பேபி, தோனி ஆகிய படங்களை எழுதி, இயக்கிய நீரஜ் பாண்டே தயாரிப்பில் அவர் எழுதிய கதையை ஷிவம் நாயர் இயக்க., நம்ம டாப்ஸி (பன்னு)கதையின் நாயகியாக ஆக்ஷ்ன் ராணியாக முழு நீள ஹீரோயின் ஒரியன்டட் சப்ஜெக்ட்டில் நடிக்க, உடன் அக்ஷ்ய் குமார், மனோஜ் பாஜ்பாய் அனுபம் கேர், பிருத்விராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, இந்தியில் "நாம் ஷபானா" எனும் பெயரிலும் தமிழில் "நான் தான் ஷபானா" எனும் பெயரில் ஒரே நாளில், "பிரைடே பிலிம் ஒர்க்ஸ்", "கேப் ஆப் குட் பிலிம்ஸ்", "ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட்" ஆகிய நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் மிகவும் பிரமாண்டமாக நேர்த்தியாக வந்திருக்கிறது இத்திரைப்படம்!
கதையின் நாயகி ஷபானா கான் - டாப்ஸி பன்னு, அம்மாவை கொடுமை பண்ணும் குடிகார தந்தையை கொன்று சிறுவர் சீர்திருத்தப் பள்ளி சிறையில் இரண்டு ஆண்டுகளை கழித்து விட்டு திரும்புகிறார். அவரது கல்லூரி நாட்களில் உடன் படிக்கும் மாணவனுடன் காதல் அரும்புகிறது. ஆனால், அந்த காதல் அரும்பிய அன்று இரவே, டாப்ஸியின் காதலன் அவர் கண் எதிரிலேயே நள்ளிரவு ரோட் சைட் ரோமியோக்களால் கொல்லப்பட, வேதனையில் மூழ்கும் டாப்ஸி, தன் காதலனை கொன்றவர்களை தானே கொல்ல உதவும் இந்திய அரசின் உளவுப் பிரிவு அமைப்புக்கு உதவப் போய் தானே உளவாளி ஆகி, அக்ஷ்ய் குமார், மனோஜ் பாஜ்பாய், அனுபம் கெர், டானி டென்சோங்கப்பா... ஆகியோர் உதவியுடன் செயற்கரிய காரியங்கள் பல செய்து இந்திய அரசுக்கு வெளிநாட்டில் இருந்தபடியே போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட இன்னும் பல சட்ட விரோத செயல்களில் நீங்கா, தலைவலியாக விளங்கி வரும் பிருத்விராஜ்ஜை எவ்வாறு போட்டு தள்ளி இந்திய நாட்டுக்கு எப்படி பெருமை சேர்க்கிறார் என்பது தான் "நாம் ஷபானா" படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல்.... எல்லாம்.
ஷபானா கானாக டாப்ஸி பன்னு குங்பூ மாதிரியானதொரு குத்துசண்டை வீராங்கனையாக மிகவும் திடமான, மனோ தைரியம் கொண்ட பெண்ணாக சீன் பை சீன் தன்னை செதுக்கிக் கொண்டு நடிப்பின் உயரம் தொட்டு, ரசிகனை சீட்டோடு கட்டி போட்டுவிடுகிறார். அதிலும், சிறுவயதில் தன் தாய்க்கு தினமும் கொடூரம் செய்த தந்தையை தானே மண்டையில் அடித்து கொன்று சீர்திருத்த பள்ளி சிறைசென்ற கதையை சொல்லும் காட்சி உருக்கமோ உருக்கம்.
அதே மாதிரி, தன் காதலன் கொலை கேஸை கண்டுபிடிக்காது கிடப்பில் போட்டிருக்கும் இன்ஸ்பெக்டரிடம், "சார், கொலை நடந்து 3 மாசம் ஆச்சு சார், கொஞ்சமாவது வேலை பாருங்க சார் இல்லன்னா வேலைன்னா என்னன்னு தெரியாது போயிடும்..." என்று வீம்பு பண்ணும் இடத்தில் தொடங்கி தானே உளவு அதிகாரியாக மாறுவது வரை சகலத்திலும் சபாஷ் சொல்ல வைக்கிறார் டாப்ஸி பொண்ணு... சாரி, பன்னு!
அக்ஷய் குமார் கொஞ்ச கொஞ்ச நேரமே வந்தாலும் டாப்ஸி பன்னுக்கு, பொண்ணுக்கு... உதவும் மிடுக்கான ஆபிஸராக அசத்தியிருக்கிறார்.
அக்ஷய் குமார் மாதிரியே உளவு அதிகாரியாக வரும் மனோஜ் பாஜ்பாய், மலேசியாவில் பிருத்விராஜைக் கொல்ல, டாப்ஸி, அக்ஷய் இருவருக்கும் உதவ வரும் அதிகாரி அனுபம் கெர், டாப்ஸியை பக்காவாக உளவாளியாக வரும் டானி டென்சோங்கப்பா உள்ளிட்டோரும் உளவு அதிகாரிகளாக மிரட்டல் .
பிருத்விராஜ், அடிக்கடி முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு இந்தியாவிற்கு தொல்லைக்கொடுக்கும் இன்டர்நேஷனல் வில்லனாக செம கம்பீரம், கச்சிதம்.
"வாழ்க்கையில் லட்சியம் தெரிந்தவர்தான் ரொம்ப அதிர்ஷ்டசாலி...", "நீ எனக்கு அம்மா மட்டுமல்ல பெஸ்ட் பிரண்ட்ங்கறது அவனுக்குத் தெரியாது...", "அம்மா எப்பல்லாம் உனக்கு கேள்வி கேட்கணும்னு தோணுதோ அப்பல்லாம் கேள்வி கேட்கறது நிறுத்திடும்மா... உன்கிட்டே தான நான், உண்மைய சொல்றேன் உன் பொண்ணு, ஏது செய்தலும் நல்லது தான் செய்வேன்....." என்பது உள்ளிட்ட எஸ்.பி.சக்ரபாணியின் தமிழ் படுத்தலுக்கான வசன - "பன்ச்"கள், ஒரு இடத்திலும் "பச்" இல்லை நச் - டச்- பளிச், பளிச்."
சுதீர் பல்சானேவின் ஒளிப்பதிவு ஆஸ்த்ரியா, இந்தியா, மலேசியா என படத்தில் இடம்பெறும் அனைத்து ஏரியாக்களிலும் அசத்தியிருக்கிறது. செம அழகாகவும் இருக்கிறது. காட்சிகளின் பரபரபபுக்கு கொஞ்சமும் பங்கமின்றி அப்படியே கண்முன் விரிக்கிறது.
ரோச் சக்கோல்கீ - மீட் ப்ரோஸின் இசையில், "சுகுசுகு சுப்பி.... உள்ளமே..", "கமான் கமான் இந்த உலகத்தை அறிந்து, மஜா மஜா செஞ்சிக்கோ..." எனத் தொடங்கித் தொடரும் பாடல்கள் பலே, பலே... என்றால், அமைதியான அதே நேரம் காதுகளை புண்ணாக்காத மிரட்டலான கதைக்கேற்ற மிரட்டலான பின்னணி இசை என்றால் மிகையல்ல. இவர்களிடம் இது மாதிரி ரீ-ரெக்கார்டிங்கை நம்மவர்கள் தெரிந்து கொள்வது நலம்.
நீரஜ் பாண்டேவின் கதையை அவர் பேபி, தோனி படங்களை இயக்கியதைப் போன்றே ஜீவனுடன் இயக்கி இருக்கிறார் ஷிவம் நாயர். ஆரம்ப காட்சியில் இருந்து இறுதிவரை அடுத்து என்ன.? அடுத்து என்ன... என்ன..? என எதிர்பார்ப்பை கூட்டும் இவரது இயக்கம் இப்படத்திற்கு பெரும்பலம். நம் நாட்டுப்பற்று இது போன்ற படங்களை பார்க்கும் போது கூடிடும் என்பதும் நிதர்சனம். அதற்காக இயக்குனருக்கு அடிக்கலாம் ஒரு ராயல் சல்யூட்!
ஆக மொத்தத்தில், "நாம் ஷபானா (நான் தான் ஷபானா) - சபாஷ்னா - சல்யூட்னா!"