வண்டி,Vandi

வண்டி - பட காட்சிகள் ↓

வண்டி - சினி விழா ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

நடிப்பு - விதார்த், சாந்தினி, ஹீராம் கார்த்திக், கிஷோர் குமார் மற்றும் பலர்
இயக்கம் - ரஜீஸ் பாலா
இசை - சூரஸ் எஸ். குருப்
தயாரிப்பு - ரூபி பிலிம்ஸ்
வெளியான தேதி - 23 நவம்பர் 2018
நேரம் - 2 மணி நேரம் 28 நிமிடம்
ரேட்டிங் - 3/5

தமிழ் சினிமாவில் சில படங்களைப் பார்க்கும் போது, முற்றிலும் வித்தியாசமான படமாக இருக்கும். அந்த அளவிற்கு அந்தப் படத்தை உருவாக்கியிருப்பார்கள். அப்படி ஒரு வித்தியாசமான படம் தான் வண்டி. இதற்கு முன் இந்தப் படத்தைப் பற்றி யாருமே கேள்விப்பட்டிருப்பார்களா என்பதும் சந்தேகம்தான். இன்று இப்படம் வெளியாகியிருக்கிறது.

ரஜீஸ் பாலா இயக்கத்தில், விதார்த், சாந்தினி, ஹீராம் கார்த்திக், கிஷோர் குமார் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் சமீபத்தில் வந்த சிறிய படங்களில் வித்தியாசமான முயற்சி என்று தாரளமாகப் பாராட்டலாம்.

தேவையற்ற பாடல்கள், தேவையற்ற காட்சிகள் இல்லாமல் திரைக்கதையில் அடுத்தடுத்து திருப்பங்களை வைத்து அதை கடைசியில் கிளைமாக்ஸ் வரை பரபரப்பாக்கி இருக்கிறார்கள்.

பேச்சுலர்களான விதார்த், ஹீராம் கார்த்திக், கிஷோர் குமார் ஒரு அறையில் தங்கியிருக்கும் நண்பர்கள். விதார்த் ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறார். ஹீராம் ரயில்வே ஸ்டேஷனில் பைக் டோக்கன் போடுபவராகவும், கிஷோர் குமார் தட்டு கடையிலும் வேலை பார்க்கிறார்கள். ஏரியா தாதாவான அருள்தாஸ், ஒரு நாள் ஒரு போனை ஒருவரிடம் கொடுக்கச் சொல்லி, அதை விதார்த்திடம் கொடுக்கிறார். ஆனால், அதை விதார்த் ஒரு பெண்ணிடம் பறி கொடுத்துவிடுகிறார். அந்த போனை திரும்பவும் ஒரு வாரத்திற்குள் கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என அருள்தாஸ் சொல்கிறார். அதைக் கண்டுபிடிக்க விதார்த் அவரது நண்பர்களுடன் களம் இறங்குகிறார். இதைச் சுற்றி நடக்கும் வேறு சில கிளைக் கதைகள்தான் இந்த வண்டி.

முக்கியத்தும் இல்லாத காற்றின் மொழி கதாநாயகன் கதாபாத்திரத்தைவிட இந்த வண்டி கதாநாயகன் கதாபாத்திரம்தான் விதார்த்திற்குப் பொருத்தமாக இருக்கிறது. கதாபாத்திரத்திற்கேற்ற இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் அவருடைய நண்பர்களாக நடித்திருக்கும் கிஷோர் குமார், ஹீராம் கார்த்திக் நடிப்பிலும் கூட அவ்வளவு யதார்த்தம்.

படத்தின் கதாநாயகியாக சாந்தினி. பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் கதாபாத்திரம். இவருக்கும் விதார்த்துக்கும் காதல் என்றாலும் படத்தில் காதல் காட்சிகள் இல்லை, டூயட் இல்லை. இருவரது காதலைக் கூட வெளிப்படையாகக் காட்டாமல், விதார்த் மீது சாந்தினி அதிக அக்கறை காட்டுவதையே காதலாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்களுக்குக் கூட குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் இருக்கிறது. சாந்தினியின் அப்பா ரவி, இன்ஸ்பெக்டர் ஜான் விஜய், ஏரியா தாவா அருள் தாஸ், படத்தின் இளம் வில்லன்கள் அருண், நவீன் என அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் முத்திரை பதிக்கிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு தனித்துவத்தை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

படத்தில் இரண்டு சிச்சுவேஷன் பாடல்கள் தான் இருக்கின்றன. அவை கூட இப்படிப்பட்ட படத்திற்குத் தேவையில்லை தான். பின்னணி இசையில் சூரஜ் எஸ். குரூப்பிற்கு திறமையைக் காட்ட நல்ல வாய்ப்பு. முடிந்த அளவிற்கு அதைப் பயன்படுத்தியிருக்கிறார்.

படத்தில் நடக்கும் கிளைக் கதைகள் அனைத்தும் கிளைமாக்சில் மெயின் கதையுடன் ஒரே புள்ளியில் வந்து நிற்கும் திரைக்கதை அமைப்பு, அதை சிறிதும் குழப்பாமல் கொடுத்திருக்கும் இயக்குனர் பாராட்டுக்குரியவர்கள்.

இம்மாதிரியான படங்களை முன்னரே மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்க வேண்டும். இப்படி ஒரு படம் உருவாகியிருக்கிறதா என்பது எத்தனை ரசிகர்களுக்குத் தெரியும் என்று தெரியவில்லை. இன்று இப்படம் வெளியாகியிருக்கிறது என்பதையாவது கொண்டு போய் சேர்த்திருக்க வேண்டும். அப்படி படக்குழு செய்திருந்தால் இந்த வண்டி நன்றாகவே ஓட வாய்ப்புள்ளது.

வண்டி - ஓடணும்...!

 

வண்டி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

வண்டி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓