிங் - 3/5
மலையாளத்தில் 2019ம் ஆண்டில் வெளிவந்த 'விக்ரிதி' என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்தப் படம். இன்றைய சமூக வலைத்தள யுகத்தில் எதையும் தீர விசாரிக்காமல் கண்ணால் பார்ப்பதை வைத்து எதை எதையோ பதிவிடும் ஆர்வக் கோளாறுகளால் அப்பாவி மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதைச் சொன்ன படம்.
இந்தியத் திரையுலகத்தில் அதிகமான யதார்த்தக் கதைகளைக் கொடுப்பது மலையாளத் திரையுலகம்தான். அங்கு வெளியாகும் சில படங்களைப் பார்க்கும் போது எப்படியெல்லாம் இப்படி யோசிக்கிறார்கள் என்று கேட்கத் தோன்றும். அந்த விதத்தில் அமைந்த படம்தான் 'விக்ரிதி'. மலையாளப் படத்தின் உணர்வு சிறிதும் மாறாமல் அப்படியே தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குனர் சக்திவேல்.
நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இப்படிப்பட்ட படங்கள் வந்தால் எந்தத் திரையுலகமும் செழிப்பாக இருக்கும்.
விதார்த், லட்சுமிப்பிரியா சந்திரமவுலி தம்பதியினர் மாற்றுத் திறனாளிகள். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். அப்போது சில நாட்கள் தூக்கமில்லாமல் இருக்கும் விதார்த்த சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது சீட்டிலேயே படுத்து உறங்குகிறார். அதைப் படமெடுத்து விதார்த்தை குடிகாரனாக சித்தரித்து, சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார் ஆர்வக் கோளாறு இளைஞர் கருணாகரன். அதனால், விதார்த்திற்கு ஏற்படும் பிரச்சினைகள்தான் படத்தின் கதை.
வாட்சப், பேஸ்புக், டுவிட்டர் என பல சமூக வலைத்தளங்களில் நமக்குக் கிடைக்கும் மீம்ஸ்கள், தகவல்கள் என எதையும் சரி பார்க்காமல் அப்படியே பார்வேர்டு செய்யும் பார்ட்டிகளுக்கு இந்தப் படம் ஒரு பாடம். இந்தப் படத்தைப் பார்த்து அனாவசியமாக எதையும் பார்வேர்டு செய்ய ஒருவராவது தயங்கினாலே அது படத்திற்குக் கிடைத்த வெற்றி.
வாய் பேச முடியாத, காது கேட்காத பொறுப்பான கணவர், அப்பாவாக விதார்த். இந்தக் கதாபாத்திரத்திற்காக நிறைய ரெபரென்ஸ்களைப் பார்த்திருக்கிறார் போலும். படம் முழுவதிலும் நமக்கு விதார்த் தெரிவதை விட அந்த அப்பாவி அப்பா, கணவன் தான் கண்ணுக்குத் தெரிகிறார். பல காட்சிகளில் கண் கலங்க வைக்கிறார் விதார்த்.
விதார்த்தின் மனைவியாக லட்சுமிப்ரியா. தமிழ் சினிமாவில் இயல்பாக நடிக்கும் இவரைப் போன்ற குணச்சித்திர நடிகைகளைப் பார்ப்பது அரிதாகி வருகிறது. கணவனையும், குழந்தைகளையும் தாங்கிப் பிடிக்கும் இவரைப் போன்ற குடும்பத் தலைவி கிடைத்துவிட்டால் எந்தக் குடும்பமும் நிமிர்ந்துவிடும்.
சோஷியல் மீடியா லைக்குகளுக்கு ஆசைப்படும் ஆர்வக் கோளாறு இளைஞராக கருணாகரன். இவரைப் போன்ற சில இளைஞர்களால்தான் இந்த சமூகத்தில் தேவையற்ற சர்ச்சைகளும், பிரச்சினைகளும் உருவாகிறது. தங்களால் சமூகத்தில் ஏதோ மாற்றம் வந்துவிடும் என நினைக்கும் கரையான்கள் இவர்கள். இப்படியான மனிதர்களை நிஜ வாழ்க்கையிலும் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தோன்றும்.
கருணாகரனின் காதலியாக மசூம் சங்கர். அதிக முக்கியத்துவம் இல்லை என்றாலும் அழகான, அப்பாவியான காதலியாக இயல்பாய் நடித்திருக்கிறார்.
படத்தின் இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு அனைத்துமே எவ்வளவு தேவையோ அவ்வளவிற்கு இயக்குனருக்கு பக்க பலமாய் அமைந்துள்ளது.
பிரம்மாண்ட படங்களுக்கு மத்தியில், சோஷியல் மீடியா ஆர்வலர்களுக்கு பாடமாக ஒரு படம்.
பயணிகள் கவனிக்கவும் - ரசிகர்கள் கவனிக்கவும்
பயணிகள் கவனிக்கவும் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
பயணிகள் கவனிக்கவும்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்