தாராள பிரபு,Dharala Prabhu

தாராள பிரபு - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஹரிஷ் கல்யாண், தன்யா ஹோப், விவேக்
தயாரிப்பு - ஸ்க்ரீன் சீன் மீடியா
இயக்கம் - கிருஷ்ணா மாரிமுத்து
இசை - அனிருத் ரவிச்சந்தர், பரத் சங்கர், இன்னோ கெங்கா, கபேர் வாசுகி, மேட்லி ப்ளூஸ், ஊருகா - தி பேன்ட், ஷான் ரோல்டன், விவேக் மெர்வின்
வெளியான தேதி - 13 மார்ச் 2020
நேரம் - 2 மணிநேரம் 32 நிமிடம்
ரேட்டிங் - 3/5

2012ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற விக்கி டோனர் என்ற படத்தை 8 ஆண்டுகள் கழித்து தமிழில் ரீமேக் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு கலாச்சாரத்திற்கும், ரசிகர்களுக்கும் ஏற்ற கதை இல்லை என்று சொன்னால் கூட ஒரு கலகலப்பான சுவாரசியமான ரீமேக்கைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து.

தமிழ்நாட்டில் வாடகைத் தாய் வளர்ந்த அளவிற்கு விந்து தானம் வளர்ந்ததா என்று தெரியவில்லை. இன்னும் சிலருக்கு இது பற்றிய விவரம் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. இந்தப் படத்தைப் பார்த்த பிறகு பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பலர் அப்படியான தானத்திற்கு சம்மதித்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

என் பையனை இஞ்சினியரிங் படிக்க வச்சதுக்குப் பதிலா, இப்படி செய்ய வச்சிருப்பேனே என காவல்துறை ஆய்வாளர் பேசும் வசனம் ஒன்றே அதற்கு சாட்சி. தடுக்கி விழுந்தால் இரட்டை அர்த்த வசனங்கள் நிறையவே வரக் கூடிய வாய்ப்பு. ஆனால், அதை முடிந்தவரை தவிர்த்திருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து. இருப்பினும் விவேக் பேசும் சில வசனங்கள் லேசான ஆபாச நெடியுடன் இருக்கிறது.

கால்பந்து விளையாட்டு வீரரான ஹரிஷ் கல்யாண், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ஒரு நல்ல வேலைக்குச் செல்லும் முயற்சியில் இருக்கிறார். அம்மா, பாட்டி ஆகியோர் நடத்தும் பாரம்பரியம் என்ற அழகுநிலையத்திலும் உதவியாக இருக்கிறார். அவருக்கு தன்யா ஹோப் மீது காதல். இதனிடையே, கருத்தரிப்பு மையம் நடத்தும் டாக்டர் விவேக், விந்து தானம் செய்ய நல்ல ஆரோக்கியமான, திடகாத்திரமான, கெட்ட பழக்கங்கள் இல்லாத ஒரு இளைஞரைத் தேடி வருகிறார். அவரது வலையில் கஷ்டப்பட்டு ஹரிஷ் கல்யாணை சிக்க வைக்கிறார். விந்து தானம் செய்வதை வீட்டுக்கும், காதலிக்கும் தெரியாமல் மறைத்து நிறைய பணம் சம்பாதிக்கிறார். ஹரிஷுக்கும், தன்யாவுக்கும் திருமணம் நடக்கிறது. ஆனால், தன்யாவுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலையில் அவருடைய கர்ப்பப்பை இல்லை. ஒரு சந்தர்ப்பத்தில் ஹரிஷின் விந்து தானம் பற்றி அனைவருக்கும் தெரிய வருகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

நகைச்சுவை கலந்து நாயகன் கதாபாத்திரம். பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஹரிஷ் கல்யாண். கால்பந்து வீரராக ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலைக்குச் செல்ல நினைப்பவருக்கு ஸ்பெர்ம் டொனேஷன் மூலமே லட்சம் லட்சமாக பணம் வருகிறது. காதலியைத் திருமணம் செய்து கொண்ட பின் தானம் செய்வதை விட்டுவிடுகிறார். பலருடைய வாழ்வில் குழந்தை ஆசையைத் தீர்த்தவருக்கு, தன் வாழ்க்கையிலேயே பிரச்சினை வர கவலை கொள்கிறார். ஒரு பக்கம் மனைவி, மறுபக்கம் அம்மா, இன்னொரு பக்கம் டாக்டர் என சிக்கித் தவிக்கும் ஒரு கதாபாத்திரம். நடிப்பைப் பொறுத்தவரையில் ஹரிஷ், சபாஷ் சொல்ல வைக்கிறார்.

தன்யா ஹோப், பார்ப்பதற்கு ஹரிஷின் அக்கா மாதிரி தெரிகிறார். அவருக்கான மேக்கப்பும் சரியில்லை. குளோசப் காட்சிகளில் நாயகிகளை அழகாகக் காட்டுவார்கள். ஆனால், இப்படத்தின் ஒளிப்பதிவாளருக்கும் தன்யாவுக்கும் ஏதோ சண்டை போலிருக்கிறது. ஒரு காட்சியில் கூட அவரை அழகாகக் காட்டவில்லை.

படத்தில் ஹரிஷ் கல்யாணையும் பின்னுக்குத் தள்ளி பல காட்சிகளில் கைத்தட்டல் வாங்குபவர் விவேக். டாக்டர் கண்ணதாசன் கதாபாத்திரத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவையில் வெளுத்து வாங்குகிறார். சில காட்சிகளில் இருக்கும் ஆபாச இரட்டை அர்த்த வசனங்களைத் தவிர்த்திருக்கலாம்.

ஹரிஷ் அம்மாவாக அனுபமா குமார், பாட்டியாக சச்சு. இந்தக் காலத்து அம்மா, பாட்டியாக இருக்கிறார்கள்.

ஹரிஷ் விந்து தானம் செய்ய முடிவெடுக்கும் காட்சியும், கிளைமாக்சில் அவர் செய்தது சரிதான் எனப் புரிய வைக்கும் காட்சியும் மிக மிக நெகிழ்ச்சியானவை. அதிலும் கிளைமாக்சில் அத்தனை குழந்தைகளைப் பார்த்து தன்யா ஆனந்தப்படுவது அழகோ அழகு.

இடைவேளை வரை முழு கலகலப்புடன் நகரும், இடைவேளைக்குப் பின் கொஞ்சம் சீரியசாகவும் நகர்கிறது. சுவாரசியமான ஒரு படத்தை ரசிக்க நினைப்பவர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.

தாராள பிரபு - உயிர் ஓட்டம்...

 

பட குழுவினர்

தாராள பிரபு

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓