பிரம்மம் (மலையாளம்),Bhramam

பிரம்மம் (மலையாளம்) - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : வயாகாம் 18 ஸ்டுடியோஸ் & ஏபி இன்டர்நேஷனல்
நடிகர்கள் : பிரித்விராஜ், மம்தா மோகன்தாஸ், ராஷி கண்ணா, அனன்யா, உன்னி முகுந்தன், ஜெகதீஷ், சங்கர் பணிக்கர், லீலா சாம்சன், மற்றும் பலர்
இயக்கம் : ரவி கே.சந்திரன்
இசை : ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு : ரவி கே.சந்திரன்
வெளியான தேதி : 07.10.21
நேரம் : 2 மணி 32 நிமிடங்கள்
ரேட்டிங் : 3 / 5

இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்தாதுன் படத்தின் ரீமேக் தான் இந்த பிரம்மம். ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கியுள்ள இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது

பியானோ கலைஞரான பிரித்விராஜ் வெளிநாட்டு சென்று செட்டிலாக விரும்புகிறார். அதற்காக பார்வையற்றவராக நடிக்கிறார். ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் ராஷி கண்ணாவுடன் பிரித்விராஜூக்கு காதல் ஏற்படுகிறது. அவர் மூலமாக முன்னாள் கதாநாயகன் சங்கருடன் அறிமுகம் ஏற்படுகிறது. தனது மனைவி மம்தா மோகன்தாஸுக்கு தங்களது திருமண நாளில் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கும் விதமாக, பிரித்விராஜை தங்களது பிளாட்டிற்கு வந்து பியானோ வாசிக்க ஒப்பந்தம் செய்கிறார். அதன்படி அவர் வீட்டுக்கு செல்லும் பிரித்விராஜ் அங்கே தன்னை அழைத்த சங்கர் பிணமாக கிடப்பதையும் அவரது மனைவி மம்தா, தன்னை பார்வையற்றவன் என நினைத்து, இதை எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன்னை இசைக்க சொல்லி கேட்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

மேலும் மம்தாவின் கள்ளக்காதலன் உன்னி முகுந்தனும் அதே வீட்டில் ஒளிந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாலும், தான் பார்வையற்றவன் என்பது போலவே நடித்து அங்கிருந்து சாமர்த்தியமாக வெளியேறுகிறார் பிரித்விராஜ். தான் கண்டதை போலீசிடம் சொல்லிவிடலாம் என போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் பிரித்விராஜுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி.. ஆம் மம்தாவின் காதலனே அங்கு இன்ஸ்பெக்டராக இருக்கிறார். பார்வையற்றவன் என தாங்கள் நினைத்த பிரித்விராஜ், போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வந்திருப்பதை கண்டதும் உன்னி முகுந்தனுக்கு அவர் மீதான சந்தேகம் வலுக்கிறது. இருந்தாலும் பிரித்விராஜ் ஏதோ வேறு விஷயத்தை சொல்லி மழுப்பி, தான் சொல்ல வந்ததை மறைத்து விடுகிறார்.

இந்த நிலையில் தன் மீது சந்தேகப்படும் பக்கத்துவீட்டு பாட்டியையும் மம்தா சாமர்த்தியமாக கொலை செய்ய, அதுவும் அங்கே வரும் பிரித்திவிராஜ் கண்களில் பட்டு விடுகிறது. என்னதான் பார்வையற்றவர் என்றாலும் பின்னாளில் தங்களுக்கு பிரச்சனை என நினைக்கும் மம்தா மோகன்தாஸ், பிரித்விராஜன் வீட்டுக்கே தேடி வந்து, அவருக்கு ஸ்வீட்டில் மருந்து கலந்து கொடுத்து அவரது பார்வையை பறித்து நிஜமாகவே அவரை பார்வையற்றவர் ஆக்கி விடுகிறார்.

அதுமட்டுமல்ல, அந்த சமயத்தில் அங்கே பிரித்விராஜை தேடிவரும் ராஷி கண்ணாவுக்கு, தனக்கும் பிரித்விராஜூக்கும் ஏற்கனவே தொடர்பு இருப்பது போல சித்தரித்து அவர்களது காதலையும் முறித்து விடுகிறார். இதன்பிறகு இழந்த பார்வையையும் இழந்த காதலையும் பிரித்விராஜால் திரும்ப பெற முடிந்ததா, மம்தா மோகன்தாஸையும் அவரது காதலன் உன்னி முகுந்தனையும் பிரித்விராஜால் ஏதாவது செய்ய முடிந்ததா என்பது மீதிக்கதை

மலையாள திரையுலகில் நீண்ட காலத்திற்கு பிறகு ரீமேக் செய்யப்படும் கதை, அதுவும் தான் நடிக்க விரும்பிய கதாபாத்திரம் என எல்லாமே தன்னை தேடி வந்ததால், அந்த பார்வையற்றவன் கதாபாத்திரத்திற்கு பிரித்விராஜ் தனது நடிப்பால் இன்னும் மெருகூட்டி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.. அவருக்கு பார்வை தெரியும் என கொஞ்ச நேரத்திலேயே நமக்கும் தெரிந்து விடுவதால், அவரது பார்வையற்றவராக அவரது நடிப்பில் செயற்கைத்தனம் இருப்பதாக தோன்றினாலும் கூட, அவரும் நடிக்கிறார் தானே என எளிதாக நம்மை சமாதானப்படுத்திக் கொள்ள முடிகிறது

பொருந்தாத கணவனுடன் வாழ முடியவில்லை என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் இரண்டாவது மனைவி கதாபாத்திரத்தில் மம்தா மோகன்தாஸ்.. வில்லத்தனம் கலந்த அந்த கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு நமக்கு ரொம்பவே புதுசு.. குறிப்பாக பிரித்விராஜின் இடத்திற்கே வந்து அவரை மிரட்டி பணிய வைக்கும் இடம் நிச்சயம் நாம் எதிர்பாராத ஒன்று.

காதலன் பார்வை தெரியாதவர் என்றாலும் அவரது இசையால் மனதைப் பறிகொடுக்கும் காதலியாக ராஷி கண்ணா. ரொமான்ஸ் கோபம் என கலந்து கட்டி அடித்துள்ளார். கள்ளக்காதலனாக நடிக்க வேண்டுமா, அதிலும் அவர் போலீஸ் அதிகாரியாக இருக்க வேண்டுமா, கூப்பிடுங்கள் உன்னி முகுந்தனை என சொல்லும் அளவிற்கு அடுத்தடுத்து இதேபோன்ற கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார் உன்னி முகுந்தன். ஆனால் அதற்கு பொருத்தமான ஆளாகவும் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். உன்னி முகுந்தனின் கண்டிப்பான மனைவியாக நீண்ட நாளைக்கு பிறகு அனன்யாவை பார்க்க முடிவதில் ஆச்சர்யம், இன்னொரு மைனா சூசனாக மிரட்டுகிறார்.

பல வருடங்களுக்கு முன் தமிழில் வெளியான ஒரு தலை ராகம் படத்தில் நடித்த சங்கர், இந்தப்படத்தில் ரிட்டயர்டு ஆன நடிகர் கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார். இடைவேளைக்கு பின்னர் என்ட்ரி கொடுக்கும் ஜெகதீஷின் கிட்னி டாக்டர் கதாபாத்திரம் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறது. கூடவே லாட்டரி விற்கும் பெண்மணியும், ஆட்டோ டிரைவரும் சேர்ந்து இன்னும் கலகலப்பூட்டவே செய்கிறார்கள். இவர்கள் மூவரால் பிரித்விராஜ் படும் அவஸ்தையும் நகைச்சுவை பட்டியலிலேயே இடம் பிடிக்கிறது. மம்தாவின் மீது சந்தேகப்பட போய், பரிதாபமான முடிவுக்கு ஆளாகும் பக்கத்து வீட்டு பாட்டியாக லீலா சாம்சன் சரியான தேர்வு.

இயக்குனராக மாறினாலும் ஒளிப்பதிவிலும் எந்த குறையும் வைக்காமல் தானே பார்த்து பார்த்து காட்சிகளை செதுக்கியுள்ளார் ரவி கே.சந்திரன் இசையுடன் கலந்த கிரைம் கதை என்பதால் இரண்டையும் அழகாக மிக்ஸ் செய்து காட்சிகளுக்கு கணம் கூட்டியுள்ளார் இசை அமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய்

பார்வையற்ற ஒருவன் தான் பார்த்த கொலைகளுக்கு எப்படி சாட்சியாக முடியும் என்பதை மையப்படுத்தி தான் கதையை உருவாக்கியுள்ளார்கள் அதேசமயம் பிரித்விராஜ் ஏதோ ஒரு காரணத்திற்காக பார்வையற்றவராக நடிக்கிறார் என்று சொல்லிவிட்டு, அவரே ஒரு கொலையை பார்த்ததாக துணிந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளிக்க செல்கிறார் என்னும்போது அவரது குட்டும் அங்கே உடைந்து விடாதா ? இதுபோன்ற ஒரு சில இடங்களில் லாஜிக் இடித்தாலும் அதையெல்லாம் விறுவிறுப்பான திரைக்கதை பின்னுக்கு தள்ளி விடுகிறது. அந்தவகையில் சிரிக்க சிரிக்க ஒரு க்ரைம் ட்ராமாவை பார்க்கும் உணர்வே நமக்கு ஏற்படுகிறது.

பிரம்மம் ; விடை சொல்லா சூத்திரம்.

 

பட குழுவினர்

பிரம்மம் (மலையாளம்)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

பிருத்விராஜ்

மலையாளத்தில் முன்னணி நடிகராக திகழும் பிருத்விராஜ், பின்னணி பாடகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். 2002ம் ஆண்டு வெளியான நந்தனம் படத்தில் தான் பிருத்விராஜ், டைரக்டர் ரஞ்சித்தால் அறிமுகப்படுத்தப்பட்டார். இருப்பினும், அதற்கு பின் அவர் நடித்த நட்த்திர கண்ணுல ராஜகுமாரன் அவனுந்தோரு ராஜகுமாரி படம் தான் முதலில் வெளியானது. தமிழில், கனா கண்டேன் படத்தின் மூலம் அறிமுகமான பிருத்விராஜ் தொடர்ந்து, பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளிதிரை, நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருதை இரண்டு முறை பெற்றுள்ள பிருத்விராஜ், 2011ம் ஆண்டு இந்தியன் ருபி படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். இது தவிர பல டிவி மற்றும் பத்திரிக்கை விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

மேலும் விமர்சனம் ↓