சைரா,Syeraa

சைரா - பட காட்சிகள் ↓

சைரா - சினி விழா ↓

Advertisement
3.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா, சுதீப், விஜய் சேதுபதி
தயாரிப்பு - கொன்னிடலா புரொடக்ஷன் கம்பெனி
இயக்கம் - சுரேந்தர் ரெட்டி
இசை - அமித் திரிவேதி
வெளியான தேதி - அக்டோபர் 1, 2019
நேரம் - 2 மணி நேரம் 50 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5

இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் அந்தந்த பிரதேசங்களில் பல வீரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து தங்களது போராட்டங்களை ஆரம்பித்தார்கள். அப்படி தற்போதைய ஆந்திராவில் கொயில்குன்ட்லா என்ற பிரதேசத்தில் நொசாம் பாளையத்துக்காரராக இருந்த உய்யலவாடா நரசிம்ம ரெட்டி, ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீர மரணம் அடைந்தார். அவரது வாழ்க்கை வரலாறுதான் இந்த சைரா நரசிம்ம ரெட்டி.

சமீப காலங்களில் சுதந்திரப் போராட்டத்தை பற்றிய படங்கள் தென்னிந்திய மொழிகளில் வந்ததேயில்லை. இன்றைய தலைமுறை திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு வீரரின் கதை அருமையான உணர்வுடன் படைத்திருக்கிறது இத்திரைப்படம்.

இயக்குனர் சுரேந்தர் ரெட்டி மற்றும் அவரது தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சேர்ந்து தொழில்நுட்ப ரீதியாகவும் ஒரு தரமான படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தைப் பற்றிப் பேசும் போது அதன் மேக்கிங்கைப் பற்றித்தான் முதலில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு படமாக்கப்பட்ட இடங்கள், அரங்க அமைப்புகள், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, வசனம், சண்டைக் காட்சிகள், விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் என அனைத்துமே சிறப்பாக அமைந்துள்ளன.

ரேநாடு என்றழைக்கப்படும் நாட்டிற்குள் 61 பாளையத்துக்காரர்கள் ஒற்றுமையுடன் இருந்து அவர்களது பிரதேசங்களை ஆண்டு வருகிறார்கள். அவர்களிடமிருந்து வரி வசூலித்தும், அந்தப் பாளையங்களின் செல்வங்களை அடிக்கடி அபகரித்துக் கொண்டும் செல்கிறார்கள் ஆங்கிலேயர்கள். கொயில்குன்ட்லா என்ற இடத்திலிருந்து ஆங்கிலேயர் ஜான்சன் துரை அராஜகம் புரிந்து வருகிறான். அவரைக் கொன்று மக்களிடம் முதன் முதலாய் விடுதலை வேட்கையை ஆரம்பித்து வைக்கிறார் நொசாம் பாளையத்துக்காரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டி. தத்து கொடுக்கப்பட்டதால் அவர் பாளையத்துக்காரரே இல்லை என்ற ஜான்சன் துரையைத்தான் கொல்கிறார் நரசிம்ம ரெட்டி. ஜான்சன் துரையைக் கொன்றதால் 300 ஆங்கிலேய வீரர்கள், பீரங்கிள், துப்பாக்கிகள் என அனுப்பி நரசிம்ம ரெட்டியைக் கொல்ல படையை அனுப்புகிறார் மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னர். மற்ற பாளையத்துக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்க துணியாத போது, தனியாளாக நின்று அந்த 300 படை வீரர்களை ஓட ஓட விரட்டியடிக்கிறார் நரசிம்ம ரெட்டி. அதன்பின் அவர் பின்னால் மற்ற 60 பாளையத்துக்காரர்களும் ஒன்று சேர்ந்து காட்டில் மறைந்து ஆங்கிலேயர்களை எதிர்க்கிறார்கள். பெரும் படையுடன் வரும் ஆங்கிலேயர்கள் நரசிம்ம ரெட்டியையும் அவர்களது கூட்டத்தினரையும் தேடி அலைகிறார்கள். அவர்கள் நரசிம்ம ரெட்டியையும் அவர்களது கூட்டத்தினரையும் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

உய்யலவாடா நரசிம்ம ரெட்டி ஆக சிரஞ்சீவி. கம்பீரமான தோற்றம், கோபமான பார்வை, ஆங்கிலேயர்களின் துப்பாக்கி, பீரங்கி குண்டுகளுக்குப் பயப்படாத வீரம் என அந்தக் கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் சிரஞ்சீவி. ஜான்சன் துரையை அவரது இருப்பிடத்திற்கே சென்று விரட்டியடித்து, தண்ணீருக்கடியில் தலையை சீவி எறியும் காட்சி படம் பார்ப்பவர்களையும் புல்லரிக்க வைக்கும். இடைவேளைக்குப் பின் படம் போர்க்களங்களிலேயே நகர்கிறது. அதன்பின் ஆக்ஷன் காட்சிகளில் ஆவேசம் காட்டி நடித்திருக்கிறார் சிரஞ்சீவி. இந்த வயதிலும் அவருடைய ஆக்ஷன் காட்சிகள் அதிர வைக்கின்றன. அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் படம் பார்க்கும் அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் அந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

படம் முழுவதும் சிரஞ்சீவியின் கதாபாத்திரமான நரசிம்ம ரெட்டி கதாபாத்திரத்தைச் சுற்றியே நகர்வதால் மற்ற கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லாமல் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இருந்தாலும் கிடைத்த காட்சிகளில் நரசிம்ம ரெட்டியையே எதிர்க்கும் அக்கு ராஜுவாக சுதீப் மிரட்டுகிறார். தாடி, மீசை என அவரை அடையாளம் காண்பது கொஞ்சம் கடினமாக உள்ளது. ஆரம்பத்தில் பார்ப்பதற்கு சோனு சூட் போலத் தெரிகிறார். இந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லையே என யோசித்த பின் தான், ஓ...அது சுதீப் என ஞாபகம் வருகிறது. இவரை வில்லனாக நரசிம்ம ரெட்டிக்கு துரோகியாக மாற்றிவிடுவார்களோ என நினைத்தால் அவர்தான் சரியான சமயத்தில் நரசிம்ம ரெட்டிக்கு கை கொடுக்கிறார்.

திடீரென நரசிம்ம ரெட்டியின் போராட்டத்திற்குத் தேடி வந்து கை கொடுக்கிறார் ராஜபாண்டி என்ற தமிழர் விஜய் சேதுபதி. அவர் யார், அவர் பின்னணி என்ன என்பதெல்லாம் படத்தில் காட்டப்படவில்லை. அதனால், அந்தக் கதாபாத்திரம் மீது நமக்கு ஈர்ப்பு அதிகம் வரவில்லை. இருப்பினும் ஒரு காட்சியில், நரசிம்ம ரெட்டி சிரஞ்சீவியை சிலர் கொல்ல வரும் போது, சிம்மாசனத்தில் கம்பீரமாக விஜய் சேதுபதி அமர்ந்திருக்க, அவருக்கருகில் சிரஞ்சீவி வந்து நிற்கிறார். அந்தக் காட்சியை வைத்துப் பார்க்கும் போது, ஏதோ முக்கியமான கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்ட விஜய் சேதுபதியின் ராஜபாண்டி கதாபாத்திரத்தை எடிட்டிங்கில் தூக்கியிருப்பார்களோ என்ற சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

நரசிம்ம ரெட்டியின் மனைவியாக சித்தம்மா கதாபாத்திரத்தில் நயன்தாரா. காதலியாக தமன்னா. இருவருக்குமே அதிகமான காட்சிகள் இல்லை. மண்ணை மீட்கும் போராட்டத்திற்காக கணவன் நரசிம்ம ரெட்டியை அர்ப்பணித்து தியாகியாக உயர்ந்து நிற்கிறது நயன்தாராவின் சித்தம்மா கதாபாத்திரம். நடனப் பெண்ணாக இருந்து நரசிம்ம ரெட்டியைக் காதலித்து மணம் முடிக்காமலேயே மனைவியாக வாழும் லட்சுமி கதாபாத்திரத்தில் தமன்னா. சுதந்திரப் போராட்டத்தில் முதல் தற்கொலைப் படை தாக்குதலைக் கொடுத்த லட்சுமி கதாபாத்திரம் சித்தம்மாவின் கதாபாத்திரத்தைவிட மனதில் இடம் பிடிக்கிறது.

கொயில்குன்ட்லா ஆங்கிலேயே அதிகாரியாக, மெட்ராஸ் பிரசிடென்சி கவர்னராக நடித்தவர்கள் அந்த ஆங்கிலேய ஆணவத்தை யதார்த்தமாய் காட்டியிருக்கிறார்கள்.

மற்ற கதாபாத்திரங்களில் பாளையத்துக்காரராக ஜெகபதி பாபு, ஆங்கிலேயரை எதிர்த்ததால் தன் சிறு மகனைப் பறி கொடுக்கும் ரோகிணி, நரசிம்ம ரெட்டியின் அம்மா லட்சுமி கோபாலசாமி, கொயில்குன்ட்லா மற்றும் சென்னை பாஷ் ஆக நடித்திருப்பவர்கள் கவனம் பெறுகிறார்கள்.

சிறப்புத் தோற்றமாக இருந்தாலும் படம் முழுவதும் வருவது போல அமிதாப்பச்சன் நடித்திருக்கும் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நரசிம்ம ரெட்டியின் குரு கோசாயி வெங்கண்ணாவாக அமிதாப்பச்சன். அமைதியான ஆனால் அழுத்தமான நடிப்பு. ஹிந்தி ரசிகர்களைக் கவர இவரது கதாபாத்திரம் உதவும்.

படத்தை ஆரம்பித்தும், முடித்தும் வைக்கிறார் அனுஷ்கா(அவ்வளவு தான்).

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்ட இப்படத்தின் வசனங்களை விஜய்பாலாஜி எழுதியிருக்கிறார். வசனங்களில் சுதந்திர தாகம் அதிகமாகவே இருக்கிறது. ஆனாலும், சில காட்சிகளில் உதட்டசைவிற்குப் பிறகே வசன ஒலி வருகிறது. அதைக் கொஞ்சம் கவனித்திருக்கலாம். சிரஞ்சீவிக்குப் பொருத்தமான குரல் கொடுத்திருக்கிறார் நடிகர் அரவிந்த்சாமி. அமிதாப்பச்சனுக்கு நிழல்கள் ரவி குரல் கொடுத்திருக்கிறார்.

பாரத நாடு, தமிழ்நாடு என்றெல்லாம் படத்தில் வசனங்கள் இடம் பெறுகின்றன. 1840களில் அப்படியெல்லாம் இல்லை என்பது ஒரு வரலாற்றுப் பிழையாகவே படத்தில் இடம் பெற்றுள்ளது.

படத்தின் பிரம்மாண்டம், படமாக்கம் மற்ற குறைகளை பின்னுக்குத் தள்ளி படத்தை உயிர்ப்புடன் ரசிக்க வைக்கிறது. ஆங்கிலேயர் எதிர்ப்பு போராட்டம் மட்டும்தான் படத்தின் திரைக்கதை. அதிலிருந்து வேறு எந்தவிதமான திருப்பங்களும் படத்தில் இல்லை. சிரஞ்சீவி, தமன்னா இடையிலான காதல் காட்சிகள் இப்போதைய சினிமாவைப் பார்ப்பது போன்று தோன்றுகிறது. சிரஞ்சீவி கதாபாத்திரத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை மற்ற கதாபாத்திரங்களுக்கும் கொஞ்சம் சேர்த்து கொடுத்திருக்கலாம்.

அமித் திரிவேதியின் பாடல்கள் பிரமாதமாக இல்லை. தமிழில் டப்பிங் படப் பாடலைக் கேட்ட உணர்வே உள்ளது. ஜுலியஸ் பாக்கியம் பின்னணி இசை அமைத்திருக்கிறார். இசையாலும் உணர்வுகளை எழுப்பியிருக்கிறார். ரத்தினவேலு ஒளிப்பதிவு படத்தின் மிகப் பெரும் பிளஸ் பாயின்ட். ராஜீவன் அரங்க அமைப்பும் அதற்கு உறுதணை. கமலக்கண்ணனின் விஷுவல் உழைப்பு கற்பனைகளைத் தாண்டிய கற்பனை.

படம் முடிந்த பின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சில முக்கிய வீரர்கள் தலைவர்களைப் பற்றிய புகைப்படம் படத்தில் இடம் பெறுகிறது. அதில் வீரபாண்டிய கட்டபொம்மன் படமும் இருக்கிறது. நரசிம்ம ரெட்டிக்கு நாற்பது வருடங்களுக்கு முன்பாகவே வெள்யைர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்தவர். அப்படியிருக்கையில் நரசிம்ம ரெட்டிதான் முதலில் போரிட்டவர் என்பது போன்ற வசனங்கள் படத்தில் வருகின்றன. நரசிம்ம ரெட்டியின் வீரத்தைப் பார்த்துதான் ஜான்சி ராணி வெள்ளையர்களை எதிர்த்து தீவிரமாகப் போராடினார் என்ற காட்சிகளும் படத்தில் இருக்கின்றன.

பொறுப்பு மறுப்பு என படத்தின் ஆரம்பத்தில் இந்தப் படம் கேட்டறிந்த விதத்திலும் உருவாக்கப்பட்டது என்ற கார்டு இடம் பெறுகிறது. அதனால் இப்படத்தை நிஜமான வாழ்க்கை வரலாறு என்று சொல்வதற்குப் பதிலாக கற்பனை கலந்த படம் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

வரலாற்றுப் படம் என்பதால் பிரதேசங்கள் பற்றி, பாளையங்கள் பற்றி , ஆங்கிலேயர்களின் பிரசிடென்சி பற்றி கொஞ்சம் விளக்கமாக ஆரம்பத்தில் சொல்லியிருக்கலாம். சிறு சிறு குறைகள் இருந்தாலும் ஒரு சிறந்த உருவாக்கத்திற்காக இந்த படத்தைப் பார்க்கலாம்.

சைரா - வீரவணக்கம்

 

பட குழுவினர்

சைரா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓