அனபெல் சேதுபதி,Annabelle sethupathi

அனபெல் சேதுபதி - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - பேஷன் ஸ்டுடியோஸ்
இயக்கம் - தீபக் சுந்தர்ராஜன்
இசை - கிருஷ்ண கிஷோர்
நடிப்பு - விஜய் சேதுபதி, டாப்ஸி, ஜெகபதி பாபு, யோகி பாபு
வெளியான தேதி - 17 செப்டம்பர் 2021 (ஓடிடி)
நேரம் - 2 மணி நேரம் 14 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

ஒரு பேய்ப் படம் என்றால் பயமுறுத்த வேண்டும், ஒரு நகைச்சுவைப் படம் என்றால் சிரிக்க வைக்க வேண்டும். ஆனால், இந்தப் படத்தில் பேய் இருக்கிறது, ஆனால் பயமுறுத்தவில்லை, நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள் ஆனால், சிரிக்க வைக்கவில்லை.

நன்றாக நடிக்கத் தெரிந்த விஜய் சேதுபதி, டாப்ஸீ, ஜெகபதிபாபு, ராதிகா, ராஜேந்திர பிரசாத், யோகி பாபு, தேவதர்ஷினி, மதுமிதா உள்ளிட்ட ஒரு நட்சத்திரக் கூட்டம், அருமையான ஒரு அரண்மனை என களமும், நடிகர்களும் இருந்தும் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டார் அறிமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் (இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன்).

ஆனால், பிளாஷ்பேக்கில் விஜய் சேதுபதி, டாப்ஸீ இடையிலான காதலை அழகாகக் காட்டி ரசிக்க வைத்திருக்கிறார். அவருக்குக் காமெடி, சென்டிமென்ட்டை விட காதல் நன்றாக வருகிறது. அதனால், அடுத்த படத்தில் முழு காதல் படத்தைக் கொடுத்து ரசிகர்களைக் கவரட்டும் என வாழ்த்துவோம்.

சுதந்திர காலத்திற்கு முந்தைய ராஜாவான விஜய் சேதுபதி, லண்டனிலிருந்து வந்த வெள்ளைக்காரப் பெண்ணான டாப்ஸீயைப் பார்த்ததுமே காதல் கொள்கிறார். டாப்ஸீயும் அவர் மீது காதலில் விழுகிறார். தனது காதலிக்காக பிரம்மாண்டமான மாளிகை ஒன்றைக் கட்டுகிறார் விஜய். திருமணத்திற்குப் பின்பு அதில் குடியேறுகிறார்கள் தம்பதியினர். அந்த மாளிகையைப் பார்த்து பொறாமைப்படும் ஜமீன்தார் ஜெகபதிபாபு அந்த மாளிகையை அடைய நினைக்கிறார். விஜய் சேதுபதியிடம் கேட்டும் அதைத் தர மறுக்கிறார். டாப்ஸீ கர்ப்பமடைந்த நிலையில் அவருக்கும் கணவர் விஜய் சேதுபதிக்கும் விஷம் வைத்துக் கொன்று அந்த மாளிகையை அடைகிறார். தனது ராஜா விஜய் சேதுபதி மரணத்திற்குப் பழி வாங்கத் துடித்த அவரது உதவியாளர் யோகி பாபு சாப்பாட்டில் விஷம் வைத்து ஜெகபதிபாபு குடும்பத்தினரைக் கொலை செய்துவிடுகிறார்.

2021ல் விஜய் சேதுபதி, டாப்ஸீ தவிர அனைவரும் அந்த அரண்மனையில் பேயாக அலைகிறார்கள். திருடுவதைத் தொழிலாகக் கொண்ட, ராஜேந்திர பிரசாத், அவரது மனைவி ராதிகா, மகள் டாப்ஸீ, மகன் சுனில் ஆகியோர் அந்த அரண்மனையில் எஞ்சியிருக்கும் ஜெகபதி பாபுவின் வாரிசு ஒருவரால் தங்க வைக்கப்படுகிறார்கள். பேய்களுக்குத் தலைவனாக செயல்படும் யோகி பாபு, அரண்மனைக்குள் வந்த டாப்ஸீயால்தான் தங்களுக்கு விடிவு காலம் கிடைக்கும் என நினைக்கிறார். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இடைவேளை வரை படத்தின் நாயகன் யோகி பாபு தான். இப்போதைய டிரெண்டில் இருக்கும் யோகி பாபுக்குப் பொருத்தமாக பல நகைச்சுவைக் காட்சிகளை, வசனங்களைச் சேர்த்து முதல் பாதியை இன்னும் கலகலப்பாகக் கொண்டு போயிருக்கலாம் இயக்குனர். சிறு குழந்தைகள் ரசிக்கும் அளவிலான காமெடிகளை மட்டுமே யோசித்திருக்கிறார்.

டாப்ஸீ, ராதிகா இருவரும் கூட முதல் பாதியில் என்னென்னமோ செய்கிறார்கள் ஆனால், சிரிப்புதான் வரவில்லை. ராஜேந்திர பிரசாத், சேத்தன், தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு, மதுமிதா, ஜார்ஜ் மரியான், சுரேகா வாணி, சுனில் என பல கதாபாத்திரங்கள் கூடவே இருக்கிறார்கள். 11 வீரர்கள் இருந்தும் ரன்னும் எடுக்காமல், விக்கெட்டும் எடுக்காமல் பரிதாபமாகத் தோற்ற கிரிக்கெட் அணி போலவே இருக்கிறார்கள். ஜெகபதி பாபு தான் ஒரே வில்லன். பொறாமையின் உச்சத்தை தன் நடிப்பில் காட்டியிருக்கிறார்.

இடைவேளைக்குப் பின் விஜய் சேதுபதி, டாப்ஸீ இடையிலான பிளாஷ்பேக் காட்சிகள் மட்டும் நிறைவாக அமைந்துள்ளன. தமிழிலேயே பேசும் விஜய், ஆங்கிலத்திலேயே பேசும் டாப்ஸீ. இருவருக்குமே மற்றவர் பேசுவது புரிந்து, காதல் பார்வைகளை வீசிக் கொள்வது தனி ரகம். கூடவே, அடிக்கடி சிரிக்க வைக்கிறார் யோகி பாபு. இவர்களது காதலில் இந்த அளவிற்கு கவனம் செலுத்திய இயக்குனர் காமெடியிலும் கவனம் செலுத்தியிருந்தால் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி போல படம் சுவாரசியமாகப் போயிருக்கும்.

வீர சேதுபதியாக விஜய் சேதுபதியும், அனபெல் ஆக டாப்ஸீயும் அவ்வளவு ரசித்து நடித்திருக்கிறார்கள். கெமிஸ்ட்ரி, பயாலஜி அனைத்துமே சரியாக வேலை செய்திருக்கிறது.

இசையமைப்பாளர் கிருஷ்ணா கிஷோர் பாடல்களில் இன்னும் அதிக கவனம் செலுத்தி இரண்டு சூப்பர் ஹிட்களையாவது கொடுத்திருந்தால் படத்திற்கு பேருதவியாக இருந்திருக்கும். பின்னணி இசையில் சமாளித்துள்ளார். கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு அரண்மனையை பலவிதமான கோணங்களில் அழகழகாய் எடுத்துத் தள்ளியிருக்கிறது. அனபெல் டாப்ஸீயை அழகாகக் காட்டுவதில் தனி கவனம் செலுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

அழகான அரண்மனையும், பிளாஷ்பேக் விஜய் சேதுபதி, டாப்ஸீ, யோகிபாபு ஆகியோருக்காக கொஞ்சம் ரசிக்கலாம். அந்த ரசனையை மற்ற காட்சிகளிலும் இயக்குனர் காட்டியிருந்தால் முழுவதுமாக ரசித்திருக்கலாம்.

அனபெல் சேதுபதி - காதலுக்காக...

 

அனபெல் சேதுபதி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

அனபெல் சேதுபதி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓